இந்த படவிழாவில் இதுவரை நான் பார்த்த படங்களிலேயே மனப்பூர்வமாக பாராட்டும்படி இருந்த படம் என்றால் அது இந்த The Tournament படம்தான் .
புடாஃபெஸ்ட் இன்டர்நேஷனல் ஒப்பன் செஸ் டோர்னமெண்டுக்கு வரும் ஆட்டக்காரர்கள் பற்றிய கதை . கேல் என்ற ஆட்டக்கார இளைஞன் .அவன்தான் முதல் இடத்துக்கு வருவான் என்று எல்லோரும் சொல்லும் அளவுக்கு மிகச் சிறந்த ஆட்டக்காரன். ஆனால் பக்குவக் குறைவான இளைஞன் . தன் சொல்படிதான் ஆடவேண்டும் என்று அவனை கட்டாயப்படுத்துகிறார் அவனது கோச் விக்டர். அவனுக்கு அது பிடிக்கவில்லை . அவனது கேர்ள் ஃபிரண்ட் லூ. அவளும் சிறந்த ஆட்டக்காரி .
ஆனாலும் கேல் ஒரு படி மேல். அதை அவன் சொல்லும் ஆணாதிக்கத் தன்மையோடு இருக்க , காயப்படுகிறாள் அவள். பெண் என்பதால் தனக்கு வந்த தடைகளை சொல்கிறாள் . எனினும் மனம் உடைகிறாள் . ஆனால் அவனுக்கு ஆதரவாகவே இருக்கிறாள்.
மற்றவர்களோடு அவன் ஆடும் விதம் கேலை அதிர வைக்கிறது . கடைசியில் கேலும் மேக்சும் மோதும் நாள் வருகிறது . மேக்ஸ் வென்றால் அவனை உலகமே கொண்டாடும் .
ஆனால் கேல்? அவனது வாழ்க்கை, அவனது கோச்சின் கனவு, லூவுடனான புரிதல் , சமூக அந்தஸ்து எல்லாம் உடையும் . அது கேலுக்குள் மிகப்பெரிய மன அழுதத்தை ஏற்படுத்த அவன் மிகவும் நொறுங்குகிறான்.
அந்த நிலையில் அவன் அந்த இரவில் சந்திக்கும் ஆண்ட்ரியா என்ற உற்சாகமான குறும்புக்கார துப்புரவுப் பணி செய்கிற பெண் அவனை இலகுவாக்கி எது வெற்றி என்று புரிய வைக்கிறாள் .
தமிழ் சினிமா இந்திய சினிமா உலக சினிமாக்களில் பொதுவாக ஒரு சிறுவன் கதாபாத்திரம் வைத்தால் டைரக்டர் அந்தக் கதாபாத்திரத்துக்கு தாயாகவே மாறிவிடுவார்கள் . அதை உடைத்து எந்தக் க்ளைமாக்ஸ் வேண்டுமானாலும் வைக்கலாம் . அதற்கு உரிய திரைக்கதை இருந்தால் போதும் என்று பொட்டில் அடித்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் இயக்குனர் Élodie Namer
கேலும் மேக்சும் சந்திக்கும் காட்சிகளில் சிம்பாலிக் உத்தி உட்பட அபாரமான டைரக்ஷன் .
சும்மா லாங் ஷாட் வைப்பது அழகு காட்ட அல்ல. அர்த்தத்தோடு வந்தால்தான் அழகு என்பதை உணர்த்தும் விதமாக வரும் அந்த லா ஆ ஆ ஆ ஆ ஆ ங் ஷாட்டில் நாமும் பறவையாக மாறிப் பறக்கிறோம் .
கேல் ஆக நடித்து இருக்கும் Michelangelo Passaniti இன் நடிப்பு ஆக சிறப்பான ஒன்று .சிறுவன் Adam Corbierம் பிரம்மாதமாக அசத்தி இருந்தான் . கிளைமாக்ஸ் செஸ் ஆட்டத்தில் அவன் கேலின் ஆட்டத்தை ரசித்து ஒரு தாய்மைப் பார்வை பார்ப்பான் பாருங்கள் . அதுக்காக அவன் மற்றும் இயக்குனரில் யாரை அதிகமாகக் கொண்டாடுவது என்றே முடிவு செய்ய முடியல .
குடும்பத்தோடு பார்க்க உட்கார்ந்து விடாதீர்கள் . அந்த மாதிரி காட்சிகள் அதிகம் .
அதே நேரம் ”எனக்கு 28 வயசு ஆச்சு . இன்னும் ஒரு பெண்ணைக் கூட கிஸ் பண்ணினது இல்ல” என்று ஒரு நண்பன் சொல்ல , அவனை ஹீரோ கிஸ் பண்ணப் போக ” ஹேய்… அதுக்காக நான் ஹோமோ இல்லப்பா …” என்று விலக , “பரவால்ல ஒரு முத்தம் வாங்கிக்க ” என்று அவனை ஹீரோ முத்தமிடும் காட்சியின் வெளிப்படும் பரிவு காரணமாக ,
ஒரு பிற்போக்குவாதியான எனக்குக் கூட அந்தக் காட்சி பிடித்து இருந்தது .