மறைந்த ஓய்.ஜி.பார்த்தசாரதியால் 1952 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, இப்போது அவரது மகன் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனால் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் யூ.ஏ.ஏ நாடகக் குழு கடந்த 63 ஆண்டுகளில் 64 நாடகங்களை மேடை அரங்கேற்றி இருக்கிறது.
அடுத்து இந்த யூ.ஏ.ஏ. நாடகக்குழுவானது ஸ்ரீராம் புராபர்ட்டீஸ், அப்பாஸ் கல்சுரல் மற்றும் பாரத் கலாச்சார் அமைப்புகளின் உதவியோடு அரங்கேற்றும் 65ஆவது நாடகம் சொப்பன வாழ்வில்.
ஏழிசை மன்னன் என்று போற்றப்பட்ட எம்.கே.தியாகராஜா பாகவதர் பாடிய பாட்டின், முதல் வரியை பெயராகக் கொண்டு வரும் இந்த நாடகத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் கதாநாயகனாகவும், யுவஸ்ரீ கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களோடு ஒய்.ஜி.எம் நாடகக் குழுவின் சிறந்த ஆஸ்தான நடிகர்களான பிருந்தா உள்ளிட்ட நடிகர்களும் வழக்கம் போல உண்டு .
நாடகத்தை எழுதி இருப்பவர் பழம்பெரும் கதை வசனகர்த்தா கோபு பாபு .
நாடகமாக்கம் மற்றும் இயக்கம் ஒய்.ஜி.மகேந்திரன் .
கோபு பாபு முன்பே ஒய் ஜி. மகேந்திரனுக்கு இரண்டு நாடகங்கள் எழுதி இருக்கிறார் . அவற்றில் ஒரு நாடகத்தில் கடவுள் மனிதனாக பூமியில் வந்து தங்கி கஷ்டப்படுவதுதான் கதை. அதுபோல ஒரு சினிமா படம் பின்னர் வந்தது .
சுமார் ஏழு வருடங்களுக்கு முன்பு கோபு பாபு எழுதிய ஒரு நாடகம் மாதவன் கேசவன் .
இரண்டு போலீஸ்காரர்கள் ஒரு கிராமத்தில் அமைக்கப்படும் புதிய காவல் நிலையத்தில் பணியாற்றப் போவார்கள் . ஊரில் எல்லோரும் ஒழுக்கமாக இருப்பதால் ஸ்டேஷனுக்கு எந்த கேசும் வராது. எனவே அந்த காவல் நிலையத்தை மூடி விட்டு , இருவரையும் வேறு ஊருக்கு மாற்ற காவல் துறை முடிவு செய்யும்..
அந்த ஊரில் வேலை இல்லாமல் சும்மா இருந்து சம்பளம் வாங்கி சுகம் கண்ட இருவரும் அதை விரும்பாமல் அங்கேயே தொடர்ந்து இருபதற்காக தாங்களே குற்றங்களை உருவாக்குவார்கள். இந்தக் கதையின் அடிப்படையில் உருவான ஒரு படமும் ரிலீசுக்கு காத்திருக்கிறதாம் . “படத்தைப் பார்த்துட்டுதான் கேஸ் போடறதைப் பத்தி யோசிக்கணும்” என்கிறார்கள்.
சரி … நாம விசயத்துக்கு வருவோம் .
சொப்பன வாழ்வில் நாடகம் பற்றி ஒய்.ஜி. மகேந்திரன் என்ன கூறுகிறார் ?
” இன்றும் நான்கு பெரிய டைரக்டர்களின் படங்களிலும் ஐந்து புது இயக்குனர்களின் படங்களிலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன் . ஆனாலும் என் சினிமா கேரியர் பற்றி நான் கவலைப்படவில்லை. மேடை நாடகத்தைத்தான் அதிகம் நேசிக்கிறேன் . இப்போது என்னைப் பார்த்து என் மகள் மதுவந்தியும் நாடகம் போடுகிறார் .
இந்த நாடகம் போடுவதன் மூலம் ரஷ்யா தவிர உலக நாடுகள் எல்லாம் போய் வந்துவிட்டேன் . செப்டம்பர் மாதம் மறுபடியும் போகிறோம் .இடையில் அரங்கேறுகிறது சொப்பன வாழ்வில் என்ற இந்த புதிய நாடகம் .
கோபு பாபு ஒரு அருமையான ரைட்டர் . இந்த நாடகத்தில் ஓர் அருமையான கதாபாத்திரத்தை ஹீரோவாக்கி இருக்கார் .
பொதுவா நாம உயரம் , அறிவு , அழகு , நிறம் இதுல எல்லாம் நம்மை விட கம்மியானவர்களை கேலி பண்றதையும் நகைச்சுவை என்ற பெயரில் அவமானப்படுத்துவதையும் வழக்கமா வச்சிருக்கோம் . ஆனா அவங்க மனசு அதை எல்லாம் கேட்டு என்ன பாடுபடும் ? அதுதான் இந்தக் கதையின் அடிநாதம் .
கோபு பாபு இந்தக் கதையை சொன்ன உடன் எனக்கு, நடிகர் தேங்காய் சீனிவாசன்கிட்ட உதவியாளரா இருந்த வத்சல் என்பவர் ஞாபகம் வந்தார் . அவர் எந்த வேலையையும் ஒழுங்கா செய்வார். கையெழுத்து அவ்வளவு அழகா இருக்கும். ஆனா உயரம் கம்மியா இருக்கும் . அப்பாவி மாதிரி நடந்துக்குவார் .
அவரை எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க . அதுலயும் நானும் கமல்ஹாசனும் அப்படி கிண்டல் பண்ணுவோம் . அவர் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் வந்து சொன்னப்ப நாங்க அப்படி சிரிச்சோம் . நாங்க பண்ணினது தப்பு . அப்படி செஞ்சிருக்கக் கூடாது. இப்போ வத்சல்கிட்ட மன்னிப்புக் கேட்கக் கூட வழி இல்ல. அவர் செத்துட்டார் . அவரை மனசுல வச்சிக்கிட்டு இந்த கேரக்டரை நான் நடிக்கப் போறேன்.
ஆனா இந்த நாடகத்துல வர்ற ஹீரோ தன்னை எல்லோரும் எப்பவும் அவமானப் படுத்தறத தாங்க முடியாம ஒரு நிலையில் பொங்கி எழுந்து இந்த சமுதாயத்தையே ஒரு வழி பண்ற காமெடி திரில்லர் டிராமா இது
கணவனை விட்டுக் கொடுக்காத மனைவியா யுவஸ்ரீ நடிக்கிறாங்க . நாடகத்துல வர்ற எல்லா கேரக்டர்களுமே அருமையான கேரக்டர்ஸ்.
அப்புறம்… பொதுவா டிராமாவுல மியூசிக் என்றால் அது சும்மா டிராக் மியூசிக்கை ஏத்தி விடற வேலைதான். ஆனா , எனக்கு ராமானுஜன் படம் பார்த்தப்ப அதுக்கு ரமேஷ் விநாயகம் பண்ணின மியூசிக் ரொம்ப ஈர்ப்பா இருந்தது .
அவரை இந்த நாடகத்துக்கு ஒரு டைட்டில் பாடல் பண்ணித்தரச் சொன்னேன் . அற்புதமா பண்ணிக் கொடுத்து இருக்கார் .( எம் .கே.டி யின் சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே பாடலின் பல்லவி அதே காட்சிகளோடு ஓட, அப்படியே இசை நவீன இசையாக மாற , நாடகத்தின் டைட்டில் ஓடுகிறது . )
வரும் ஜூன் 20 ஆம் தேதி மாலை சென்னை வாணி மகாலில் முதல் காட்சி அரங்கேறுகிறது . தொடர்ந்து ஜூன் 21 மற்றும் 28 ஆம் தேதிகளில் பி.டி. தியாகராயர் ஹாலில் நடக்கிறது ” என்கிறார் ஒய்.ஜி.மகேந்திரன் .
நாடகப் பிரியர்களுக்கு நல்ல விருந்து !