படம் ரசிகர்களுக்கு உற்சாகக் கதவை திறக்குமா? பார்க்கலாம்.
உயர்தர மதுபான விடுதி ஒன்றில் முக்கியப் பொறுப்பில் பணியாற்றுபவர்கள் ஜான் (வீரவன் ஸ்டாலின்). அவனது நண்பனும் மற்றும் சக ஊழியனுமான ஹுசைன் (நாராயணன்).
ஆண்களும் பெண்களும் ஆடிப் பாடிக் கூடிக் குடிக்கும் அந்த விடுதியில் பணியாற்றும் இருவருக்கும் வேலையே குடிப்பதுவும் , அளவுக்கு மீறிய போதையில் மயங்கும் பெண்களை அனுபவிப்பதும்தான்.
அன்றைய தினம் அந்த விடுதிக்கு வரும் சாரு (தன்ஷிகா) நிறைய குடிக்கிறாள். போதையில் மயங்குகிறாள். ஜான் , ஹுசைன் இருவரும் அவளுக்கு குறி வைக்கிறார்கள். ஒரு நிலையில் கழிவறையில் இருந்து மயக்கம் தெளிந்து எழும் சாரு, தான் கற்பழிக்கப்பட்டு இருப்பதாக உணர்கிறாள் . எல்லோரும் போய் விட்ட நிலையில் தன்னை ஜான் அல்லது ஹுசைன் தான் கற்பழித்து இருப்பார்கள் என்று நம்புகிறாள் .
இதற்கிடையில் ஜானின் மனைவி திவ்யா(அஞ்சனா கீர்த்தி )விடம் இருந்து ஜானுக்கு வீட்டுக்கு வரச் சொல்லி போன் வந்து கொண்டிருக்கிறது .
தம் இருவரில் யாராவது ஒருவர் போதையில் சாருவை கற்பழித்து இருக்கலாம் என்று இருவருக்கும் தோன்றினாலும் அது உண்மையா என்பதை அறிந்து கொள்ள இருவரும் விரும்புகிறார்கள் . டாக்டரை வரவழைக்கிறார்கள்.
ஆனால் ஹுசைன் குழப்பத்தில் சைக்கியாட்ரிக் பெண் டாக்டரை (உஜ்ஜயினி) வர வைத்து விடுகிறான். சாரு கற்பழிக்கப்பட்டாளா என்பதை தன்னால் உடல் ரீதியாகக் கண்டு பிடிக்க முடியாது என்று கூறும் டாக்டர், ஆனால் தன்னால் யார் கற்பழித்து இருக்க முடியும் என்று கண்டு பிடிக்க முடியும் என்கிறார் .
அதன்படி ஜான் , ஹுசைன் இருவரையும் பரிசோதிக்கிறார் .
மதுவுக்கு அடிமையாகிற கொடுமையில் ஹுசைன் இரண்டாவது ஸ்டேஜில்தான் இருக்கிறான். ஆனால் ஜான் , குடிக்காமல் இருக்கவே முடியாத , அப்படி இருந்தால் காதுக்குள் குரல்கள் கேட்கும் அளவுக்கு மோசமான ஸ்டேஜுக்கு போய் விட்டான். போதையில் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கும் ஸ்டேஜ் அது. எனவே ஜான்தான் சாருவைக் கற்பழித்து இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லிவிட்டுப் போய் விடுகிறார்.
சாரு ஜானை கொலை செய்ய முடிவு செய்கிறாள். அந்த நேரத்தில் ஜானின் மனைவி திவ்யா கணவனை தேடி வந்து விடுகிறாள். சூழலைக் கண்டு அதிர்கிறாள்.
உண்மையில் சின்ன வயது முதலே, கொடிய குடி நோயாளியாக போய் விட்ட ஜானை, காதலித்து திருத்தி மணந்து வாழ்க்கை கொடுத்தவள் திவ்யா . ஆனால் ஜான் மீண்டும் குடி நோயாளியாக போய் விட்ட பிறகும் அவனைப் பிரியாது வாழ்பவள்.
ஆனால் தன கணவன் ஜான் குடிபோதையில் பல பெண்களை சுகிப்பவன் என்ற உண்மையை இப்போது சாரு மூலம் உணரும் திவ்யா மனம் உடைக்கிறாள். அதைப் பார்த்து நொந்து போகும் ஜான் , சாருவிடம் “என்னை சுட்டுக் கொல் ; எனக்கு பயமில்லை” என்கிறாள்
அடுத்து என்ன என்பதே இந்த திறந்திடு சீசே.
கடைசியில் எதிர்பாராத ஒரு பயனுள்ள சமூக அக்கறை முடிவையும் கொடுத்துள்ளார் இயக்குனர் நிமேஷ் வர்ஷன் .
ஜான் கேரக்டரை உணர்ந்து நடித்து கோபம் , மோகம் , சோகம் . குழப்பம் , போதை என்று எல்லா ஏரியாக்களிலும் ஸ்கோர் செய்து இருக்கிறார் வீரவன் ஸ்டாலின் .
போதைக் கண்கள் மற்றும் குவிந்த உதடுகளுமாக கவர்ச்சியைத் தரும் தன்ஷிகா, ‘ரொம்ப வில்லங்கமான பொண்ணுப்பா’ என்று உணரும் அளவுக்கு மிரட்டியும் வைக்கிறார் . அசத்தல் தன்ஷிகா .
பதட்டம் , அவ்வப்போது காமெடி என்று நாராயணனும் நன்றாக செய்து இருக்கிறார்.
திவ்யாவாக வரும் அஞ்சனா கீர்த்தி பரிதாபம் பெற, நிஜ சைக்யாட்ரிக் டாக்டர் போன்ற உடல் மொழிகளால் கவர்கிறார் உஜ்ஜயினி .
டைட்டில் இசையிலேயே கவனிக்க வைக்கிறார் கணேஷ் ராகவேந்திரா .குளஞ்சி குமாரின் ஒளிப்பதிவு இரவின் அடர்த்தியை நன்றாக உணர வைக்கிறது.
மூன்றே முக்கிய கதாபாத்திரங்கள், தவிர நான்கு துணைக் கதாபாத்திரங்கள் இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு இருக்கிற சூழலுக்குள் தோண்டித் தோண்டி காட்சிகளை வைத்து அவ்வப்போது சின்னச் சின்ன திருப்பங்கள் கொடுத்து சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் நிமேஷ் வர்ஷன் .
ஒரு பத்து நிமிஷ பிளாஷ்பேக்கை தவிர சுமார் ஒண்ணே முக்கால் மணி நேர மொத்தப் படமும் ஒரு மதுபான விடுதி பார் செட்டுக்குள் நடக்கிறது. அதை போரடிக்காமல் கொண்டு போனதில் இயக்குனர் நிமேஷ் வர்ஷன் மட்டுமல்லாது படத்தொகுப்பாளர் விஜய்யும் பலத்த பாராட்டுக்குரியவர் ஆகிறார்.
கிளைமாக்ஸ் எதிர்பாராத சிறப்பு .
மொத்தத்தில் ….
திறந்திடு சீசே …. குகைக் கதவு திறக்கட்டும் !