AAA சினிமா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், திரிஷா, ஷபிர் கல்லரக்கல், மியா ஜார்ஜ், சந்தோஷ் பிரதாப், விவேக் பிரசன்னா, எம் எஸ் பாஸ்கர், வேல ராமமூர்த்தி நடிப்பில் அருண் வசீகரன் எழுதி இயக்கி இருக்கும் படம்.
பத்திரிக்கையாளர் ஒருவரின் ( திரிஷா) கணவனும் ( சந்தோஷ் பிரதாப்) மகனும் சென்னையில் இருந்து கன்யாகுமரிக்கு காரில் போய்க் கொண்டு இருக்கும்போது , மதுரை திருமங்கலம் அருகில் விபத்துக்கு ஆளாகி இறக்கின்றனர . ஒரு தொழிலதிபரின் காரை பைக்கில் துரத்தி வந்து கொல்ல முயன்ற மர்ம நபர்களால் நடக்கும் விபத்து அது . தொழில் அதிபரும் கொல்லப்படுகிறார் .
பத்திரிகையாளத் தோழியின் (மியா ஜார்ஜ்) துணையோடு விசாரிக்கப் போகும் பெண் பத்திரிக்கையாளருக்கு அந்த இடத்தில் அதிக விபத்துகள் திட்டமிட்டு உருவாக்கப்படுவது தெரிகிறது . ஒரு வெறிபிடித்த பெண்ணும் இன்னும் சிலரும் அதன் பின்னால் இருப்பதும் காட்டப்படுகிறது
இன்னொரு பக்கம் தமிழ் அப்பாவுக்கும் இரண்டாந்தார மலையாள அம்மாவுக்கும் பிறந்து அப்பாவின் முதல்தாரப் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு படித்து முன்னேறி ஆசிரியராக இருக்கும் ஒருவர் ( ஷபிர் கல்லரக்கல்) மீது, மாணவி ஒருத்தி தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக பொய்ப் புகர் புகார் சொல்ல, அவமானப்பட்டு வேலை போய் , கடன்காரர்களால் கூனிக் குறுகி மறைந்து வாழும் ஒருவனின் கதை சொல்லப்படுகிறது.
இரண்டுக்கும் என்ன சம்மந்தம்? நடந்தது என்ன என்பதே படம்
ஒரு கதாநாயகி முக்கியத்துவப் படத்துக்கான சகல பழகிய அம்சங்களோடும் ஆரம்பிக்கிறது படம். திரிஷா ஜொலிக்கிறார் . மியா ஜார்ஜ் சிறப்பு .
வேல.ராமமுர்த்தி கூறும் காவக்கூலி கதை அற்புதம் . ஆனால் அதைக் கேட்ட பிறகும் அவன் திருடனாவது கேரக்டர் அசாசினேஷன்.
ஒரு சாதாரண நபரின் அக்கவுண்டில் காரணம் இல்லாமல் பணம் போட்டு அவனை செலவு செய்ய வைத்து அப்புறம் அவனை வளைத்து சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்துவது என்பது படத்துக்கு நல்ல ஐடியா. ஆனால் சமூகத்துக்கு மோசமான முன்னுதாரணம் .
ஆனால் நூற்றுக்கணக்கான அப்பாவி ஏழைகளின் அக்கவுண்டை ஒருவன் ஆன் லைனில் தவறாகப் பயன்படுத்துவது எல்லாம்….
கடைசிவரை ஆசிரியரை ஏமாற்றிய பெண்ணுக்கான தண்டனை என்று எதுவும் சொல்லப்படாதது அநியாயம் . எதிக்ஸ் இல்லாத படம் .
எதிர்பாராத விபத்துகளில் உயிர் இழந்த நபர்களின் உடலில் உள்ள நகைகளை திருடும் சபலம் ,
உயிருக்குப் போராடும்போதே காப்பாற்ற விரும்பாமல் நகைகளை மட்டும் திருடும் இரக்கமற்ற செயலாக மாறி ஒரு நிலையில் நகை பணத்தைத் திருடுவதற்காக பயணிகளைக் கொல்லவே விபத்துகளை ஏற்படுத்தும் மிருகத்தனமாக மாறுவதை சொல்லும் இந்தப் படத்தின் ஒன்லைன் அபாரமானது .
ஆனால் அதைப் பக்கா சினிமாத்தனமாகச் சொல்லி அதன் வீரியத்தை நீர்த்துப் போகச் செய்து விட்டார்கள்.