ஸ்ரீ கிரீன் புரடக்ஷன் சார்பில் சரவணன் வெளியிட, கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச் செழியன் மற்றும் உண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் இருவரும் தயாரிக்க,
தனுஷ், சமந்தா, ஏமி ஜாக்சன் , கே. எஸ். ரவிக்குமார் நடிப்பில், வேலை இல்லாப் பட்டதாரி படத்தின் மூலம் இயக்குனராக வெற்றி பெற்ற ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இரண்டாவதாக இயக்கி இருக்கும் படம் தங்க மகன்.
நடுத்தர வருவாய்ப் பிரிவைச் சேர்ந்த நகர்ப்புற இளைஞன் தமிழ் (தனுஷ் ). இன்கம்டாக்ஸ் துறையில் பணியாற்றும் — ஞாபக மறதிப் பிரச்னை உள்ள அப்பா (கே எஸ் ரவிகுமார்) மற்றும் அம்மா (ராதிகா) என்ற சிறு குடும்பத்தை உடைய தமிழுக்கு இரண்டு நண்பர்கள் .
ஒருவன் அப்பாவின் தங்கையான அத்தையின் மகன் (ஆதித்) இன்னொருவன் நட்பால் மட்டுமே நெருங்கியவன் (சதீஷ் )
மயிலாப்பூர் பிராமணப் பெண்ணுக்கும் இங்கிலாந்து வெள்ளைக்காரர் ஒருவருக்கும் பிறந்த ஹேமா டிஸௌஸா (ஏமி ஜாக்சன்) என்ற வெள்ளை வெளேர் பெண் மீது தனுஷுக்கு காதல் . நட்பால் மட்டும் நெருங்கிய நண்பனுக்கு ஹேமாவின் தோழி மீது காதல். கோயில் குளம் ரோடு மேடு என்று அலைந்து திரிந்து அந்த பெண்களை பின் தொடர்கிறார்கள் இருவரும்.
அத்தை மகனுக்கு இந்த ‘பெண் விரட்டு’ விவகாரம் தெரிந்தால் வீட்டுக்கு தகவல் போய் விடும் என்று பயந்து அவனுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால் அத்தை பையனோ , தமிழ் தன்னை ஒதுக்கி விட்டு இன்னொரு நண்பனோடு மட்டும் நெருங்குவதாக நினைத்துக் கொள்கிறான் .
தமிழுக்கு மற்றும் அவன் நண்பனுக்கு முறையே ஹேமா மற்றும் அவளது தோழியின் காதல் கிடைக்கிறது . அதே நேரம் விஷயம் அறிந்த அத்தைப் பையன் , நட்பில் தான் முழுக்க புறக்கணிப்பட்டதாக உணர்ந்து தமிழோடு பகையாகிறான் .
அந்தப் பகையால் மன அமைதி இன்றி தமிழ் இருக்கும் நிலையில், ஹேமா தமிழிடம் “கல்யாணத்துக்குப் பிறகு உன் அம்மா அப்பாவை இப்போது இருக்கும் வீட்டிலேயே விட்டு விட்டு, தன்னோடு தனி வீட்டில் வசிக்க வர வேண்டும்” என்று சொல்ல … வார்த்தை தடித்து சண்டை வந்து காதல் உடைகிறது .
அந்த நிலையில் அத்தை மகனுக்கும் ஹேமாவுக்கும் கல்யாணப் பேச்சு வர , அவன் தமிழின் உறவினன் என்பதை அறியாமலேயே கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்கிறாள் ஹேமா . திருமணமும் நடக்கிறது .
தமிழுக்கு பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம் மூலம் மனைவியாக வரும் பெண் (சமந்தா) ஆகச் சிறந்த தமிழ்நாட்டு மருமகளாக இருக்கிறாள்.
இந்த நிலையில் தமிழின் தந்தை , இன்கம்டாக்ஸ் அலுவலகத்தில் ஒரு ஃபைலை தொலைத்து விட்டு பல கோடி ரூபாயையும் திருடிவிட்டதாக புகார் வர , அவர் தற்கொலை செய்து கொள்கிறார் .
மிக நேர்மையான — ஆனால் ஞாபக மறதி உள்ள — தன் தந்தையின் மீதான அவச் சொல்லும் அதனால் ஏற்படும் பணி இழப்பும் தமிழின் குடும்பத்தை மிகுந்த ஏழ்மை நிலைக்கு ஆளாக்குகிறது.
உண்மையை கண்டு பிடித்து அப்பாவின் மீதான அவப் பெயரை நீக்க முயலும் தமிழுக்கு, உறவுகளும் உலகமும் தரும் அதிர்ச்சிகளும் சவால்களும்…. அவற்றை தமிழ் எப்படி எதிர்கொண்டான் என்பதுவுமே தங்க மகன் .
ரஜினியின் தங்க மகன் முழுக்க முழுக்க கமர்ஷியலான மசாலாவான அஜால் குஜால் சினிமா . மாறாக ரஜினியின் மருமகனின் தங்க மகன் பொறுப்புள்ள குடும்பக் கதை . அந்த விதத்தில் இந்த படத்துக்கே பெயர்ப் பொருத்தம் அதிகம் .
எமி ஜாக்சன் தனுஷ் இடையிலான உதட்டு முத்தக் காதல் காட்சிகளிலும் தனுஷ் சமந்தா இடையிலான தாம்பதயக் காதல் காட்சிகளிலும் இருக்கும் அன்னியோன்யம் கெமிஸ்ட்ரி பயாலஜியை எல்லாம் மீறி,
சைதாப்பேட்டை பாலத்தின் மேலேறிய செம்பரப் பாக்கம் தண்ணீர் மாதிரி தாவித் தவ்விக் குதிக்கிறது .
படத்தின் கிளிப்பசுமை ஏரியாவும் (சரி.. கிளிகள் பசுமை ) இதுதான் .
”தமிழை தோற்கடிக்க முடியாது .தமிழ் தோற்கக் கூடாது” என்று தனுஷ் அடிக்கும் பஞ்சுகள் கம்பீர கனம் என்றால், எமி ஜாக்சன் ஒரு காட்சியில் ”தமிழுக்கும் அமுதென்று பேர்” பாடலைப் பாடுவது சுகமான கனம் மற்றும் கணம்.
குடும்ப வறுமை சம்மந்தமான காட்சிகளில் ரஜினி நடித்த ‘ஆறில் இருந்து அறுபது வரை’ படத்தின் மேக்கிங்கை அளவு கோலாக வைத்துக் கொண்டார்களோ என்று நினைக்கும் அளவுக்கு, உடைகளும் பின்னணியும் இருக்கிறது.
குடித்து விட்டு வந்து பேசும் காட்சியில் ‘நடிகர்’ தனுஷ் ”உள்ளேன் அய்யா” சொல்கிறார் . வெள்ளைப் பூனைக்குட்டியின் வெஸ்டர்ன் பாணியிலான சிரிப்பில் ஏமி ”ஏமி சார் , பாக உன்னாவா ?” என்கிறார்
ஒரேயடியாகக் குடும்பக் குத்து விளக்காக்கி குத்த வைத்து விட்டார்கள் சமந்தாவை . சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்களில் கவர்கிறார். சதீஷ் ஷூட்டிங்கில் பேசிய வசனங்களை விட டப்பிங்கில் சேர்த்த வசனங்கள் பெட்டர் .
காதல் களம் , பிரிவதற்கான காரணம் இவற்றில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம் . இன்கம் டாக்ஸ் ஆபீஸ் சம்மந்தப்பட்ட விசயங்களில் இன்னும் நம்பகத்தன்மையை ஏற்படுத்தி இருக்கலாம்.
அப்பாவின் தங்கை மகன் போன்ற உறவுகளை கையாண்ட விதத்தில் இன்னும் வாழ்வியலைக் கொண்டு வந்திருக்கலாம். கதை முடிந்த பிறகு ஆக்ஷன் வேண்டும் என்பதற்காகவே படத்தை நீட்டிய உணர்வு ஏற்படாமல் திரைக்கதையை கொண்டு போயிருக்கலாம் .
தங்க மகன் …. ஏழை குடும்பஸ்தன் .