வேலை செய்யும்போது ஒன்றிணைந்து ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என்பதற்காக…சினிமா என்பது டீம் வொர்க் என்பார்கள் .
ஆனால் வேலை செய்யும் விசயத்தில் மட்டுமல்ல.. வேலை கொடுக்கும் விசயத்தில் கூட சினிமா என்பது டீம் வொர்க் என்று புது விளக்கம் சொல்கிறது பொறியாளன் திரைப்படம் .
ஏஸ் மாஸ் மீடியா நிறுவனத்தை சேர்ந்த வெற்றி வேல்முருகன் தேவராஜுலு இருவரும் உதயம் என் ஹெச் 4 படத்தை இயக்கிய மணிமாறனிடம் தங்களுக்கு ஒரு படத்தை இயக்கித் தரும்படி கேட்க , வேறு திட்டத்தில் இருந்த மணி மாறனால் அது முடியலையாம்.
ஒரு நிலையில் ‘சரி… ஒரு நல்ல கதையாவது சொல்லுங்க’ என்று அவர்கள் கேட்க , மணிமாறன் சொன்ன கதை பிடித்துப் போக , திரைக்கதை வசனத்தையும் மணி மாறனையே பண்ண சொன்னார்களாம். அவரும் செய்து கொடுக்க, ‘சரி டைரக்டரையும் நீங்களே சொல்லுங்க’ என்று அடுத்து கேட்டிருக்கிறார்கள். தனது பதினான்கு ஆண்டுகால நண்பர் தணு குமாருக்கு அந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்து இருக்கிறார் மணிமாறன்.
பைவ் ஸ்டார் ஆடியோ அதிபர்களில் ஒருவரான கல்யாணின் மகன் ஹரீஷ் கல்யாணை ஹீரோவாகப் போட, அவர் தன் நண்பரான ஜோன்சை இசையமைப்பாளராக சொல்லி வாய்ப்பு வாங்கிக் கொடுத்து விட்டார் .
இயக்குனர் தாணு குமார், கதையை நட்பு வாக்கில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜிடம் சொல்ல அவர் “என் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் இந்தப் படத்தில் இருக்கு. எனவே நானே ஒளிப்பதிவு செய்கிறேன்” என்று சேர்ந்து கொண்டாராம்.
பொறியாளன் படத்தின் கதை சிவில் என்ஜினீயர் பற்றியது . இதற்கு ஒளிப்பதிவு செய்ய ஆரம்பித்த பிறகு மெக்கானிக்கல் என்ஜினீயரை வைத்து ஒரு கதையை ரெடி பண்ணிய வேல்ராஜ் அதை தனுஷிடம் சொல்ல , அதை இயக்கும் வாய்ப்பை வேல்ராஜுக்கே தனுஷ் கொடுக்க, அதுதான் இப்போது வெற்றிகரமாக ஓடும் வேலை இல்லாப் பட்டதாரி. இது எப்படி இருக்கு ?
படத்தின் எளிமை இயக்குனர் வெற்றிமாறனுக்கு பிடித்துப் போனதால் , தனுஷ் – பார்த்திபனை வைத்து ஒரு படத்தை இயக்கிக் கொண்டு இருக்கும் வேலைக்கு (படத்தின் பெயர் அநேகமாக சூதாடி ) இடையிலும், இந்த பொறியாளன் படத்தில் தயாரிப்பில் தனது Gராஸ் ரூட் பிலிம் கம்பெனியையும் இணைத்து விட்டார் வெற்றிமாறன்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் ஹீரோவான ஹரீஷ் கல்யாண் பேசிய ஒரு விசயம்தான், இந்தக் கட்டுரையின் தலைப்புக்கும் தவிப்போடு நீங்கள் உள்ளே வந்ததற்கும் காரணம் .
” நான் அறிமுகமான முதல் படம் சிந்துச் சமவெளி. அதுல் ஹீரோயின் அமலாபால் . அவரை மைனா படத்தில் நடிக்க வைத்து ஹிட் நடிகை ஆக்கினார் பிரபு சாலமன்.
இப்போ இந்தப் படத்துல கதாநாயகியா அறிமுகமாகிற பொண்ணு பேரு ரக்ஷிதா . அந்தப் பொண்ணால இன்னிக்கு இந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு வர முடியல.
காரணம் அந்தப் பொண்ணை தன்னோட அடுத்த படமான கயல் படத்துல நடிக்க வைக்க அழைச்சிட்டு போய்ட்டார் பிரபு சாலமன் . ஆமா.. இப்போ என்னோட இந்தக் கதாநாயகியும் பிரபு சாலமன் படத்துல நடிச்சுட்டு இருக்கு . என் கூட நடிக்கிற நடிகைகளை எல்லாம் பெரிய கதாநாயகியா ஆக்கிடறாங்க. நாங்கல்லாம் எப்போ பெரிய கதாநாயகி கூட நடிக்கிறதோ தெரியல ” என்றார் கொதிப்பும் கொந்தளிப்புமாய்.
ஹலோ பிரபு சாலமன்.. ஏங்க இப்படி ஹரீஷ் கல்யாணோட கதாநாயகிகளா ‘கரம்’ வச்சு தூக்குறீங்க ?