ஆசிஃப் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வசி ஆசிஃப் தயாரிக்க, வசி, பூஜா , செந்தமிழன் சீமான் நடிக்க, விஜய் ஆனந்த் – சூரியன் இரட்டை இயக்குனர்கள் இயக்கி நடித்தும் இருக்கும் படம் தவம் .
நகரத்துப் பெண் அகிலா ( பூஜா) தான் சிறுவயதில் வாழ்ந்த அன்னை வயல் கிராமத்துக்கு போகிறாள் . அங்கு சிறு வயதில் பழகிய முருகனை ( வசி ) பார்த்து காதல் கொள்கிறாள். முருகனும் காதலை ஏற்கிறான்.
முருகனின் மாமா புலிகேசி ( இயக்குனர் சூரியன்) அதற்கு ஆதரவு தருகிறார் .
அந்த ஊர் தாதாவான சிவன்ணன்( இயக்குனர் விஜய் ஆனந்த்) ஒரு கொலை செய்வதை பார்த்த பூஜா , தைரியமாக சாட்சி சொல்லப் போக , அவளை கொலை செய்ய முயல்கிறான் சிவன்ணன். தடுக்கிறான் முருகன் .
அப்போதுதான் முருகனின் தந்தை நடேசன் வாத்தியார் ( சீமான்) கதை விரிகிறது .
ஊரில் உள்ள விவசாய நிலங்களை வாங்கி அங்கே சுற்றுச் சூழல் சீர்கேடு மற்றும் உடல் நலம் கெடுக்கும் தொழிற்சாலையை கொண்டு வர முயலும்,
புரோக்கர்களான ரெட்டி , நாயர் மற்றும் கழக அரசியல்வாதிகளை எதிர்க்கிறார் மண், மொழி இன நேசம் கொண்ட நடேசன் வாத்தியார்.
அவர் வீழ்த்தப்பட்டாலும் ஊர் காப்பற்றப்பட்டு இன்றும் பசுமையோடு வாழ விதை போடப்பட்ட கதை சொல்லப் படுகிறது.
இப்போது அன்றைய துரோகிகளின் அடுத்த தலைமுறையும் முருகனை பழிவாங்க முயல்வது தெரிய வருகிறது . அப்புறம் என்ன என்பதே இந்த தவம் .நடேசன் வாத்தியாராக நல்ல விசயங்களை பேசிக் கொண்டு வரும் சீமான் கவர்கிறார். அவர் பேசும் விஷயங்கள் அவசிய அருமை . படத்தின் பலமே இந்த பகுதிதான்.
கதாநாயகி பூஜா ஓங்கு தாங்காக இருக்கிறார் .
கிராமத்து லொகேஷன்கள் சிறப்பு.
பல எளிய முகங்களை படத்தில் பார்க்க முடிவதும் மகிழ்ச்சி .
நிறைய நகைச்சுவை நடிகர்கள் இருக்கிறார்கள் .
இன்னும் சிறப்பான திரைக்கதை , வசனம் , நகைச்சுவைப் பகுதி , பாடல்கள் , இசை ,ஒளிப்பதிவு , எடிட்டிங் , நடிப்பு எல்லாம் இருந்து இருந்தால் தவம் பெரிய வரம் என்று ஆகி இருக்கும் .