ராடான் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ராதிகா மற்றும் சரத்குமார் தயாரிக்க, கிஷோர், ஸ்ரியா ரெட்டி, பரத், ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், தர்ஷா குப்தா, கனி குஸ்ருட்டி, பிக் பாஸ் நிரூப், சந்தான பாரதி, கவிதா பாரதி நடிப்பில் வசந்த பாலன் எழுதி இயக்கி , மே 17, 2024 முதல் zee 5 இல் காணக் கிடைக்கும் வலைதளத் தொடர்
வட இந்தியாவில் ஒரு கொடூரக் கூட்டம், முகம் காட்டப்படாத ஒரு பெண்ணை அடித்து ரத்தக் களறியாக்கி சித்திரவதை செய்ய , ஒரு நிலையில் அவள் அவர்களை வெட்டி வீழ்த்திவிட்டு தப்பிக்கிறாள் . ‘நீதி என்பது அதிகாரம் அல்ல ; தண்டனை அல்ல அதே நேரம் இவையாகவும் இருக்கலாம். ஆனால் எளிய மக்களுக்கான சந்தோசம் மற்றும் பாதுகாப்பே நீதி’ என்ற ரீதியில் வசனம் ஒலிக்கிறது .
இங்கே ,
முதலமைச்சர் மீது (கிஷோர்) ஓர் ஊழல் குற்றச் சாட்டு இருக்கிறது . அதை வைத்து அவரை ஜெயிலுக்கு அனுப்பி , தமிழ்நாட்டை வட இந்தியக் கட்சி வசம் ஒப்படைத்து தமிழ்நாட்டை சீரழிக்கத் துடிக்கிறது மேட்டுக் குடி மக்களை பலமாகக் கொண்ட ஒரு வடக்கத்தி லாபி .
முதல்வருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் (ரம்யா நம்பீசன்) அப்பாவைப் பின்பற்றி அரசியலில் இருக்கிறாள் . இளைய மகளின் கணவன் ( பிக் பாஸ் நிரூப்) அரசியல் அதிகாரம், காண்ட்ராக்ட், சம்பாதிப்பு என்று இருக்கிறான்.
முதல்வரோடு ஒன்றாக அரசியல் ஆரம்பித்த பழம் பெரும் அரசியல்வாதி , முதல்வருக்கே மூத்தவர் ஒருவர் ( சந்தான பாரதி)
இவர்கள் ஒவ்வொருவரையும் தனியே வளைத்துப் பிடித்து முதல்வரை காலி செய்ய முயல்கிறது மேட்டுக் குடி ஆட்களைக் கொண்ட வடக்கத்திய லாபி.
இன்னொரு பக்கம் முதல்வர் மீதான ஊழல் குற்றச் சாட்டு வழக்கில் எதிர்தரப்பில் இருக்கும் சிலர் சம்மந்தப்பட்ட இன்னொரு வழக்கு இருப்பதால், அதில் சில முன்னேற்றங்கள் நிகழும் வரை முதல்வர் வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைக்கிறது நீதிமன்றம் .
அந்த வழக்கு முடிந்தால் முதல்வரின் பதவிக்கு ஆபத்துதான் . எனவே அதை சரி செய்யவும் மேட்டுக்குடி – வடக்கத்திய கலப்புக் கும்பல் முயல்கிறது .
முதல்வருக்கு கொற்றவை என்ற ஒரு பெண் பத்திரிகையாளரோடு ( ஸ்ரியா ரெட்டி) விவரிக்க முடியா நட்பு. அந்த பத்திரிகையாளருக்கு ஒரு மகள் . அம்மாவுக்கும் முதல்வருக்கும் கள்ளத் தொடர்பு இருக்கு என்று நம்பும் அவள் அம்மாவை வெறுக்கிறாள் .
இந்த நிலையில் ஒரு பெண் ( கனி குஸ்ருட்டி) பெண் பத்திரிக்கையயாளரை மிரட்டுகிறா
ள் . ஹார்பரில் உள்ள பல கோடி மதிப்புள்ள ஒரு கண்டெய்னரை எடுத்துத் தரச் சொல்கிறாள் . பத்திரிகையாளர் மறுக்க, அவரது மகளைக் கையில் எடுக்கிறாள்
பெண் பத்திரிக்கையாளரின் நதி மூலம் ரிஷி மூலம் அறிய , இன்ஸ்பெக்டர் ஒருவர் (பரத்) தலைமையில் ஒரு குழு இந்தியா முழுக்கப் போகிறது . அதற்குத் தேவைப்படும் அதே வழக்குகளைத் தேடி அங்கே வேறு ஒரு காவல் அதிகாரியும் வட இந்தியா முழுக்கப் போய்க் கொண்டு இருக்கிறார்.
ஒரு நிலையில் இரு தரப்புமே , விவசாயக் கூலித் தொழிலாளி மக்களை கொடுமை செய்யும் நிலச்சுவான்தாரர்களை அடித்துக் கொன்று அவர்கள் பிறப்புறுப்பை அறுத்து வாயில் வைத்து விட்டு வரும் துர்கா என்ற பெண்ணைத் தேடுகிறார்கள்.
மேட்டுக்குடி வடக்கத்தி லாபிக் கும்பல் முதல்வரை வீழ்த்த முயல, முதல்வர் வீட்டில் அடுத்த வாரிசு போட்டி நடக்க துர்க்கா யார் என்ற விஷயம் புலனாகத் துவங்க , நடந்தது என்ன என்பதே இந்த தலைமைச் செயலகம் .
கிச்சன் கேபினெட் என்று கூட பெயர் வைத்து இருக்கலாம் .
தமிழகத்தின் புகழ்பெற்ற சகல திராவிட இயக்க அரசியல் அரசியல் தலைவர்கள் மற்றும் ஆந்திர ராஜசேகர ரெட்டி இவர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள், இன்றைய வடக்கத்தி அரசியலின் சாதி மற்றும் மொழி ரீதியான ஆட்கள் அவர்கள் செயல்பாடுகள் இவற்றை வைத்து செயலகத்தை இயக்கி இருக்கிறார்கள் .
“எது நீதி ?”
“ஊழலை ஒழிக்க சர்வாதிகாரம் வேணும்னு சொல்வாங்க . சர்வாதிகாரம் கிடைச்ச உடனே இவனுக ஊழலை ஒழிக்க மாட்டானுங்க. ஜனநாயகத்தைத்தான் ஒழிப்பானுங்க ” என்று மோடி அரசின் முகத்தில் குத்தும் வசனம்
” உங்களைப் பொறுத்தவை காடுன்னா ரெசார்ட்தான் இல்ல..?”
” i am not acting like your mother ; i am !”
இப்படி தொடர் முழுக்க , வசந்தபாலன் மற்றும் ஜெய மோகன் எழுதி இருக்கும் வசனங்கள் கவனிக்க வைக்கின்றன .
செலவு செய்து சிறப்பாக எடுத்து இருக்கிறது ராடான் மீடியா நிறுவனம்.
பிரம்மிக்க வைக்கும்படி நடித்து இருக்கிறார் கிஷோர் . ஸ்ரியா ரெட்டியின் கேரக்டரும் காட்சிகளும் அருமை .
கேத்தரின் – கொற்றவை தொடர்பான காட்சிகள் நெகிழ்ச்சி .
கனி குஸ்ருட்டி சிறப்பாக நடித்துள்ளார். சந்தான பாரதி பொருத்தமாக இருக்கிறார் . எனினும் மற்ற பல கேரக்டர்களுக்கான நடிக நடிகையர் தேர்வில் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம் .
கொஞ்சம் அக்கறையாக எழுதி இருந்தால் சந்தன பாரதி கேரக்டரை வைத்து பட்டையைக் கிளப்பி இருக்கலாம் .
ரவிசங்கரின் ஒளிப்பதிவு நியாயம் செய்து இருக்கிறது . ஜிப்ரனின் இசையும் நேர்த்தி
படமாக்கலில் வசந்தபாலனின் சிரத்தை தெரிகிறது .
எனினும் திரைக்கதை பொறுமையை சோதிக்கிறது . முதல் இரண்டு எபிசோடுகள் ரொம்பக் கொடுமை . மூன்றாவது எபிசோடில் ஸ்ரியா ரெட்டியின் கேரக்டர் முக்கியத்துவம் பெற்ற பிறகே கொஞ்சம் பரவாயில்லை என்ற நிலைக்கு வருகிறது .
அதே நேர எட்டு எபிசோடும் முடிவதற்குள் ரொம்ப சோதனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது .
தேவை இல்லாமல் நீளும் காட்சிகள் … எந்த காட்சியில் எந்த எபிசோட் முடியுமோ என்ற அவர்களுக்கு தெரியாது என்பது போல ஒவ்வொரு காட்சியிலும் ஏகப்பட்ட பில்டப்புகள் … நமக்கே கத்தரிக்கோலை எடுத்துக் கொண்டு ஒரு ரவுண்டு வரலாமா என்ற வெறி வருகிறது.
எதாவது ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவரை மையப்படுத்தி அதைப் புரியும்படியும் சொல்லி மற்றவர்களை அதைச் சுற்றி சுழல விட்டு கெத்தாக ஒரு ஸ்கிரிப்ட் செய்து இருந்தால் நன்றாக இருந்திற்கும் . ஆனால் இவர்களுக்கு எல்லார்கிட்டயும் நல்ல பேரு வாங்கணும் என்ற பயம் போல
விளைவு ? தொடர் முடியும்போது , ” ரொம்ப நன்றிங்க .. இந்த உதவியை ஆயுசுக்கும் மறக்க மாட்டோம் ” என்று சொல்ல வைக்கிறார்கள்