கைனடோஸ்கோப் சார்பில் செல்வமுத்து, மஞ்சுநாத் இருவரும் தயாரிக்க சக்திவேல் வாசு, சமுத்திரக் கனி , மீனு , அதிதி ஆகியோர் நடிக்க, ஆர்.பி.ரவி எழுதி இயக்கி இருக்கும் படம் தற்காப்பு . யாருக்கு தற்காப்பு ? பார்க்கலாம் .
பெங்களூர் சிவாஜி நகர் பகுதியில் உள்ள ஒரு நான்கு சாலை சந்திப்பில் அதிகாலை நேரத்தில் ஒரு நபரை என்கவுண்டரில் போட்டுத் தள்ள போலீஸ் திட்டமிடுகிறது . வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொள்ள முயலும் இரண்டு காதல் ஜோடிகள், அதே நேரத்தில் அதே இடத்தை தாங்கள் சந்திக்கும் இடமாகத் திட்டமிட்டு வருகிறது .
போலீசால் என்கவுண்டருக்கு குறி வைக்கப்பட்டு இருக்கும் நபர் (சக்திவேல் வாசு ) ஒரு முன்னாள், என்கவுண்டர் போலீஸ் அதிகாரி என்பது சொல்லப்படுகிறது. அவரையே போலீஸ் என்கவுண்டரில் போட்டுத்தள்ள முயலக் காரணம் ?
குற்றம் செய்து விட்டு சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முயலும் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்வதை நாட்டுக்கான சேவையாக எண்ணி செய்பவர், மிக நியாயமான அந்த போலீஸ் அதிகாரி. இதுவரை பதினெட்டு பேரை என்கவுண்டர் செய்தவர் .
ஆனால் அவற்றில் பல நியாயமான என்கவுண்டர்கள் அல்ல. கோர்ட்டுக்கு அழைத்து செல்லும் வழியில் தனி இடத்தில் நிறுத்தி , நிராதரவாக்கி சுட்டுக் கொல்வதும் உண்டு . அதுவும் கூட தப்பில்லை என்பது அவரது எண்ணம்.
அப்படி அவர் ஒரு நபரை (ரியாஸ்கான்) சுட்டுக் கொன்ற விஷயத்தைக் கையில் எடுத்து , விசாரிக்க வருகிறார் ஒரு மனித உரிமை அமைப்பின் அதிகாரி (சமுத்திரக்கனி). போலீஸ் அதிகாரி செய்தது நியாயமான என்கவுண்டர் அல்ல. திட்டமிட்ட கொலை என்பதை விசாரித்து அறிகிறார் . அதை போலீஸ் அதிகாரியிடமும் நிரூபிக்கிறார்.
”மக்களின் நன்மைக்குத்தானே நான் என்கவுண்டர்கள்” செய்தேன் என்று போலீஸ் அதிகாரி சொல்ல , மறுக்கிறார் மனித உரிமை அதிகாரி.
போலீஸ் அதிகாரிக்கு வரும் ஒவ்வொரு என்கவுண்டர் உத்தரவின் பின்னாலும் பணம் படைத்தவர்களை , அதிகார பலம் உள்ளவர்களை , மிகக் கொடிய அயோக்கியர்களை காப்பாற்றும் நோக்கமும் அதில் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கும் லஞ்சப் பணமும் பதவி மோகமும் இருப்பதைப் புரிய வைக்கிறார் .
கொந்தளிக்கும் என்கவுண்டர் அதிகாரி தனது உயர் அதிகர்களைக் கண்டிக்க , கண் சிவக்கும் மேல் அதிகாரிகள், அவரையே சஸ்பெண்ட் செய்து விட்டு என்கவுண்டர் செய்யத் திட்டமிடுகிறார்கள் . அப்படி அவர்கள் திட்டமிடும் அதே நேரத்தில் காதல் ஜோடிகளும் அங்கு வர….
அப்புறம் என்ன என்பதே இந்தப் படம் .
”ஒவ்வொரு என்கவுண்டர் பற்றிய செய்தி வரும்போதும் ‘குற்றவாளி தப்பிக்க முயன்றதோடு போலீசையும் சுட்டான் . எனவே தற்காப்புக்காக போலீஸ் சுட்டது ‘ என்று செய்தி வருகிறதே.. யாருடைய தற்காப்புக்காக ?” என்பதுதான் படம் முன் வைக்கும் சிறப்பான நியாயமான கேள்வி . சபாஷ் !
மேக்கிங் நன்றாக இருக்கிறது . ஜோன்ஸ் ஆனந்தின் ஒளிப்பதிவு சிறப்பு .
மனித உரிமை அதிகாரியாக சமுத்திரக் கனி கொடுக்கும் அறிமுகமும் அந்த விசாரணை ஏரியாவும் சூப்பர் . கதாநாயகிகள் ஈர்ப்பாக இருக்கிறார்கள்.
சொல்ல வரும் விசயமும் நல்ல விஷயம்தான் . ஆனால் அதை சொன்ன வகையில்தான் ஏகப்பட்ட குளறுபடிகள். எடுத்த எடுப்பிலேயே ஓர் இறுக்கம், அடிக்கடி முன்னும் பின்னும் என்று அலைபாய்ந்து படம் பார்ப்பவர்களைக் களைப்பாக்கும் பிளாஷ் பேக்குகள்…. என்று திரைக்கதையில் நிறைய சறுக்கல்கள் . படத் தொகுப்பாளர் சான் லோகேஷ் பிரம்மப்பிரயத்தனம் செய்தும் பலன் இல்லையே .
டெல்லிக்குப் போகும் பெண்ணின் ரயில் பிளாஷ்பேக் தனிப்பட்ட வகையில் நன்றாக இருக்கிறது . ஆனால் இந்தக் கதை சொல்ல வரும் சேதியின் தன்மைக்கு அது சம்மந்தம் இல்லாத ஒன்று என்பதால் பெரிதாக நமக்கு ஆர்வம் வரவில்லை .
இன்னொரு காதல் டிராக்கும் அப்படியே . தனிப்பட்ட விதத்தில் பெரிதாக குறை சொல்ல ஒன்றும் இல்லைதான் . ஆனால் படம் சொல்லும் மெயின் கதைக்கு அதனால் என்ன பலன் ? ஆரம்பத்தில் இருந்தே தற்கொலை செய்வதற்கு முயலும் ஒருவனுக்கு வரும் பிரச்னை நம்மை எப்படிப் பாதிக்கும் ? அவன் வாழ ஆசைப்படும் ஒரு கதாபாத்திரமாக அல்லவா அமைக்கப்பட்டு இருக்க வேண்டும் ? ப்ச்!
மெயின் கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் பிரச்னைகளுக்கும் தொடர்பே இல்லாத இரண்டு சுமாரான காதல் ஜோடி ஒரு புள்ளியில் இணைவதால் என்ன பலன் வரும் . ?
அந்தக் காதல் ஜோடிகள் அவர்கள் பிரச்னை , பின் புலம் இவற்றை அடிப்படைக் கதையோடு சம்மந்தப்படுத்தி , அதன் மூலம் அவர்களுக்கு என்ன ஆகுமோ என்ற படபடப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டாமா ? சம்மந்தம் இல்லாமல் மாட்டிக் கொள்ளும் அப்பாவிகள் என்று இயக்குனர் கதை சொல்ல வந்திருக்கிறார் . ஆனால் காட்சிகளில் அதைக் கொண்டு வர அவரால் முடியவில்லை
கிளைமாக்ஸ் அநியாயம் . இப்படி ஒரு நிர்மூல முடிவை சொல்லும் படத்தை ஒரு ரசிகன் ஏன் காசும் இரண்டரை மணி நேரமும் செலவழித்து பார்க்க வேண்டும் ?
தற்காப்பு … தப்பும் தவறுமான என்கவுண்டர்