பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை தெய்வமாக வழிபடும் தேவர் இன மக்கள் வாழும் தென்மாவட்டங்களின் பின்னணியில், 1990களின் காலகட்டத்தில் நிகழும் கதை .
போஸ் பாண்டி தனது நல்ல குணத்தால் மக்களிடம் செல்வாக்கு பெறுவதை உக்கிர பாண்டியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை . இதற்கிடையே போலீஸ் ஸ்டேஷனை தாக்கி தனது மகனை விடுவித்த குற்றத்துக்காக உக்கிர பாண்டி ஜெயிலுக்கு போக, அந்த கால கட்டத்தில் போஸ் பாண்டியின் புகழ் பெருகி விடுகிறது . அது பொறுக்காத உக்கிரபாண்டி போஸ் பாண்டியிடம் பிரச்னை செய்து அவனை கோபப்படுத்தி சண்டைக்கு வர வைத்து ,தனது மகன்களை வைத்து அநியாயமாக போஸ் பாண்டியை கொன்று விடுகிறான்.
அண்ணனைக் கொன்றவர்களை பழிவாங்க முடியாத பேடி என்ற ரீதியில் திலகரை, அவனது அம்மாவும் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அண்ணியும் தூற்ற…. தனது பயம் , இரக்க சுபாவம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு திலகரும் வன்முறைப் பாதைக்கு போகிறான் . தனது அண்ணனைக் கொன்ற மூவரையும் கொன்று தலைகளை எரித்து சாம்பலை ஊர் முழுக்க தூவுகிறான் .
போஸ் பாண்டியின் மனைவிக்கு குழந்தை பிறக்கிறது . அண்ணன் மகனைஅண்ணனின் மறு பிறப்பு என்றே நம்பும் திலகர், , இனி வன்முறைப் பாதையை விடுத்து பிள்ளையை நன்றாகப் படிக்க வைத்து , அண்ணன் தனக்கு உருவாக்கித் தர விரும்பிய உயர்ந்த அந்தஸ்தை, அண்ணன் மகனுக்கு தர விரும்புகிறான் .
ஆனால் வன்முறை உருவேறிய உக்கிரபாண்டியோ
திலகர் வம்சத்தையே ஒரேயடியாக அழிக்க திட்டமிட , அடுத்து என்ன நடந்தது என்பதே திலகர் .
படத்தின் ஆரம்பக் காட்சிகள் தேவர் மகன் படத்தை நினைவூட்டுகின்றன. போஸ் பாண்டியாக வரும் கிஷோரும் சற்றே கமல்ஹாசனை ஞாபகப்படுத்துகிறார் . ஆனால் அவரே டப்பிங் பேசி இருக்க , முக்குலத்து ஸ்லாங்கில் கன்னட வாசனை வருவது பரிகாரம் இல்லாத திருஷ்டி .
நாயகன் துருவா ஆரம்ப அப்பாவித்தனம் , பிறகு பழிவாங்கத் துடிக்கும் வைராக்கிய வெறி இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை உணர்ந்து நடித்துள்ளார் . கிளைமாக்ஸ் காட்சியில் மனம் கனக்க வைக்கிறார்.
நெல் குதிருக்குள் லேப் டாப்பை வைத்த மாதிரி இருந்தாலும், சமாளித்துக் கொண்டு நடிக்கிறார மிருதுளா .
ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கும் நடிகை நீது சந்திராவின் நடன அசைவுகள், வித்தியாசமாக சிறப்பாக இருக்கின்றன.
போஸ் பாண்டி — அவரது மனைவி இருவரின் வாழ்க்கை , மற்றும் சீமந்தக் காட்சிகளை உயிர்ப்புடன் எடுத்து இருக்கிறார் இயக்குனர் பெருமாள் பிள்ளை . கிளைமாக்ஸ் காட்சியையும் பதைக்க வைக்கும்படி படமாக்கி இருக்கிறார்
உக்கிர பாண்டியின் ஆட்கள் தனது வாழைத்தோப்பை ஒட்டு மொத்தமாக அழித்து விட , அதை பார்த்து கண்ணீர் விடும் போஸ் பாண்டி ” ஊருல யார் வீட்டுல விசேஷம்னாலும் நம்ம வீட்டுல இருந்து வாழைத் தார் போகும் . ஆனால் இன்னிக்கு நம்ம வீட்டு விசேஷத்துக்கு வெளிய இருந்து வாழைத் தார் கொண்டு வர வேண்டியதா போச்சே” என்று கலங்குவது, அச்சு அசல் வாழ்க்கை !
நீண்ட இடை வெளிக்கு பிறகு மீண்டும் தாலி செண்டிமெண்ட் படத்தில் ‘டால்’ அடிக்கிறது.
அம்மாவும் அண்ணியும் சொன்ன ஒரு வார்த்தை, கண்ணியமான வாழ்வுக்கு ஆசைப்பட்ட திலகரையும் வன்முறைப் பாதைக்கு திருப்பி விட, ஒரு நிலையில் திலகர் ” எல்லாரும் என்னைப் பார்த்து பயப்படும் அதே நேரம் நானும் யாரைப் பார்த்தாலும் பயந்து பயந்து வாழ வேண்டியதாப் போச்சு . அதனால என் வாழ்க்கையே போச்சு ” என்று உடைந்து போய் பேச, அவனது அம்மா நொறுங்கிப் போய் திலகரின் காலில் விழும்படியாகக் குனிந்து திலகரிடம் மன்னிப்பு கேட்கும் காட்சி…. படத்தின் சிகரம்.
போலீஸ்காரராக ஒரு கதாபாத்திரத்திலும் நடித்திருக்கும் ராஜேஷ் யாதவ்வின் ஒளிப்பதிவு கதை நிகழும் சூழலை சிறப்பாக உணர வைக்கிறது . கண்ணனின் பாடல் இசை ஒகேதான். ஆனால் பின்னணி இசை ஒரு படி மேல்.
எடிட்டருக்கும் டைரக்டருக்கும் மனஸ்தாபமோ என்று எண்ணும் அளவுக்கு படத்தின் பல ஷாட்கள் அளவுக்கு மீறிய கால அளவில் நீள்கின்றன . இன்னும் கூட ஒழுங்காக டிரிம் செய்து இருந்தால் படத்தின் வேகம் அதிகரித்து இருக்கும்.
ஆனாலும் என்ன…. மண் மணம் , பழக்க வழக்கங்கள் சம்பிரதாயங்கள் இவற்றை நேட்டிவிட்டியோடு சொன்ன விதத்தில் கவனிக்க வைக்கிறது படம்.
திலகர்…. தென்மாவட்டத்துக் கலாச்சார ராஜ்ஜியம்!