சரவணா பிலிம் ஆர்ட்ஸ் சார்பில் ஜி. சரவணா தயாரிக்க, உமாபதி, தம்பி ராமையா, சம்ஸ்கிருதி , பால சரவணன் , தேவ தர்ஷினி, வித்யுலேகா ராமன் மற்றும் பலர் நடிக்க, மணிகா வித்யா இயக்கி இருக்கும் படம் .
மதுரை திருப்பரங்குன்றத்தில் , பகல் நேரத்தில் குடிநீர் கொண்டு போய் விற்பனை செய்யும் தண்ணி வண்டி ஓட்டுவது , இரவு நேரத்தில் குடித்து விட்டு ‘ தண்ணி வண்டி’ யாகவே ஆகி விடுவது என்று வாழும் இளைஞனும் ( நாயகன் உமாபதி) அவன் நண்பனும் இருவரும் (பால சரவணன் ).
பவர் லாண்டரி வைத்து நடத்தும் இளம் பெண் ( நாயகி சம்ஸ்கிருதி ) அவள் சகோதரி (வித்யுலேகா ராமன்).
நாயகனுக்கு நாயகி மீது ஆசை .. அவளுக்குக் காதல்.
நாயகனின் அப்பா ( தம்பி ராமையா) மனைவி இறந்த நிலையில் இரண்டாம் கல்யாணம் செய்து கொள்ள அப்பா மேல் வெறுப்பு . சித்தி ( தேவதர்ஷினி) மேலும் கூட. அந்த பகுதியின் வருவாய் அதிகாரியாக வரும் பெண் அதிகாரி பணியில் நேர்மையானவர் . ஆனால் பாலியல் ரீதியாக பல ஆண்களுடன் உறவு வைத்திருப்பவர் .
பணி ரீதியாக அவரால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் கையில் வருவாய் ஆதிகாரியும் நாயகிடைய சகோதரிக்கு நிச்சயிக்கப்பட்ட கணவனும் உறவாடும் வீடியோ கிடைக்கிறது .. அது பரபரப்புச் செய்தியாகி, பெண் அதிகாரி பொது வெளியில் அவமானப்படுகிறார்.
அப்படி வீடியோ கிடைபதற்கு நாயகியும் அவள் சகோதரியும் ஒரு வகையில் காரணம் என்பதால் அவர்கள் மீது கோபப்படுகிறார் . ஆனால் அதை அதிகாரியின் எதிரியிடம் கொண்டு போனதே நாயகன்தான் .
போலீஸ் உதவியோடு நாயகன் நாயகியை பழிவாங்க பெண் அதிகாரி சகல அஸ்திரங்களையும் பிரயோகிக்க அப்புறம் என்ன ஆச்சு என்பதே தண்ணி வண்டி .
மோசஸ் இசையில் பாடல்கள் நன்றாக இருக்க, உமாபதி உற்சாகமாக நடனம் ஆட, நன்றாகவே ஆரம்பிக்கிறது படம் . நாயகியின் அநாதை இல்ல உறவுகள் பற்றிய பகுதி நெகிழ்ச்சி.
பெண் அதிகாரியின் கதாபாத்திரம் கூட வித்தியாசமான ஒன்றுதான் . ஆனால் அதை சிறப்பாகச் சொல்லத் தெரியாமல் லோக்கலாக சொல்லி விட்டார்கள்.
நிறைய நகைச்சுவை நட்சத்திரங்கள் இருந்தும் அவர்கள் நகைச்சுவை என்று நினைத்துக் கொண்டு நிறைய பேசினாலும் ஆங்காங்கே கொஞ்சம் நிஜ நகைச்சுவை எப்போதாவது வருகிறது.
இலக்கில்லாமல் தறிகெட்டு அலையும் திரைக்கதை, சவ சவ பேச்சு, நகைச்சுவை என்ற பெயரில் ஓவர் ஆக்டிங், தெளிவிலாத கதைப் போக்கு என்று போகிறது படம் .