அல்டாரி மூவீஸ் சார்பில் சி ஆர் சலீம் தயாரிக்க, சத்யராஜ், ஸ்மிருதி வெங்கட், யுவன் , மதுசூதனன், ஹரீஷ் உத்தமன், சார்லி நடிப்பில் தீரன் எழுதி இயக்கி இருக்கும் படம் தீர்ப்புகள் .
அரசு மருத்துவராகப் பணியாற்றும் நலன்குமார் ( சத்யராஜ்) , மனைவி இறந்து விட்ட நிலையில், தனது மகளை ( ஸ்மிருதி வெங்கட்) மருத்துவராக்கி ,அவளை விரும்பும் ஒரு இளம் மருத்துவருக்கு ( யுவன்) திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்து , நிச்சயமும் செய்கிறார் .
திருமணம் நடக்க இருந்த நிலையில் அந்தப் பெண் ஒரு காமுகக் கும்பலால் கற்பழிக்கப்பட்டு , அவளின் காதலனும் தாக்கப்பட, உடைந்து போகிறார் நலன் .

குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை வாங்கித் தர அவர் எடுத்த முயற்சிகள் எல்லாம், காமுகனின் ஆள் பலம்- பண பலம் கொண்ட அப்பா, பணம் வாங்கிக் கொண்டு அநியாயத்துக்குத் துணை போகும் காவல் துறை மற்றும் நீதித் துறை ஆட்களால் வீழ்த்தப்பட ,
முதன்மைக் குற்றவாளிகளை சட்டென்று கொன்று விடாமல் ஒரு மருத்துவராக நலன் எப்படி துள்ளத் துடிக்க நலன் பழி வாங்குகிறார் என்பதே இந்தப் படம்.
குற்றவாளிகளை ஒரு மருத்துவராக நலன் எப்படி தண்டிக்கிறார் என்பதுதான் திரைக்கதையின் முக்கிய அம்சம். அது எப்படி என்று தெரிந்த பிறகும் கூட காட்சிகளை சுவாரஸ்யமாக அமைத்து பரபரப்பாக விறுவிறுப்பாக சிறப்பாக இயக்கி இருக்கிறார் இளம் இயக்குனர் தீரன். அருமை
படத்தில் முதன் முதலில் கவனம் கவர்வது கருட வேகா ஆஞ்சியின் ஒளிப்பதிவுதான் .

துறுதுறுவென்று நகர்ந்து கொண்டே இருக்கும் ஷாட்கள், ஈர்ப்பான ஃபிரேம்கள் என்று இயக்குனர் – ஒளிப்பதிவாளர் கூட்டணி அசத்தி இருக்கிறது .
அப்பாவான ஆக்ஷன் ஹீரோ கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்துள்ளார் சத்யராஜ். அது ஆச்சர்யம் இல்லை . அவர் எந்தப் படத்தில் சிறப்பாக நடிக்கவில்லை.?ஆனால் தோற்றப் பொருத்ததிலும் அசத்தலாக ஜொலிக்கிறார் . மீண்டும் ஆக்ஷன் ஹீரோவாக களம் இறங்கலாம். அருமை.
சார்லி, ரேணுகா உட்பட மற்ற நடிக நடிகையரும் சிறப்பு.
நவ்ஃபல் அப்துல்லாவின் படத் தொகுப்பில் படம் வேகமாகப் போகிறது. தினேஷ் சுப்பராயனின் சண்டைக் காட்சிகளும் சிறப்பு .

அடுத்தடுத்து வரும் காட்சிகளை எளிதாக ஊகிக்க முடிகிறது . ஆனாலும் அது வரும்போது மனம் நிறைகிறது . அந்த அளவுக்கு உணர்வுப் பூர்வமாக காட்சிகளை உருவாக்கிக் கொண்டு போய், படத்தைக் காப்பாற்றி இருக்கிறார் இயக்குனர் தீரன் .
மொத்தத்தில் , தீர்ப்புகள் விற்கப்படலாம்… வாங்கலாம், டிக்கட் !