‘தனி ஒருவன்’ ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் தணியாத ஏக்கம்

Thani Oruvan Movie Stills

1987-ல் வெளியான ‘வள்ளல்’ படத்தின் மூலமாக ஒளிப்பதிவாளராக அறிமுகமான ராம்ஜி , தொடர்ந்து  ‘டும் டும் டும்’, ‘மெளனம் பேசியதே’, ‘ராம்’, ‘பருத்தி வீரன்’,  ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’, ‘இரண்டாம் உலகம்’ உட்பட பல படங்களுக்கு மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளவர்.

வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் தனி ஒருவன் படத்தின் ஒளிப்பதிவாளரும் இவரே . தனி ஒருவன் படத்தின் வெற்றி  ராம்ஜிக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்து இருக்கிறது . இதுவரை அதிகம் பேட்டி கொடுக்காத ராம்ஜி தனி ஒருவன் வெற்றி தந்த உற்சாகத்தில் மனம் விட்டுப் பேசுகிறார்  .

பொதுவாக ஸ்கிரிப்ட் பிடித்திருந்தால் மட்டும்தான் நான் படம் செய்ய ஒத்துக் கொள்வேன். அதனால்தான் இத்தனையாண்டு கால சினிமா வாழ்க்கையில் எண்ணிச் சொல்வது போலத்தான் சில படங்களில் பணியாற்றியிருக்கிறேன்.  சில படங்கள் என்றாலும் ன்றாலும் அவை என் பெயரைச் சொல்லி தனித்து நிற்க வேண்டும் என்று விரும்புவேன்.

தனி ஒருவன் படம் நிச்சயமாக ஜெயிக்கும் என்பது ஆரம்பத்த்திலேயே எனக்குத் தெரிந்தது. அதனால்தான் இந்தப் படத்தில் வேலை செய்யவும் நான் ஒத்துக் கொண்டேன்.

படத்தின் கதை அப்படிப்பட்டது. அதோடு ட்ரீட்மெண்ட்டும் தனி ஸ்டைலில் இருந்ததால் நிச்சயம் இது தனித்து பேசப்படும்னு நினைத்தேன். அப்படியே நடந்துவிட்டது. மோகன் ராஜா சிறந்த இயக்குநர். இவருடன் பணியாற்றியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறும் ராம்ஜிக்கு ஒரு பெருமை உண்டு .

பிலிமில் உருவான கடைசிப் படம் தனி ஒருவன் . அதன் ஒளிப்பதிவாளர் ராம்ஜி என்று நாளை குறிப்பிட்டு எழுதப் போகிறார்கள்

அது பற்றிக் கூறும் ராம்ஜி “என்னுடைய முதல் படமான  ‘வள்ளல்’ முதல்கொண்டு  ‘தனி ஒருவன்’ படம்வரை பிலிமில்தான் ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். ‘இனி பிலிம் வருமா, வராதா என்று தெரியவில்லை.

இந்தப் படத்தின்போதுகூட பிலிம் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. கடைசிக் கட்டத்தில் நாங்கள் எதிர்பார்த்த அளவு பிலிம் கிடைக்கவில்லை. அதனால், ஜெயம்ரவி, நயன்தாராவின் டூயட் பாட்டு, கிளைமாக்ஸ் காட்சிகள் போன்ற ஒரு சில காட்சிகளை டிஜிட்டலில்தான் படமாக்கினோம்.

ramji 2

படத்தின் கதைப்படி நாயகன், நாயகி இருவரையும் விட கதையும், திரைக்கதையும்தான் முக்கியமானதாக இருந்தது ஆகவே காட்சிகளின் வேகத்தின்போது அவர்களுடைய கேரக்டர் ஸ்கெட்ச்சின்படி கூடுதல் அழகு தேவைப்படவில்லை. அதனால் அதில் நாங்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. 

படத்தில் நயன்தாராவை அழகாக காட்டவில்லையே என்று பலரும் என்னிடத்தில் வருத்தப்பட்டார்கள்   அதுதான் காரணம் . மற்றபடி நயன்தாரா எப்போதும் போல அழகாகத்தான் இருந்தார்.”என்கிறார் . 

தான் ஒளிப்பதிவு செய்த ஆயிரத்தில் ஒருவன் படம் வெற்றி பெறாத ஏக்கம் ராம்ஜியின் கண்களில் !

” ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் தோல்வி என்னை ரொம்பவே அப்செட்டாக்கியது. மூணு வருஷம் ரொம்பக் கஷ்டப்பட்டு உருவாக்கின படம் இது. செல்வா என்கிட்ட கதை சொல்லும்போது இது தமிழ்ச் சினிமால ஒரு முக்கியமான இடத்தைப் பிடிக்கப் போகிறது என்பதை மட்டும் புரிஞ்சுக்கிட்டேன். அதனால்தான் மூன்று வருடமானாலும் பரவாயில்லைன்னு அந்தப் படத்தில் வேலை செய்தேன்.

அட, படம் வெளிவந்த பிறகு ஒளிப்பதிவு நன்றாக இல்லை என்று சொல்லியிருந்தால்கூட சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனால், அந்தப் படத்தை பற்றி யாரும் ஒரு கருத்தும் கூறவில்லை. அப்படியே அனாதையாக விட்டுவிட்டார்கள். மனோபாலா ஒருவர் மட்டுமே எனக்கு போன் செய்து, “படம் எனக்குப் பிடிக்கலை. ஆனால் உங்க வொர்க் ரொம்ப நல்லாயிருக்கு”ன்னு பாராட்டினார்.

3 வருடங்கள் உழைத்த படத்தை நல்ல முயற்சி என்றுகூட யாரும் சொல்லவில்லை. அப்போதுதான் எனக்கு மிகவும் வலித்தது. ஆனால் இப்போது ‘பாகுபலி’ படம் வந்த பின்புதான் சில நாட்களாக ‘ஆயிரத்தில் ஒருவனைப்’ பற்றிப் பேசுகிறார்கள். எழுதுகிறார்கள்.

கதை நல்ல கதைதான். ஆனால் பிரசண்டேஷனில் ஏதோ தவறு நடந்துவிட்டதாக உணர்கிறேன். அல்லது மக்களுக்கு செல்வா சொன்னது புரியவில்லையோ என்றும் தெரியவில்லை.. ஆனாலும் இந்தப் படத்தில் நான் வேலை செய்தது என் வாழ்நாளில் மறக்க முடியாது.” என்கிறார்.

M Raja & Cinematographer Ramji @ Thani Oruvan Movie Shooting Spot Stills

டைரக்டர்களை வகை பிரிக்கிறார் ராம்ஜி ” இத்தனை இயக்குநர்களிடத்தில் வேலை செய்தாலும் ஒவ்வொருவரும் ஒரு ரகம். அமீர் தேவையில்லாமல் ஒரு ஷாட்கூட எடுக்க மாட்டார். இதைப் பயன்படுத்தப் போகிறோம் என்று தெரிந்தால் மட்டுமே அதை படமாக்கச் சொல்வார்.

ஆனால் செல்வராகவன் அப்படியில்லை. இப்படியும் எடுத்துப் பார்ப்போம். எது நன்றாக வருகிறதோ அதை வைத்துக் கொள்வோம் என்று சொல்லி ஒரு காட்சிக்கு பல ஷாட்டுகளை பல கோணங்களில் எடுக்கச் சொல்வார். என்னைக் கேட்டால் இரண்டுமே தவறில்லைதான்.” என்பது இவரது கருத்து.

அடுத்த கட்டத்திட்டம் என்ன என்று கேட்டால் “எனக்கு அமைந்த கதைகள் எல்லாம் நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும் படங்களாகவே அமைந்துவிட்டது. இனி வருடத்துக்கு பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய முடிவெடுத்திருக்கிறேன். புதிய இயக்குநர், புதிய கம்பெனி என்றெல்லாம் நான் பார்ப்பதில்லை. எனக்குக் கதை பிடிக்கணும். பிடித்திருந்தால் நாளைக்கே ஷூட்டிங் என்றாலும் உடனேயே ரெடி என்பேன்.

இதுவரையிலும் சினிமாவிற்காக உழைத்தது போதும். இனிமேல் உன் குடும்பத்திற்காக உழைத்துக் கொள்’ என்று அண்ணன் சிவக்குமார் எனக்கு அட்வைஸ் செய்துள்ளார். இதுவும் நல்லதுதான் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்..” என்கிறார் ராம்ஜி .

அப்போ அடுத்தகட்டத் திட்டத்தில் குடும்ப நலத்திட்டமும் இருக்கு !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →