தீரன் அதிகாரம் ஒன்று @ விமர்சனம்

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரகாஷ் பாபு , எஸ் ஆர் பிரபு இருவரும் தயாரிக்க, கார்த்தி , ரகுல் பிரீத் சிங், போஸ் வெங்கட், அபிமன்யு சிங் நடிப்பில் , 

சதுரங்கவேட்டை படத்தை இயக்கிய வினோத் எழுதி இயக்கி இருக்கும் படம் தீரன் அதிகாரம் ஒன்று . ரசிகர்களைக் கவரும் அவதாரம் உண்டா ? பார்க்கலாம் . 
 
ஒதுக்குப் புறமாக உள்ள வீடுகளில் நுழைந்து உள்ளே இருப்போரை கொடூரமாக தாக்கி அடித்து ரத்தம் சிதறக் கொன்று, 
 
பணம் நகைகளைக் கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்றால்,  தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களிலும், 
 
பலர் உயிரிழந்தும் உடல் உறுப்புகளை இழந்தும் சொத்துக்களை இழந்தும் பாதிக்கப்படுகின்றனர் . 
 
தமிழகத்தில் ஒரு எம் எல் ஏ வே இப்படி கொல்லப்படுகிறார் . 
 
பல போலீஸ் அதிகாரிகளும் மண்ணைக் கவ்விய நிலையில் வழக்கு தீரன் திருமாறன் (கார்த்தி) என்ற இளம் போலீஸ் அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுகிறது. 
 
போலீஸ்கார அப்பாவை ஐந்து வயதிலேயே இழந்து , விதவை அம்மாவால் வளர்க்கப்பட்டு போலீஸ்காரன் ஆவதை லட்சியமாகக் கொண்டு டிரைனிங்கில் பலரையும் அசத்தி, 
 
மிகச்  சிறந்த போலீஸ் அதிகாரியாக விளங்கும் நிலையில் , பக்கத்து வீட்டு படிப்பு வராத ஆனால் அழகான அதே போல கிரியேட்டிவ் திறன் உள்ள –
 
குழந்தைத்தனம் கொண்ட ப்ரியா (  ரகுல் பிரீத் சிங்) என்ற பெண்ணை  மணந்து நேர்மை காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கும் அடிக்கடி பணி மாறுதல் கொடுக்கப்பட்டு , 
 
கடைசியாக கொள்ளையர்கள் தாக்குதல் நடந்த திருவள்ளூர் மாவட்டத்துக்கு பணிக்கு வருகிறார் தீரன் , மனைவியோடு வீடு எடுத்துத் தங்குகிறார் . 
 
உடன் பணியாற்றும் இன்னொரு போலீஸ் அதிகாரி சத்யா (போஸ்வெங்கட்) மனைவி (சோனியா போஸ் வெங்கட்) மற்றும் ஒரு மகள் . 
 
கொள்ளையர்களைப் பிடிக்க , தீரன் தன் குழுவுடன் முயல , அந்தக் கொள்ளைக்காரர்கள் இவர்கள் வீட்டுக்கே குறி வைக்கிறார்கள் . 
 
 தீரனும் சத்யாவும்   இல்லாத நேரத்தில் கொள்ளையர்கள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்த , அதில் சத்யாவின் மனைவி கொல்லப் படுகிறாள் .
 
பிரியா கர்ப்பம் கலைந்து கோமா நிலைக்குப் போகிறாள் . 
 
எனினும் கடமை தவறாத தீரன் சத்யா டீம்,  இன்றைக்கு உள்ளது போல பல வசதிகள் இல்லாத நிலையில்–  வட மாநிலங்கள் முழுக்க சுற்றி, 
 
பல்வேறு மாநில போலீசாரின் கிண்டல் , கேலி மற்றும் உதவி இவற்றோடு , நல்ல உணவு உடை தங்கும் இடம் , போதுமான பணம்  கூட இல்லாத நிலையில், 
 
சம்மந்தப்பட்ட கொள்ளைக்கூட்டத்  தலைவன் ஓமாவின்  (அபிமன்யூ சிங் ) இருப்பிடம் அறிகின்றனர் . 
 
 ஊரே  இனமே நிலமே கொள்ளைக் கூட்டத்தினராக உள்ள — வறண்ட பாலைவனம் போன்ற பகுதி அது . 
 
தீரனால் அவர்களை என்ன செய்ய முடிந்தது ? பிரியாவுக்கு என்ன ஆச்சு ? தீரன் என்ன ஆனார் என்பதே ,  இந்த தீரன் அதிகாரம் ஒன்று  படம் . 
 
1995 முதல்  2005 வரை தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் மட்டுமல்லாது பல வட இந்திய மாநிலங்களிலும் கொள்ளையடிப்பின்போது ரத்த வெறிக் கொலைகள் நடத்திய, 
 
பவேரியா இன கொள்ளைக்காரர்களை எந்த மாநில போலீசாலும் பிடிக்க முடியாத நிலையில் , இன்றைய டி ஜி பி ஜாங்கிட் தலைமையில், 
 
 300 பேர் அடங்கிய தமிழக போலீஸ்  குழு ஒன்று,  வட இந்தியா சென்று பல்வேறு சிரமம் ஆபத்து வேதனைகளுக்கு இடையில், 
 
அவர்களை கண்டுபிடித்துக்  கைது செய்து கொண்டு வந்து கொள்ளைக் கூட்ட தலைவனுக்கு தண்டனை வாங்கித் தந்தனர் .
 
அதன் பிறகு அது போன்ற கொடூரக் கொள்ளைக் கூட்டங்களின் கொட்டம் அடங்கியது . பவேரியா கொள்ளைக் கூட்டத்  தலைவன் ஜெயிலிலேயே  செத்தான் . 
 
அந்த உண்மை சம்பவத்தை அப்படியே படமாக்கி , அதோடு காதல் குடும்பம் செண்டிமெண்ட் , பாடல்கள்  என்று,
 
தங்க முலாம் பூசி அதிர வைக்கும்  அட்டகாசமான படமாகக் கொடுத்து அசத்தி இருக்கிறாய் இயக்குனர் வினோத் . பிரம்மாதம் . 
 
போலீஸ்காரர் ஆவதற்கான வகுப்பறைப் பாடம் , உடல் பயிற்சி , அறிவுப் பயிற்சி,  விசாரணை செய்யக் கற்றுக் கொள்ளுதல், அதில் தனித் திறமை காட்டுதல் ,
 
அதன் பின்னர் லெட்டர் பிரிப்பது , ரைட்டராக இருந்து எப் ஐ ஆர் எழுதக் கற்றுக் கொள்வது என்று படிப்படியாக ,
 
ஓர்  உயர் அதிகாரி  தன் பதவிக்கு  தயார் ஆவதை , இதை விட சிறப்பாக எந்த  தமிழ்ப் படத்திலும்   சொன்னது இல்லை . 
 
உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்கின்றன அவை . அபாரம்!  
 
ஒரு போலீஸ் அதிகாரியின் மனைவி கொள்ளையர்களால் கொல்லப் படுவது , நாயக அதிகாரியின் காதல் மனைவி கர்ப்பமாகி ,
 
கொள்ளையர்களால் தாக்கப்பட்டு கர்ப்பம் கலைந்து கோமா நிலைக்குப் போவது .. இப்படி பார்த்த காட்சிகள்தான் என்றாலும் …
 
அந்த கொள்ளையர்கள் யார் , அவர்களின் வரலாறு, நதி மூலம் , ரிஷி மூலம் என்ன ? இந்தியாவை ஆண்ட வெள்ளைக்கார அரசு எப்படி அவர்களை நடத்தியது?
 
அது எப்படி ஒட்டு மொத்தமாக பல்வேறு இந்திய இனங்களையும் பாதித்தது? இன்று அந்த கொள்ளையர் இனத்தின் சமூக , வாழ் நிலை என்ன ?
 
அவர்கள் கொள்ளையடிக்கும் விதம் , அதன் தீவிரம் – வீரியம் , இது கற்பனைக் கதை இல்லை என்ற பதைப்பை தக்க வைப்பது … 
 
இப்படி விவரங்கள் மற்றும் விவரணைகளில் பின்னிப் பெடல் எடுத்து இருக்கிறார் இயக்குனர் வினோத் . 
 
போலீஸ் அதிகாரிகளின் மனைவியர் கொள்ளையர்களால் தாக்கப்படும் – கொலை செய்யப் படும் அந்த இடைவேளை ஆக்ஷ்ன சீக்வன்ஸ் மிரட்டி எடுக்கிறது . 
 
மேக்கிங்கில் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறார்கள் . 
 
இடைவேளைக்குப் பிறகு தமிழ் நாட்டு போலீஸ் டீம் வட இந்தியாவில் போராடும் காட்சிகள் எடுக்கப்பட்ட விதமும் அபாரம் . 
 
கார்த்தி தீரன் திருமாறனாக படம் முழுக்க வியாபிக்கிறார் . நல்ல நடிப்பு . ராட்சஷ உழைப்பு. ரிஸ்க் எடுத்து சண்டைக் காட்சிகளில் நடித்து இருக்கிறார் .
 
மணலுக்குள் முப்பது செகண்டுகள் புதைந்து எழுந்து இருக்கிறார் .  சம்மந்தப்பட்ட வரலாற்றின் நிஜ நாயகனான, 
 
 டிஜிபி ஜாங்கிட்டே கார்த்தியை கொண்டாடி விட்ட பிறகு , மேற்கொண்டு என்ன பாராட்டு வேண்டும் கார்த்திக்கு ?
 
பிரியா கேரக்டரில் குழந்தைத்தனமும்  குறும்புத்தனமுமாகக் கவர்கிறார் ரகுல் பிரீத் சிங்.  போஸ் வெங்கட் யதார்த்தம் .
 
ஒமாவாக வரும் அபிமன்யூ சிங், அவரது வலக்கரம் பன்னே சிங் ஆக வரும் ரோஹித் பத்தக், இடக் கரம் காளியாக வரும் சுரேந்தர் தாக்கூர் ,
 
வட இந்திய போலீஸ் ஆக வரும் நர ஸ்ரீனிவாஸ் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் . 
 
ஜிப்ரானின் இசை பாடல்களில் பழுதில்லாமல் இருக்கிறது . பின்னணி இசையிலோ  தீப்பிடிக்கிறது . பிரம்மாதம் . 
 
பா ஆ ஆ ஆ …என்று விரியும் லா ஆ ஆ ஆ ங் ஷாட்டுகள் ஆகட்டும் ….. , ஒட்டுமொத்த நிலப்பரப்பையும் சுருட்டி விழுங்கிக் கொண்டு பாயும் ஏரியல் ஷாட்கள் ஆகட்டும் ..
 
லட்டு மாதிரியான குளோசப் ஆகட்டும் … வீரியமாக விளையாடி இருக்கிறது சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு . 
 
2 மணிநேரம்  37 நிமிடம் ஓடும் படத்தை சுவாரஸ்யமாகப் பார்க்க முடிவதில் சிவ  நந்தீஸ்வரனின் படத்தொகுப்பும் பாராட்டுக்குரியது. 
 
சண்டைக் காட்சிகளில் அசத்தி இருக்கிறார் திலீப் சுப்பராயன் . 
 
எல்லாவற்றுக்கும்  பொறுப்பேற்று படமாக்கலில் பேருழைப்பும் பெருந்திறனுமாய் பிரம்மாதப் படுத்தி இருக்கிறார் இயக்குனர் வினோத் 
 
வழக்கமான டெம்ப்ளேட் காதல் கல்யாணம் கர்ப்பம் , கருச் சிதைவு , கோமா , கண்ணீர் காட்சிகளுக்குப் பதில் வேறு யோசித்து இருக்கலாம் . 
 
உண்மை சம்பவம் எப்படி இருந்தாலும் ஆக்ஷன் போர்ஷன் வட நாட்டிலேயே முடிவது போல இல்லாமல் , நம்ம ஊரில் தொடங்கும் கதையின் ஆக்ஷன் போர்ஷன் ,
 
ஏதோ ஒரு வகையில் இங்கு தொடர்வது போல காட்சிகள் வைத்து இருந்தால் இன்னும் ரசிகனுக்கும் அன்னியோன்யம் வந்திருக்கும்  . 
 
தீரனின் இன்றைய நிலை மற்றும் ஒரு சல்யூட் என்ற அளவில் நிகழ் காலத்தை முடித்து இருக்காமல் , முடிந்த முழு கதைக்கும் இன்றைய நிகழ்வுக்குமான  ஏதோ ஓர் இணைப்பை, 
 
படத்தில் கொடுத்து , அதன் வழியே படத்துக்கு ஒரு  துணை கிளைமாக்ஸ் கொடுத்து இருக்கலாம் . 
 
அதனால் என்ன … 
 
நிஜத்தில் நடந்ததொரு நம்ம ஊரு காவல்துறை சாகசத்தை சினிமாவில் அதே மோஸ்தரில் கொடுத்து இருக்கும் வகையில், 
 
 விறைப்பாக நிற்கும் தீரனுக்கு அடிக்கலாம் ஒரு,  டிக்கட் சல்யூட் !
 
தீரன் அதிகாரம் ஒன்று …. எஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சார் ! 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *