கேரளாவில் இத்திதானம் என்ற ஊரில் பேக்கரி கடை நடத்தும் ஜோசப் விஜய்( விஜய்) , தன் மகள் நிவி என்கிற நிவேதாவுடன் வசித்து வருகிறார் .
பள்ளியில் படிக்கும் நிவியின் கிளாஸ் டீச்சருக்கு ஜோசப் மீது ஓர் ஈர்ப்பு ஏற்படுகிறது .
அங்கு உள்ள ஒரு தாதாவின் ஆட்கள் டீச்சரிடம் அநாகரிகமாக நடந்து கொள்ள, அவர் டீச்சர் தட்டிக் கேட்க , அவரை ரவுடிகள் அசிங்கப்படுத்த, ஜோசப் அந்த ரவுடிகளைக் கண்டிக்கிறார் .
ரவுடிகள் நிவியைக் கொல்ல முயல, விஷயம் போலீஸ் ஸ்டேஷன் வரை போகிறது . ஸ்டேஷனில் ஒரு மலையாள போலீஸ் அதிகாரி ஜோசப்பைப் பார்த்து ”நீ ஐ பி எஸ் விஜயகுமர்தானே” என்று கேட்கிறார் .
ஜோசப் மறுக்கிறார் .
ஜோசப் புகாரை வாபஸ் வாங்கிய பின்னரும் தாதாவின் ஆட்கள் அவரை அடிக்க வர, அவரோ ரவுடிகளை பின்னிப் பெடல் எடுக்கிறார் .
அது சாதாரண பேக்கரி ஓனரின் அடியாக இல்லை
ஜோசப் பற்றி டீச்சர் ஆராய, அவரது நிஜப் பெயர் விஜயகுமார்தான் என்பதும் அவர் சென்னையில் மிகப் பெரிய போலீஸ் அதிகாரியாக இருந்தவர் என்பது தெரிய வருகிறது .
குழந்தைகளை ஊனமாக்கி தெருவில் பிச்சை எடுக்க வைக்கும் ரவுடிகள் முதற் கொண்டு பல தரப்பட்ட சமூக விரோதிகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருநதிருக்கிறார் அவர் .
குற்றவாளிகளை அடித்த வகையில் விஜயகுமாருக்கும் ஒரு இளம் பெண் டாக்டருக்கும் (சமந்தா) மோதல் வந்து பின்னர் காதல் வருகிறது.
அவர்களுக்குள் திருமணம் நடந்து ஓர் பெண் குழந்தையும் பிறக்கிறது.
இந்த நிலையில் ,
வேலைக்கும் போகும் ஓர் ஏழை இளம்பெண்ணை சிலர் கடத்தி கொடூரமாக தொடர் கற்பழிப்பு நிகழ்த்தி , கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்து விடுகிறார்கள் .
குற்றவாளி யார் என்று விஜயகுமார் விசாரிக்கும்போது அது அமைச்சரின் (இயக்குனர் மகேந்திரன்) மகன் என்பது தெரிய வருகிறது .
அவனைக் கைது செய்து சட்டத்தின் முன்னால் நிறுத்தினால் அவன் தப்பித்து விடுவான் என்பதால் வேறொரு ‘காரியம்’ செய்கிறார் விஜயகுமார் .
பதிலுக்கு பொங்கி எழும் அமைச்சர் தனது கொடூர முகத்தைக் காட்ட விஜயகுமாருக்கு பல பாதிப்புகள் .
இந்த விஷயம் எல்லாம் டீச்சருக்கு தெரிய வரும நிலையில் , விஜயகுமரைப் பழிவாங்கும் வேலையில் மீண்டும் தீவிரமாகிறார் அமைச்சர் .
விஜயகுமார் அமைச்சர் மோதலின் முடிவு என்ன ? என்பதே இந்த தெறி.
ஜோசப் விஜய் மற்றும் விஜயகுமார் என்று இரண்டு குணாதிசயங்களில் தோற்றம் , உடல் மொழிகள் , குரல் என்று வித்தியாசம் காட்டி தெறிக்க தெறிக்க நடித்து இருக்கிறார் விஜய் .
தோற்றப் பொலிவு மேலும் கூடி இருக்கிறது .
சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் பல காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்து இருக்கிறார். நடனக் காட்சிகளில் அவருக்கே உரிய ஸ்டெப்களும் குறும்பும் கொப்பளிக்கிறது .
கற்பழிக்கப்பட்ட பெண்ணை பார்த்து குமுறும் காட்சி , வீட்டுக்குள் நடக்கும் ரணகளத்தில் குமையும் காட்சி இப்படி பல காட்சிகளில் நடிப்பும் சிறப்பு .
வகுப்பறையில் ரவுடிகளை மிரட்ட, பிரம்பால் மேஜையில் அடிக்கும் காட்சியில் தெறிக்கிறது திரை !
இறுதிக் காட்சியில் தனது மகளையும் திரைக்குள் அறிமுகப்படுத்தி இருக்கிறார் .
வில்லனாக இயக்குனர் மகேந்திரன் .!
படத்தில் அவர் அறிமுகமாகும் ஷாட்டே அசத்துகிறது . விஜய் வீட்டுக்குள் அழகம் பெருமாள் மற்றும் இன்னொருவர் துணையுடன் உள்ளே நுழையும்போது,
குளோசப் ஷாட்டில் ஒரு அசத்தலான அலட்சியப் புன்னகை கொடுக்கிறார் பாருங்கள் . THE EXPRESSION !
இயக்குனர் மகேந்திரனின் இயல்பான உடல் மொழிகளில் தானாகவே ஒரு கண்ணியமும் மேட்டிமைத் தன்மையும் இருக்கும் . அயோக்கியத் தனமான கேரக்டர் என்றாலும்,
அமைச்சர் என்ற கேரக்டரை அவர் கையாண்டதில் , அவரது அந்த சொந்த உடல்மொழிகள் பெரும் உதவி செய்து இருக்கிறது .
வசனம் பேசும் மாடுலேஷனும் அருமை (சூப்பர் ஸ்டார் ரஜினியின் வசன மாடுலேஷனே மகேந்திரன் கொடுத்ததுதானே)
இவரது கேரக்டர் இன்னும் பலமாக இருந்து இன்னும் கொஞ்ச நேரம் இவர் படத்தில் இருந்திருக்கலாமே என்று ஏங்க வைக்கிறார் மகேந்திரன்.
மீனாப் பொண்ணு பெத்த பொண்ணு குட்டிக் குழந்தையாக அசத்தி இருக்கிறது. அழகு மற்றும் அழகான நடிப்பு .
ரவுடியும் சீறும்போதும் , கிளைமாக்சில் வில்லனிடம் சாரி சொல்லச் சொல்லும் போதும் என மனம் கவர்கிறார் பேபி நைனிகா
சமந்தா ஹோம்லியான அழகு ப்ளஸ் செண்டிமெண்ட் பதுமையாக மனம் கவர்கிறார் . I AM COMPLETE காட்சி அசத்தல் சமந்தா! ஏமி ஜாக்சன் தனது கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார் .
காமெடி காட்சிகளில் விஜய்யுடன் சேர்ந்து அசத்தி இருக்கிறார் ராஜேந்திரன் .( எ.கா ;- ” என்னை விட பெட்டரா நீங்களே யோசிச்சிருப்பீங்க . சொல்லிடுங்க சார் “)
கம்பீரப் போலீஸ் அதிகாரியாக பிரபு, விஜய்யின் அம்மாவாக ராதிகா என்று பிற பல, பிரபல முகங்களும் உண்டு.
ஜார்ஜ் வில்லியம்சின் ஒளிப்பதிவு படத்துக்கு குளுமையும் வண்ணங்களும் காட்சியின் உணர்வுகளுக்கு அர்த்தமும் சேர்க்கிறது ..
சென்னை பாரிஸ் கார்னரில் (?) நாடு ரோட்டில் எடுக்கப்பட்டு இருக்கும் அந்த சண்டைக் காட்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் , ஒளிப்பதிவாளர் உட்பட ஒட்டு மொத்த யூனிட்டும் சபாஷ் வாங்குகிறது .
விக்ரம் படத்தில் இடம் பெற்ற வனிதா மணி வன மோகினி பாடலின் தொகையறா மெட்டு எட்டிப் பார்க்கும் பாடல் உட்பட,
ஜி வி பிரகாஷ் குமார் இசையில் எல்லா பாடல்களும் பிரபலமாகி விட்டது என்றாலும் ”உன்னாலே உன்னாலே என் ஜீவன்” மெலடி . பாடல்.. ஆகா ! சுகமான மயிலிறகு வருடல் . நைஸ் !
சில பாடல்களில் பல்லவியில் இருக்கும் ஈர்ப்பும் டெம்ப்போவும், சரணத்துக்குள் போகப் போக இறங்குகிறது பிரகாஷ்குமார்….தேவை கவனம் !
பின்னணி இசை சுமார்தான் என்றாலும் ”’தரா தரா ஹேய்…..தரா தரா ஹேய்….” என்ற அந்த தீம் மியூசிக் செம செம !
வசனத்திலோ ஒரு காடியாகவோ சொல்ல வேண்டிய சில விசயங்களைக் கூட விஷுவலாக ஷார்ப்பாக சொல்ல மட்டுமே திரைக்கதை அனுமதித்து உள்ள நிலையில்,
அந்தோணி எல். ரூபனின் படத் தொகுப்பும் முக்கியத்துவம் பெறுகிறது .
காமெடி , செண்டிமெண்ட் , காதல், இளமை , குறும்பு என்று எல்லா ஏரியாக்களிலும் சிக்சர் அடிக்கிறது இயக்குனர் அட்லீயும் ரமணகிரி வாசனும் எழுதியுள்ள வசனங்கள் .
“இங்க கேரளாவுல என்ன பண்றீங்க ? “
“கேரளாகாரங்க எல்லாம் எங்க ஊர்ல வந்து டீக்கடை வைக்கிற மாதிரி, நான் இங்க வந்து ஒரு பேக்கரி வச்சுப் பொழைக்கிறோம் “
— ஒரு படச் சோற்றுக்கு ஒரு வசன பதம் !
தவிர மேலே குறிப்பிட்டதைப் போல, சமந்தா மற்றும் ராஜேந்திரனின் நடிப்புக்கு பலம் சேர்ப்பதும் வசனங்களே !
“யோவ் மொட்டை “
“சொல்லுங்க நர்ஸ் “
“நான் நர்ஸ் இல்ல . டாக்டர் “
“என் பேரும் மொட்டை இல்ல . ராஜேந்திரன்”
— இது இன்னொரு பதம்
அதே போல மகேந்திரன் ரசித்துச் சொல்லும் “அவனுக்கு சாவை விட பெரிய தண்டனை தரனும் ” வசனம், ஆழம்!
வழக்கமாக விஜய் படங்களின் ஒப்பனிங் சாங் மாஸ் சாங்காக இருக்கும் . அதற்கு மாறாக ஈனா மீனா டீகா பாடலை வைத்த நிலையில்,
அதை மொத்தமாக போட்டு முடிக்காமல் மூன்றாகப் பிரித்து போட்ட இடத்தில் ஆரம்பிக்கிறது அட்லீயின் புத்திசாலித்தனம்.
விஜய் ரசிகர்களுக்கான கமர்ஷியல் விசயங்களையும் கொடுத்த அதே நேரம் , குடும்ப உறவுகளின் முக்கியத்துவம், காதல் என்று மற்ற ஏரியாக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து,
வழக்கமான விஜய் பட இயக்குனர்களிடம் இருந்து தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்கிறார் அட்லீ.
குறிப்பாக சமந்தா கதாபாத்திரத்தின் தந்தையை சமாதானப்படுத்தும் விதம் , கல்யாணம் ஆகி வீட்டுக்குள் காலடி வைக்கும் மனைவிக்கு தரும் ஆரத்தி வரவேற்பை மனைவியின் குடும்பத்தார்க்கும் கொடுக்கும் காட்சி,
— என்று ஆங்காங்கே பல சுந்தரக் கவிதைகள் !
அம்மாவின் மரணத்துக்குக் காரணமாகி விட்டு அழும் சிறுவனுக்கு அரசியல்வாதி பத்து ரூபாய் கொடுத்து சாக்லேட் வாங்கி சாப்பிடச் சொல்ல,
அந்த அரசியல்வாதி பிணத்தின் முன்னால் சிறுவன் சாக்லேட் சாப்பிடுவது ஆர்ப்பரிப்புக் கவிதை .
படத்தின் ஆகத் தரமான விஷயங்கள் இவை.
ஒரு காட்சி ஓடிக் கொண்டிருக்கும்போது அடுத்து என்ன நடக்கும் என்று நமக்கு ஒரு எண்ணம் தோன்ற , அது வராது என்று நாமே நம்பும் அளவுக்கு, நிகழ்வில் இருக்கும் காட்சியை அட்டகாசமாகச் சொல்லி மயக்கி விட்டு ,
திடும்மென ஒரு அதிரடியைக் கொண்டு வந்து, அதிர அடிப்பதில் அட்லீயின் கில்லாடித்தனம் தெரிகிறது..
காதலியின் குடும்பத்தாரை சந்திக்கும் காட்சியும் I AM COMPLETE காட்சியும் அதற்கு உதாரணம்.
அதுவும் I AM COMPLETE காட்சியில் அந்த வசனம் ஆரம்பத்தில் சொல்லப் படும்போது எழும் பூரண உணர்வும் கடையில் மீண்டும் யோசித்துப் பார்க்கும் போது எழும் சோக கனமும்
அட்லீயின் டைரக்ஷன் திறமைக்கு எடுத்துக்காட்டு . (பல பயபுள்ளைக டைரக்ஷனுக்கும் வசனத்துக்கும் சம்மந்தம் இல்லன்னு நினைசுகிட்டு இருக்கே! )
கை கால் ஊனமாக்கப்பட்டு பிச்சை எடுக்கும் குழந்தைகள் , கொடூர கற்பழிப்புக்கு ஆளாக்கப்படும் இளம்பெண் என்று… நாம் பல படங்களில் பார்த்த காட்சிகளைக் கூட,
படமாக்கிய முறையில் உணர்வுப் பூர்வமாகக் கொடுத்து கவனம் கவர்கிறார் அட்லீ .
படத்திலேயே தெறிப்பான பாடலான பாடலான ராங்கி ராங்கி பாடலை கடைசியில் கொசுறாக சப் டைட்டிலோடு போடுவதற்குப் பதில் படத்துக்குள் இணைத்து இருக்கலாம் .
இப்படியாக,
பழகிய கதைதான் .ஆனால் கதையை விட திரைக்கதை ,நன்றாக இருக்கிறது .
வசனம் ஃபிரஷ்ஷாக சிறப்பாக அமைந்து பலம் சேர்க்கிறது .
இவை எல்லாவற்றையும் ஒன்று கூட்டி படமாக்கிய விதத்தில் – FILM MAKING இல் படம் அசத்துகிறது.
அந்த வகையில் ஒரு பிலிம் மேக்கராக ஜமாய்க்கிறார் அட்லீ .