ஹரி சில்வர் ஸ்க்ரீன்ஸ் சார்பில் சார்லஸ் இம்மானுவேல் தயாரிக்க,
ராசு ரஞ்சித், சூரரைப் போற்று புகழ் அபர்ணா முரளி , சிவப்பு மஞ்சள் பச்சை புகழ் லிஜா மோல் ஜோஸ் , ஈசன் ஆகியோரின் நடிப்பில்
ராசு ரஞ்சித் இயக்கி இருக்கும் படம் தீதும் நன்றும் .
தீதா? நன்றா? பேசுவோம்.
வட சென்னையின் ஏழ்மைப் பகுதியில் பிறந்து வளர்ந்து திருட்டுத் தொழிலில் ஈடுபட்டுப் பிழைக்கும் நண்பர்கள் சிவா (ராசு ரஞ்சித்) தாஸ் ( ஈசன்) .
இருவரில் தாஸ் , தமிழ் ( அபர்ணா முரளி) என்ற பெண்ணைக் காதலிக்கிறான்.
திருமண நிச்சய சமயத்தில் அவளது வீட்டுக்குள் புகுந்து அவளைத் தூக்கி வந்து , காதலித்த தனது நண்பனுக்குத் திருமணம் செய்து வைக்கிறான் சிவா.
திருமணத்துக்குப் பிறகு , கணவன் திருட்டுத் தொழிலுக்கு போவதை எதிர்க்கிறாள் தமிழ்.
சிவாவுக்கும் சுமதி என்ற பெண்ணோடு (லிஜா மோல் ஜோஸ்} காதல் வருகிறது.
ஒரு நிலையில் சுமதியின் எதிர்ப்பு அதிகமாக, அவளிடம் திருந்தி விட்டதாக தாஸ் சொல்கிறான் .
அப்படியே திருந்தி வாழ, குழந்தைக்கு உடல் நிலை சரி இல்லாத நிலையில் சிகிச்சைக்கு பெரும்பணம் தேவைப் பட ,
அதற்காக மீண்டும் நண்பர்கள் திருட்டு வேலைக்குப் போக, அப்புறம் நடந்தது என்ன என்பதே இந்த தீதும் நன்றும்.
இப்படி, பழகிய கதைதான் என்றாலும் மேக்கிங்கில் அசத்தி இருக்கிறார்கள்.
உதாரணமாக மீன் மார்க்கெட் வேலைப் பரபரப்பு, குறுகிய தெருக்களில் பெருகிய மனிதர்கள்,
வறுமையும் ஆபத்தும் சேர்ந்து உருவாகும் தைரியம், ஏழை மக்களின் எளிய சந்தோஷங்கள்,
வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொள்ளும் விதம் , இல்லாமையிலும் கம்பீரம், நேர்மை …
எல்லாம் அருமை அருமை அருமை.
அனைவரின் நடிப்பும் சிறப்பு. அந்த தாதா வில்லன் உட்பட .
டைட்டில் முதற் கொண்டே பின்னணி இசையில் ஈர்க்கிறார் இசை அமைப்பாளர் சத்யா . பாடல்களும் பழுதில்லை.
கெவின் ராஜின் ஒளிப்பதிவு சூழலை யதார்த்தமாக உணர வைக்கிறது .
இன்னும் வித்தியாசமான- யூகிக்க முடியாத திரைக்கதை அமைத்து இருந்தால் இன்னும் தீது குறைந்து மேலும் நன்று நிறைந்து இருந்திருக்கும்.