
எம்.ஆர். மூவி மேக்கர்ஸ் சார்பில் குமாரபாளயைம் எம்.ராமசாமி தயாரித்து ஹீரோவாக நடிக்க, வேடப்பன் மற்றும் ஒரு சந்திப்பில் போன்ற படங்களை டைரக்டு செய்த ஆனைவாரி ஸ்ரீதர் கதை திரைகதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் சோக்கு சுந்தரம் .
காதலித்துதான் கல்யாணம் செய்து கொள்வேன் என்ற கொள்கையோடு உள்ள ஒரு ஆண், யாரிடமாவது காதலை சொன்னால் போச்சு. அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவனுடன் நிச்சயமாகி விடும். இப்படியே நடந்து வாலிப வயதை கடந்து விடும் அவனுக்கு அவனுக்கு திருமணம் நடந்ததா இல்லையா என்ற கதையின் அடிப்படையில்….
ஒரு கிராமத்தில் சோக்காளியாக வாழும் ஒரு ஆண் அவன் வாழ்க்கையில் குறுக்கிடும் பெண்கள் அவனது காதல் , அதில் தோல்வி வெற்றி எல்லாம் கலந்து ஜனரஞ்சகமாக உருவாக்கப்பட்டு இருக்கும் படம் இது . கன்னட நடிகை சௌஜன்யா நாயகியாக அறிமுகமாகிறார். வடிவுக்கரசி, குள்ளசுந்தர், போண்டாமணி, சாப்ளின் பாலு, பெஞ்சமின் ஆகியோரும் நடிக்கின்றனர்.

படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் படத்தின் முன்னோட்டத்தையும் நான்கு பாடல்களையும் திரையிட்டனர். கிராமியத்தனமாகவும் கலர்புலாகவும் கவர்ச்சிகரமாகவும் இருந்தன பாடல்கள். கவர்ச்சிப் பாடலை உற்சாகமாகப் படமாக்கி இருந்தார் இயக்குனர் ஆனைவாரி ஸ்ரீதர்.
கானா பாலா படிய ”கப்பல் விடாதே கப்பல் விடாதே கட்டாந்தரையில் கப்பல் விடாதே, கவுந்து விடாதே கவுந்து விடாதே கன்னக்குழியில் கவுந்து விடாதே…’ என்ற பாடல் பக்கா கானாப் பாடலாக இருந்தது .
படத்தின் ஒளிப்பதிவாளரான மகிபாலன் பல்வேறு வித கேமராக்களை பயன்படுத்தி படம் எடுப்பதில் வல்லவராம். படத்தின் இசையமைப்பாளரான ஜேம்ஸ் விக்டரை வாழ்த்த அவரது நண்பரான தாஜ் நூர் வந்திருந்தார் .


படத்தின் பாடலாசிரியரான ஜெயங்கொண்டானை பற்றிப் பேசிய தயாரிப்பாளரும் பத்திரிக்கை தொடர்பாளர் சங்கத் தலைவருமான விஜய முரளி ….
“சென்னை அசோக் நகர் காமராஜர் சாலையில் கவிஞர் கிச்சன் என்ற பெயரில் ஹோட்டல் வைத்து இருக்கும் பாடலாசிரியர் ஜெயங்கொண்டான் சினிமாவை நேசிப்பவர் .
உதவி இயக்குனராக ஆகும் ஆசையில் சென்னை வந்து கஷ்டப்படும் எல்லோருக்கும் இலவச உணவும் தங்கும் வசதியும் செய்து தருகிறார் .
இது தவிர சென்னை நகருக்குள் எந்தத் திரையரங்கில் எந்தப் படம் பார்த்து விட்டும் வந்து, படத்தின் டிக்கட்டை இவரிடம் காட்டினால் சாப்பாட்டு பில்லில் பத்து சதவீதம் டிஸ்கவுன்ட் தருகிறார் . இது பாராட்ட வேண்டிய விஷயம் ” என்றார் .
இது பற்றிக் கூறிய ஜெயங்கொண்டான் “என் மீது அன்பும் அக்கறையும் கொண்ட எனது மதிப்புக்குரிய இயக்குனர் பார்த்திபன் சாரின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்துக்காக முதன் முதலில் இந்த தள்ளுபடியை தர ஆரம்பித்தேன் . இப்போது எல்லா படத்துக்கும் இதை நீட்டித்து விட்டேன் ” என்றார்.

அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசும்போது “படத்தின் மூன்று பாடல்களை இரண்டு நாட்களில் எடுத்து இருப்பதாக டான்ஸ் மாஸ்டர்கள் லலிதா மணி சொன்னதை கேட்டேன் . அப்படி சிக்கனமாக எடுப்பது அவசியம் ” என்றார் .
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சின்னத்திரை இயக்குனர் மற்றும் நடிகர் கவிதாபாரதி ” இரண்டு நாளில் மூன்று பாடல்கள் எடுத்தது பற்றி இங்கே பேசினார்கள் . நாங்கள் சீரியல்களில் ஒரு நாளில் எட்டுக் காட்சிகள் எல்லாம் எடுக்கிறோம் . எனவே திரைப்படத் தயாரிப்பாளர்கள் எங்களுக்கும் சினிமா எடுக்க வாய்ப்புக் கொடுத்தால் நாங்கள் பாடல்களை மட்டுமல்ல .. மொத்தப் படத்தையும் சிக்கனமாக எடுப்போம் ” என்று கூறி …யோசிக்க வைத்தார் .

நிறைவாகப் பேசிய வி.சி.குகநாதன் “இயக்குனர் புத்திசாலித்தனமாக தயாரிப்பாளரையே ஹீரோவாக ஆக்கி படத்தை எடுத்து முடித்துள்ளார். படத்தின் முன்னோட்டமும் பாடல்களும் நன்றாக இருக்கிறது. ஹீரோவும் தயாரிப்பாளருமான ராமசாமி பவர் ஸ்டார் மாதிரி இருக்கிறார் . கொஞ்சம் சிரத்தை எடுத்து முயன்றால் , பவர் ஸ்டார் எப்படி குறுகிய காலத்தில் புகழ் பெற்றாரோ அப்படி ராமசாமியும் புகழ் பெறலாம்” என்று கூற, ராமசாமி முகத்தில் விளங்கவியலாப் புன்னகை
ஆனா வழக்கு எதுவும் வரக் கூடாது .. கபர்தார்!