பெரும் போராட்டத்துக்கு பிறகு, கதாநாயகனாக ஜெயித்திருக்கும் எம்ஜிஆர், தன்னை மென்மேலும் தக்க வைத்துக் கொள்ள போராடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்….
1951 ஆம் ஆண்டில் ஒரு நாள் !
அவர் கதானாயகானாக நடித்துக் கொண்டிருக்கும் அந்தமான் கைதி என்ற படத்தில் ஒரு காட்சியில் சிகரெட் பிடிப்பது போல நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கிருஷ்ணன் சொல்ல, தயங்கியபடியே மறுக்கிறார் எம்ஜிஆர். “சிகரெட் பிடிப்பது போல நடிக்க நான் விரும்பவில்லை ” என்கிறார் . கோபப்பட்ட இயக்குனர் ”இந்தக் காட்சிக்கு அப்படி நடிப்பது அவசியம் ”என்று கூறுகிறார் .
இயக்குனரின் கோபத்துக்கு ஆளாவது பின்னடைவு என்று தெரிந்தும், கொள்கை உறுதியோடு முடியாது என்று மறுக்கிறார் எம்ஜிஆர் . கடைசியில் ‘எம் ஜி ஆர் அந்தக் காட்சியில் புகைக்கத் தேவை இல்லை . கையில் சும்மா சிகரெட் வைத்துக் கொண்டு நடித்தால் போதும்’ என்று முடிவாக , அப்படியே அந்தக் காட்சி எடுக்கப்பட்டது .
பின்னர் எம் ஜி ஆர் புரட்சி நடிகராகிறார். மக்கள் திலகம் ஆகிறார் . பொன்மனச் செம்மலாகவும் ஆகிறார் . குடியிருந்த கோயில் படத்தில் ஒரு புதிய கவிஞரை அறிமுகப்படுத்துகிறார்… ”இவர் எழுதுறது, namma பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் எழுதுற மாதிரியே இருக்கு ” என்ற பாராட்டோடு !
”நான் யார் நீ யார்..” என்று தொடங்கும் அந்தப் பாடலை எழுதியவர் புலவர் புலமைப் பித்தன் . அதன் பின்னர் எம்ஜி ஆருக்கு நிறைய பாடல்களை எழுதிய புலமைப் பித்தனை அரசவைக் கவிஞர் ஆக்கி அழகு பார்த்தார் எம்ஜிஆர் .
அதற்காக எம் ஜிஆருக்குப் பலவகையில் பெருமை சேர்த்தார் புலமைப் பித்தன் . அதில் மிக முக்கியமான ஒன்று , தமிழ் இனத் தலைவர் மேதகு பிரபாகரனை தன் வீட்டில் ஒருவராக வைத்து அன்பு பாராட்டியது. புலமைப் பித்தனின் பெயர் இல்லாமல் பிரபாகரனின் தமிழ்நாட்டு வாழ்க்கையையும் அவர் உரம் பெற்ற காலத்தையும் எழுத முடியாது .
புலமைப் பித்தனின் மகன் புகழேந்தி .
அந்தப் புகழேந்திக்கு மகன் பிறந்த போது, அந்தப் பிள்ளைக்கு திலீபன் என்று பெயர் வைத்தார் புலமைப் பித்தன்.
திலீபன் ? அண்ணல் காந்தியின் வழியில் — எந்த வற்புறுத்தலும் இல்லாமல் — தானே முன் வந்து நிஜமான உண்ணாவிரதம் இருந்து, இழையாக இழையாகக் காற்றில் உயிர் கரைய, மறைந்து போன — விடுதலைப் புலிகள் இயக்கத்தின் — கொள்கை வீரர். முழுப் பெயர் திலீபன் என்கிற ராசையா பார்த்திபன் .(தங்களது இந்த அகிம்சைப் போராட்டதுக்கு எந்தப் பயனும் இல்லாத நிலையில்தான், முழுமையான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தது விடுதலைப் புலிகள் இயக்கம் )
புலமைப் பித்தனின் பேரனான திலீபன் சினிமாவில் நடிக்கிறார் .
எவன் என்ற படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். அந்தப் படம் இறுதிக்கட்டப் பணிகளில் இருக்கிறது . திலீபன் எதிர்நாயகனாக நடித்திருக்கும் படம் பள்ளிக்கூடம் போகாமலே . இந்தப் படம் வரும் 30ஆம் தேதி திரைக்கு வருகிறது.
எவன் படத்தில் ஒரு காட்சியில் சிகரெட் புகைக்கும்படியாக நடிக்க வேண்டும் என்று இயக்குனர் சொன்னபோது திட்டவட்டமாக மறுத்து விட்டாராம் திலீபன் .
காரணம் ?
” அடிப்படையில் நான் சிகரெட், மது என்று என்ற கெட்ட பழக்கமும் இல்லாதவன் . படத்தில் நடிக்கும்போதும் அப்படியே இருக்க விரும்பினேன் . தவிர எனக்கு ரோல் மாடல் எம் ஜி ஆர் அவர்கள்தான் . அவர் இறந்து ஆறு வருடம் கழித்துதான் நான் பிறந்தேன் .
ஆனாலும் தாத்தாவுக்கும் அவருக்குமான பாச உறவு எனக்கு சொல்லப்பட்டது. அதே நேரம் அவரது படங்களைப் பார்த்தும் அதில் அவர் சொன்ன கருத்துகளாலும் ஈர்க்கப்பட்டேன் . அவரையே எனது ரோல் மாடலாகக் கொண்டேன் .
எனவே நான் கதாநாயகனாக நடிக்கும் எவன் படத்தில் ஒரு காட்சியில் ‘சிகரெட் பிடித்துக் கொண்டு நடிக்க வேண்டும்’ என்று இயக்குனர் சொன்னபோது நான் மறுத்தேன் . அவர் வற்புறுத்தினார் . கோபம் காட்டினார். ஆனாலும் நான் என்பது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தேன் . அதை பணிவோடு தன்மையாக சொன்னேன் . ஒரு நிலையில் என்னை புரிந்து கொண்ட இயக்குனர் பாராட்டினார் . என் விருப்பப்படியே காட்சியை எடுத்தார் .
இந்த ஒரு படம் மட்டும் இல்லை . படங்களில் சிகரெட் பிடிப்பது மது அருந்துவது போல நடிக்கக் கூடக் கூடாது என்ற விசயத்தில் நான் தொடர்ந்து உறுதியாக இருப்பேன் ” என்கிறார் திலீபன் .
படத்தின் பாதிக்கும் மேலான காட்சிகளில் டாஸ்மாக் பாரிலேயே வாழ்வது போன்ற கேரக்டர்களில் கூட, பாய்ந்து பாய்ந்து நடிக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில்…. ஆரம்பத்திலேயே திலீபன் காட்டும் கொள்கை உறுதி பாராட்டத் தக்கது .
வாழ்த்துகள் திலீபன் !