
கமல் சேது என்பவர் எழுதி தயாரித்து இயக்க , தீபா ஷங்கர், நேஹா , பாரதி கண்ணன் ஆகியோர் நடித்துள்ள குறும்படம் மஞ்சள் நீராட்டு விழா (ஆங்கிலத்தில் The Yellow Festival)
அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடைபெற்ற முதலாவது உலகத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது…..
சிம்லா நகரில் நடைபெற்ற முதலாவது உலகப் பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருது….
நியூயார்க் நகரில் நடைபெற்ற பத்தாவது ஹார்லெம் உலகப் பட விழா, இந்தியாவில் மும்பை நகரில் நடந்த மூன்றாவது உலகப் பட விழா, ஹைதராபாத்தில் நடைபெற்ற 19வது குழந்தைகள் திரைப்பட விழா ஆகிய மூன்று விழாக்களிலும் சிறந்த படத்துக்கான விருது .. என்று விருதுகளைக் குவித்துக் கொண்டு இருக்கும் குறும்படம் இது . (கொச்சியில் நடைபெற்ற ஒரு உலகப் படவிழாவில் மட்டும் விருது கொடுக்காமல் அனுப்பி விட்டார்கள் )
அப்படி என்ன இருக்கிறது படத்தில் ?
முகத்தில் குழந்தைத்தனம் மாறாத பள்ளிச் சிறுமி ஒருத்தி (நேஹா) பூப்பெய்தி விடுகிறாள் . கலாச்சார வழக்கப்படி அவளை வீட்டின் பின்புறத்தில் படப்பு கட்டி உட்கார வைத்து விடுகிறார்கள். ஊரைக் கூட்டி சடங்கு செய்யும் வரை படப்புக்கு வெளியே, அங்கே இங்கே அசையக் கூட அனுமதி இல்லை.
படிப்பு கெட்டுப் போகிறதே என்ற கவலை ஒரு பக்கம் இருந்தாலும், இப்படி எல்லாம் சடங்குகள் செய்விக்கப் படுவது அந்த சிறுமிக்குப் பிடிக்கவே இல்லை .
அந்த சிறுமியின் தாயார் (தீபா சங்கர்) , சிறு வயதிலேயே தனது பெற்றோரை இழந்தவர் . அவர் பெரிய மனுஷி ஆனபோது சடங்கு செய்ய என்று அவருக்கு யாரும் இல்லை . அதனால் பல அவமானங்களையும் துரதிர்ஷ்டசாலி என்ற தூற்றலையும் சுமந்தவர் அவர்.
தனக்கு வந்த அவப் பெயரில் கோடியில் ஒரு பங்கு கூட தன் மகளுக்கு வரக் கூடாது என்பது அவரின் தீர்மானம் . எனவே தன் மகளுக்கு முறைப்படி ஊரைக் கூட்டி சீரும் சிறப்புமாய் சடங்கு செய்ய ஆசைப்படுகிறார்.
ஆனாலும் இதை எல்லாம் ஏற்க விரும்பாத சிறுமி , ஒரு நிலையில் மனம் வெறுத்து வீட்டை விட்டு ஓடிப் போய் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயல … அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த மஞ்சள் நீராட்டு விழா (ஆங்கிலத்தில் The Yellow Festival)
அப்பாவி அம்மா கதாபாத்திரத்தில்
தன் நடிப்பால் பிரமிக்க வைக்கிறார் தீபா சங்கர் .
நேஹாவுக்கு நடிப்பில் அடுத்த இடம் . பாட்டியாக வரும் ரங்கமாவும் கலக்கி இருக்கிறார் .
படிக்கிற பிள்ளைகளை சடங்கின் பெயரால் முடக்கிப் போடுவது சரியா? தவறா என்ற கேள்வியை எழுப்பி அதற்கு நடு நிலையான ஒரு பதிலை சொல்லி இருக்கும் படைப்பாளி கமல் சேது,
இன்னொரு பக்கம் அதையும் மீறி…… வாசலில் போடப்படும் கோலம் என்பது தமிழ்ப் பெண்களின் கலாசாரக் கலை அடையாளமாக விளங்குவதைச் சொல்லி…
நம்மூர்ப் பெண்களின் வாழ்க்கைப் பாதையின் பயண நிகழ்வுகளை விதவிதமான கோலங்கள் மூலம் காட்டும் இடத்தில் சிலிர்க்க வைக்கிறார் .
அதுவும் கோலம் நமது மரபணு என்று சொல்லும் இடத்தில் கோலத்தின் வளைவையும் டி என் ஏ வின் வளைவையும் மேட்ச் செய்து இருக்கும் விதம் சிகரம் !
தன் அம்மா குறித்த மகளின் முடிவும் , பாட்டியை அதில் கவுரவப்படுத்தும் விதமும் அருமை .
“மற்ற நாடுகள்ல எல்லாம் வீட்டுக்குள்ள போன பிறகுதான் வரவேற்பு கொடுப்பாங்க . நம்ம நாட்டுல மட்டும்தான் வீட்டுக்கு வெளியவே வந்து நின்னு வருபவர்களை வாங்கன்னு வரவேற்போம் ” என்ற வசனம் கிளாஸ் .
இந்தப் படம் விருதுகளைக் குவிப்பதில் ஆச்சர்யம் இல்லை .யாராவது கொடுக்காமல் இருந்தால்தான் ஆச்சர்யம் !
வாழ்த்துகள் கமல் சேது !