தனி ஒருவன் @ விமர்சனம்

DSC_2700

ஏ ஜி எஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்க, ஜெயம் ரவி , நயன்தாரா, அரவிந்த்சாமி நடிப்பில்,  கதை திரைக்கதை எழுதி, எழுத்தாளர்கள் சுபாவுடன் இணைந்து வசனம் எழுதி ஜெயம் ராஜா என்கிற மோகன்ராஜா இயக்கி இருக்கும் படம் தனி ஒருவன் . இந்தத் தனி ஒருவன் எவன் ? பார்க்கலாம் .

நாட்டில் நடைபெறும் பல்லாயிரக்கணக்கான குற்றங்கள்! குற்றம் செய்யும் ஒவ்வொரு குழுக்களையும் வழி நடத்தவோ பின் புலமாக இருந்து பலன் பெறவோ  நபர்கள் இருக்கிறார்கள். அந்த நபர்கள் சில ஆயிரங்களுக்குள் ! அந்த சில ஆயிரம் நபர்களும் கூட குழுக்களாக இயங்க , அந்த ஒவ்வொரு குழுவுக்கும் பின் பலமாக சில நபர்கள் இருக்கிறார்கள். அந்த நபர்களும் குழுவாக இயங்க ….

இப்படி ஆணிவேரை தேடிக் கொண்டே போனால் மூன்று முக்கிய நபர்கள் . அந்த மூன்று முக்கிய நபர்களையும் இயக்கும் ஒருவன் .

DSC_0639

ஓர் அரசியல் கட்சியின் அப்பாவித் தொண்டனான முட்டாள் அப்பனுக்கு பிள்ளையாகப் பிறந்து, சின்ன வயதிலேயே ஒரு கட்சியின் தலைவரான   அரசியல்வாதி செய்த கொலையை தான் ஏற்று,  அதற்கு பதிலாக தனது அப்பாவை எம் எல் ஏ ஆக்கி

பழனி என்கிற பெயரை சித்தார்த் என்று மாற்றிக் கொண்டு (அரவிந்த்சாமி) வளர்ந்து, அறிவாளி விஞ்ஞானியாக ஆனால் அயோக்கியத்தனத்தின் மொத்த  வடிவமாக விஸ்வரூபம் எடுத்து  இந்தியாவின் ஒட்டுமொத்த குற்றங்களுக்கும் சூத்திரதாரியாக விளங்குகிறான் அந்தத் தனி ஒருவன் .

சமூகம் பல்வேறு விதங்களிலும் பாதிக்கப்படுவதையும் அநியாயமாக மக்கள் துன்பம் இழப்பு நஷ்டங்களுக்கு ஆளாவதையும் கண்டு வெகுண்டு எழும் ஓர் இளைஞன் ,  ஐ பி எஸ் பயிற்சியின் போதே  தன்னை கடமை தவறாத போலீஸ் அதிகாரியாக நினைத்து செயல்படும் இவன்  இன்னொரு தனி ஒருவன் (ஜெயம் ரவி )

DSC_9101

சமூகத்தில்  நடைபெறும் மொத்தக் குற்றங்களுக்கும் காரணமான –  முகம் அறியாத அந்த – முக்கியக் குற்றவாளியை தேடி தனது காதலி (நயன்தாரா) மற்றும் சக ஐ பி எஸ் நண்பர்கள்  துணையோடு  கிளம்புகிறான் போலீஸ் அதிகாரி இளைஞன் .

அராஜக அரசாங்கத்தை நடத்தும்  அந்தத் தனி ஒருவனை  ஒரு சில நண்பர்கள் துணையோடு இந்த நேர்மையான தனி ஒருவன் எதிர்கொள்ளும்போது ஏற்படும் அதகள ரணகள போர்க்களமே தனி ஒருவன் படம் .

படத்தின் துவக்கத்தில் அழுத்தம் திருத்தமாக ஒரு முன்கதை வந்தால் அது யாருடையதாக இருக்கும் என்ற — இத்தனை வருட தமிழ் சினிமாவின்  — திரைக்கதை வரைமுறையை உடைத்துப் போட்ட காட்சி உருவான அந்த நிமிடத்திலேயே,  இந்தப் படத்தின் வெற்றி முடிவாகி இருக்க வேண்டும் .

DSC_0819

வித்தியாசமான — வீரியமான திரைக்கதை இந்தப் படத்தின் பெரும்பலம் . ஜெயம் ரவி , அரவிந்த்சாமி இருவரின் கதாபாத்திரங்கள் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு இருப்பது மாபெரும் பலம் .திரைக்கதை வசனத்தில் எழுத்தாளர் சுபாவின் முக்கியப் பங்களிப்பு இருப்பதும் தெரிகிறது

வில்லனின் உடன் இருக்கும் அழகி உட்பட ஒவ்வொரு கேரக்டருக்கும் சரியான கதைகளை வைத்து அதை திரைக்கதையின் நீரோட்டத்தில் கலக்க வைத்த விதம் வெகு சிறப்பு .

வில்லன் அலட்சியமாக செய்த ஒரு தனி மனித அநியாயம் கடைசியில் அவனுக்கு முடிவாக வரும் —  ஓல்டு இஸ் கோல்டு — திரைக்கதை உத்தியும் பலே பலே !

ஒரு வணிக ரீதியான வெற்றிப் படத்துக்கு முதல் பாதியை விட இரண்டாம் பாதி சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப் படம் ஓர் உதாரணம் .

DSC_5176

கல்லறைக் கல்வி, பண்ணைப் பள்ளிகள், உயிர் குடித்த தண்ணீர் என்ற வார்த்தைப் பிரயோகங்கள் ஆகட்டும் … ” உன் நண்பன் யார் என்பதை வைத்து உன் கேரக்டரை சொல்லலாம் ; ஆனா உன் எதிரி யார் என்பதை வைத்துதான் உன் கெப்பாசிட்டியை சொல்ல முடியும் ” ஈன்பது போன்ற வசனங்கள் ஆகட்டும்….

இதுவரை ரீமேக் படங்களையே இயக்கி வந்த ஜெயம் ராஜா முதன் முதலில் சொந்தக் கதையில் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் மொழியின் பயன்பாடுகள் மிக அருமை .

பொதுவாக ஹீரோவின் ஒவ்வொரு அசைவையும் வில்லன் கவனிக்கிறான் என்று கதை வந்து விட்ட பிறகு பத்து நிமிடத்துக்குள் அந்த விளையாட்டுக்கு ஒரு முடிவு வராவிட்டால் போர் அடிக்கும் என்பார்கள். ஆனால் அதையும் இதில் உடைத்துப் போட்டு அந்த ஏரியாவில் ஆடு புலி ஆட்டமும் கண்ணா மூச்சியும் ஆடி இருக்கிறார் இயக்குனர் ராஜா .

அது மட்டுமல்ல…  ஓர் இக்காட்டான சூழலில் நாயகன் நாயகியிடம் காதல் சொல்லும் விதமும் , கவிதையான அழகு. நம்மை மறந்து கைதட்டி விடுகிறோம் .

DSC_7803

ராம்ஜியின் ஒளிப்பதிவு சும்மா பட்டுத் தெறிக்கிறது . சூப்பர். ஹிப் ஹாப் தமிழா ஆதியின்  இசைக்கு பாடல்களில் ஸ்கோப் இல்லை என்றாலும் பின்னணி இசை மிக சிறப்பு

ஜெயம்  ராஜா நெருப்பு மாதிரி உணர்ந்து நடித்து இருக்கிறார் . அரவிந்த் சாமி வில்லனாக விரவி விரிந்து வியாபித்து இருக்கிறார் . அவர் ரசித்து  நடித்து இருப்பதால் நாமும் ரசிக்க ஆரம்பித்து விடுகிறோம் .

ஆனாலும் அரவிந்த் சாமி   என்பதற்காக அந்த கடைசி காட்சியிலும் அவர் கெத்து காட்டுவதை தவிர்த்திருக்கலாம் . என்ன இருந்தாலும் சித்தார்த் வில்லன் பாஸ் !

அது போல வில்லன்கள் சம்மந்தப்பட்ட இடத்துக்கு ஜெயம் ரவி ஏதோ ஷாப்பிங் காம்ப்ளக்சுக்குள் போவது போல போய்க் கொண்டே இருப்பது பக்கா சினிமாத்தனம் .  சமூகத்துக்கு தேவையான விஷயத்தை எடுத்துக் கொண்டு அதற்கு முழுக்க முழுக்க சினிமாத்தனமாக டிரீட்மென்ட் கொடுத்து இருப்பது வில்லன் செய்யும் அக்கிரமத்துக்கு இணையான அக்கிரமம்.

DSC_6046

பழனி என்கிற சித்தார்த்தின் தந்தையாக அரசியல் தொண்டன் கம் அமைச்சர் வேடத்தில் காமெடியிலும் கடைசி  காட்சியில் உருக்கத்திலும் விளையாடி இருக்கிறார் தம்பி ராமையா .

கடைசி நேர திருப்பங்கள் அருமை .

சக்கரை வியாதிக்காரர்கள் அதிகம் உள்ள இந்தியக் கடல்பகுதியில் மட்டுமே சக்கரை வியாதிக்கு மிக சரியான மருந்தான நொச்சி என்ற தாவர மருந்து இருக்கிறது . அதை பயன்படுத்தி  சர்க்கரை நோயை குறைந்த செலவில் அதி விரைவில்  முற்றிலும் குணமாக்கும் மருந்து தயார் செய்ய முடியும் . அதை செய்ய விடாமல் தடுப்பது யார் என்ற கேள்வியை இந்திய அரசை நோக்கு வீசி இருப்பதன் மூலம் கம்பீர ஜொலிப்புக் காட்டுகிறது இந்தப் படம் .

தனி ஒருவன் .. வெற்றி சமூகம்

மகுடம் சூடும் கலைஞர்கள்

—————————————-

மோகன் ராஜா,  ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, ராம்ஜி , ஹிப் ஹாப் தமிழா ஆதி

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →