எஸ் ஜே எஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க, ஜிதேஷ் மற்றும் ரியா நக்ஷத்ரா இணை நடிப்பில் பத்மராஜ் இயக்கி இருக்கும் படம் தலக்கோணம் . செங்கோணமாக நிமிர்ந்து நிற்கிறதா , படம்? பார்க்கலாம்.
பல்வேறு கல்லூரி மாணவர்கள் சேர்ந்த ஒரு டீம் தலக்கோணம் காட்டுக்கு டூர் போகிறது . அதில் அமைச்சர் (கோட்டா சீனிவாசராவ்) ஒருவரின் மகளும்( ரியா நக்ஷத்ரா) அடக்கம்.
திடீரென அமைச்சரின் மனைவி மர்ம மரணம் அடைய , அதை மகளுக்கு தெரிவிக்கக் கூட முடியாத நிலையில் தகனம் நடக்கிறது.அமைச்சருக்கு ஒரே மகள்தான் என்ற நிலையில் அமைச்சரின் பினாமியான ஒரு கைத்தடி (நம்பி ராஜன்) ஆள் அனுப்பி அமைச்சரின் மகளை கொல்ல முயல்கிறான்.
இதற்கிடையே ஜிந்தா என்ற காட்டுத் தீவிரவாதி , சிறையில் இருக்கும் தன் தம்பியை விடுதலை செய்ய நிபந்தனை வைத்து அமைச்சரின் மகளை காட்டில் கடத்துகிறான். அவளைக் காப்பாற்ற வந்த சக மாணவனும் (நாயகன் ஜிதேஷ்) கடத்தப் படுகிறான்.
அமைச்சரின் பினாமி ஜிந்தாவின் தம்பியை ஜெயிலில் கொன்று விட்டு அந்த தகவலை ஜிந்தாவுக்கு அனுப்புகிறான் . இதனால் ஜிந்தாவே கோபப்பட்டு அந்த பெண்ணை கொல்வான் என்பது பினாமியின் திட்டம். தகவல் ஜிந்தாவுக்கு போய் சேர்வதற்குள் அமைச்சரின் மகளும் அந்த மாணவனும் தப்பிக்கிறார்கள் . எனினும் காட்டில் அவர்களை கொல்ல ஜிந்தாவின் படை விரட்டுகிறது .
பினாமி அனுப்பிய அடியாட்களும் அமைச்சர் மகளை கொல்ல தனி குழுவாக காட்டுக்குள் அலைகிறார்கள். இந்த நிலையில் அவளுக்கும் அவனுக்கும் காதல் வருகிறது.
உண்மையில் அமைச்சரின் மகளை பினாமி கொல்ல முயல்வதற்குப் பின்னால் அமைச்சரும் இருப்பது கூறப்படுகிறது. தன் மனைவியின் நடத்தை மீதான கோபத்தால் அவளை கொன்றதும் அமைச்சர்தான் என்பதும் , தனக்கு பிறந்த மகள் இல்லை என்ற எண்ணத்தில் மகளையும் கொல்ல முயல்வதும் உணர்த்தப்படுகிறது .
ஒரு நிலையில் மனைவி மீது அநியாயமாக சந்தேகப்பட்டு கொன்று விட்டதை உணரும் அமைச்சர், மகளையாவது காப்பாற்ற விரும்பி, அவளை கொலை செய்ய நியமிக்கப்பட்ட கொலையாளிகளை தொடர்பு கொண்டு தடுக்க முயல , அது முடியாமல் போகிறது . எனவே மகளை காக்க அமைச்சரே காட்டுக்கு விரைகிறார் .
அமைச்சர் மகளை சந்தித்தாரா? அப்பாவை மகள் ஏற்றுக் கொண்டாளா? ஜிந்தா, பினாமி அனுப்பிய அடியாட்கள் இவர்களால் துரத்தப்படும் காதலர்கள் பிழைத்தார்களா ….இல்லையா?
— என்பதே தலக்கோணம்.
காடு தொடர்பான காட்சிகளை கடுமையாக உழைத்து, அருமையாக படமாக்கி இருக்கிறார்கள். . நாமே காட்டுக்குள் வாழும் உணர்வு ஏற்படுகிறது.
திரைக்கதையில் அடுத்தடுத்து வரும் பல திருப்பங்கள் எதிர்பார்க்கும்படி இருந்தாலும் சுவாரஸ்யமாகவும் இருக்கின்றன.
நிரம்பி வழியும் தடாகமாய் பாட்டுக்கு அபிநய ஸ்ரீ போடும் அதிரடி குத்தாட்டம் ரசிக்க வைக்கிறது . பொதுவில் பாடல்கள் இசை இரண்டும் பரவாயில்லை .
கதாநாயகன் ஜிதேஷ் துடிப்பாக நடித்து இருக்கிறார். காட்டில் பினாமியின் அடியாளிடம் போடும் ஒத்தைக்கு ஒத்தை சண்டையில் அசத்தி இருக்கிறார். பாடல் காட்சிகளில் உற்சாகம் கொப்பளிக்க ஆடி இருக்கிறார்.
ரியா நட்சத்திராவின் முகத்தில் இருக்கும் குழந்தைத்தனத்தையும் உடம்பில் இருக்கும் குழந்தை உருவாக்கும் தனத்தையும் சரியாக பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.
அமைச்சர் கேரக்டரில் கோட்டாவை பார்க்கும்போதே இது வில்லத்தனத்தின் கோட்டா என்பதால், மனைவியை கொன்றது அவர்தான் என்பதும் மகளை கொலை செய்ய முயல்வதும் அவராகத்தான் இருக்கும் என்பதும் புரிந்து விடுகிறது. இதுவரை வில்லனாகவே நடிக்காத ஒரு நடிகர் நடித்திருக்க வேண்டிய கதாபாத்திரம் அது .
கடைசிக் காட்சிகளில் உயிர்ப்பு இருக்கிறது .
தலக்கோணம் … கேமரா கோணம்