ஏ.ஜே.பிரதர்ஸ் வழங்க மயில் மாஸ் மீடியா தயாரிப்பில் ராஜேஷ் மற்றும் கலை அனாமிகா ஜோடியாக நடிக்க , கதை திரைக்கதை வசனம் எழுதி பாண்டியன் என்பவர் இயக்கி இருக்கும் படம் தமிழ்ச் செல்வனும் கலைச் செல்வியும் .
பாராட்ட வைக்கிறார்களா இருவரும் என்று பார்ப்போம் .
காஞ்சிபுரத்தில் நர்ஸாகப் பணிபுரியும் மிக நல்ல பெண்ணான தமிழ்ச் செல்வி (கலை அனாமிகா ) தனது தோழிக்கு செல் போனில் விடுக்கும் அழைப்பு தவறுதலாக ராணிப் பேட்டையில் காசி என்ற ரவுடியிடம் (யோகி ராம்) அடியாளாக வேலை பார்க்கும் தமிழ்ச் செல்வனுக்கு (ராஜேஷ்) போகிறது . அப்படியே இருவருக்கும் நட்பு ஏற்படுகிறது .
தமிழ்ச் செல்வியின் தோழி ஒருத்தியின் காதலை மறுக்கும் அந்த தோழியின் தந்தை, வேறு ஒருவனோடு திருமணம் நிச்சயம் செய்ய, தனது தோழியை அவளது காதலனோடு சேர்த்து வைக்கும்படி தமிழ்ச் செல்வனிடம் கலைச் செல்வி கேட்கிறாள் . அவனும் அதை செய்து முடிக்க , கலைச் செல்விக்கு தமிழ்ச் செல்வன் மீது காதல் வருகிறது. அவன் ரவுடி என்று தெரிந்த பின்பும் அந்தக் காதல் தொடர்கிறது .
ஒரு நிலையில் ரவுடித் தொழிலை விட்டு விட்டு திருந்தி, தமிழ்ச் செல்வியை திருமணம் செய்து கொண்டு வாழ தமிழ்ச் செல்வன் முடிவெடுக்க. அவனிடம் காசி “கடைசியாக நான் சொல்லும் ஒரு நபரை கொலை செய்து விடு . உனக்கு பெரும்பணம் தருகிறேன் . அதோடு இந்த தொழிலை முடித்துக் கொண்டு எங்காவது போய் உன் காதலியோடு சந்தோஷமாக வாழ்” என்று சொல்கிறான். அவன் கொலை செய்ய சொல்லித் தரும் போட்டோவில் உள்ள நபர்….. தமிழ்ச் செல்வியேதான்.
காரணம்?
தனக்கு சொந்தமான மருத்துவமனையில் இறந்து போகும் இளம்பெண்களின் பிணத்தோடு உடலுறவு கொள்ளும் சைக்கோத்தனம் கொண்ட ஒரு டாக்டர், கலைச் செல்வியின் இறந்து போன தோழி ஒருத்தியையும் அப்படிச் செய்ய , அதை எதிர்பாராமல் பார்த்து விடும் கலைச் செல்வி அதை வீடியோ எடுத்து செய்தியாக்க , போலீசால் கைது செய்யப்பட்டு மானம், அந்தஸ்து , தொழில் செய்யும் உரிமை அனைத்தையும் இழக்கிறார் அந்த டாக்டர் . பதிலுக்கு அவர் கலைச் செல்வியைக் கொல்ல பெரும்பணம் கொடுத்து ஏற்பாடு செய்கிறார்.
கலைச் செல்வியின் பிறந்த நாள் அன்று தமிழ்ச் செல்வன் கலைச் செல்வி இருவரும் முதன் முதலில் நேரில் சந்திக்கலாம் என்று முடிவெடுத்து இருந்ததால், கலைச் செல்வியின் முகம் தெரியாத தமிழ்ச் செல்வன், கலைச் செல்வியோடு வாழ்வதற்கு பணம் சம்பாதிக்க , அந்த கலைச் செல்வியையே கொலை செய்ய கிளம்புகிறான்.
ஒரு நிலையில் உண்மை உணரும் காசி, தமிழ்ச் செல்வனிடம் உண்மையை சொல்லி தடுத்து நிறுத்த முயல செல் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்ட நிலையில் அது முடியாமல் போக , கலைச் செல்வியை கண்டு பிடிக்கும் தமிழ்செல்வன் அவளை கட்டி வைத்து அடிக்கப் போக … கடைசியில் கலைச் செல்வியும் அவள் காதலும் உயிர் பிழைத்தனரா ? இல்லை அந்தக் காதல் கத்திக் கதறிக் கெஞ்சி ரத்தக் குளத்தில் மூச்சுத் திணறிச் செத்ததா என்பதே இந்தப் படம் .
கதாபாத்திரங்களுக்கும் படத்துக்கும் நல்ல தமிழ்ப் பெயர் வைத்த படக் குழுவுக்கு பாராட்டுக்கள்.
கலை அனாமிகா , ராஜேஷ் இருவரும் எளிமையாக யதார்த்தமாக நடித்துள்ளனர் . கலை அனாமிகாவுக்கு பின்னணிக் குரல் கொடுத்தவர் அற்புதமாக பேசி இருக்கிறார் . கதாபாத்திரங்களுக்கான தேர்வில் ஒரு வித்தியாசமும் மண் சார்ந்த தன்மையும் பாராட்டுக்குரியது.
கார் சேசிங் காட்சிகளை படு வேகத்தில் காட்டி நிஜ பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள். கடைசி இருபது நிமிடம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது .
படத்தின் முக்கிய கதாபாத்திரங்களுக்கு ஏற்படும் ஒரு பிரச்னையை, சிக்கலை முன்னரே ரசிகர்களுக்கு விளக்கமாக சொல்லி அதன் மீதே திரைக்கதை பயணிக்கும்போது…. அதில் இருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள் என்று சொல்வதுதான் வணிக ரீதியான சினிமாவுக்கு பொருத்தமான பாதை .
அல்லது இனியெல்லாம் சுகமே என்று எல்லோரும் நம்பும்போது, ஒரு எதிர்பாராத – ஆனால் ஏற்றுக் கொள்ள முடிகிற ஒரு விஷயம்,
கதாபாத்திரம் அல்லது சம்பவத்தால், முக்கிய கதாபாத்திரங்களுக்கு ஒரு சிக்கல் நேர்ந்து, சோக முடிவுக்கு ஆளானார்கள் என்பது ரசிகர்களின் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வெற்றிப் படத்துக்கு வித்திடும்.
அந்த உடலுக்கு இந்த தலையையும் இந்த உடலுக்கு இந்த தலையையும் பொருத்தினால் பலன் கிடைக்காது
இளம் திரைக்கதை ஆசிரியர்களும் இயக்குனர்களும் இதை புரிந்து கொள்ள வேண்டும் .
தமிழ்ச் செல்வனும் கலைச் செல்வியும் …. அ, ஆ , இ , ஈ !