
ஒப்புயர்வு இல்லாத உலகப் பொதுமறைக்கு இசை அமைத்து ‘உள்ளம் தோறும் வள்ளுவம் –ஒரு குறள் ஒரு குரல்’ என்ற பெயரில் குறுந்தகடாக கொண்டு வருகிறார் இசையமைப்பாளர் பரத்வாஜ் .
திருக்குறள் என்னும் இலக்கியப் பேரரசன் இசைத் தேரில் ஏறுவது புதிய விஷயம் இல்லைதான் . ஆனாலும் பரத்வாஜ் தரும் இசைத் தேர் மிகவும் சிறப்பானது .
ஒவ்வொரு திருக்குறளுக்கும் ஒவ்வொரு தனி டியூன்போட்டு இருக்கிறாரா பரத்வாஜ் . ஆக மொத்தம் 1300 மெட்டுகள் .
பிரபல பாடகர்கள் முதற்கொண்டு பாடத் தெரிந்த இயல்பான மனிதர்கள் வரை மொத்தம் 1300 பேர் இந்த 1300 குறள்களையும் ‘ஒரு குறள் ஒரு குரல்’ என்ற வகையில்
பாடுகிறார்கள் .
மதத் தலைவர்கள் முதற்கொண்டு நாசாவில் பணியாற்றும் விஞ்ஞானிகள் மற்றும் எளிய மனிதர்கள் என்று 1300 மனிதர்கள் இந்த 1300 குறள்களுக்கும் பொருள் சொல்கிறார்கள்.
இது தவிர திருக்குறளில் வரும் ஒவ்வொரு அதிகாரத்துக்கும் பூஜ்யஸ்ரீ ஓம்காரானந்தா விளக்கம் சொல்கிறார் .
ஆக மொத்தம் 2661 குரல்கள் ஒலிக்கப்போகிறது இந்த திருக்குறள் இசைத் தொகுப்பில் .
இதன் முதல் கட்டமாக அறத்துப் பாலில் உள்ள 380 குரல்களையும் இசைத் தேரேற்றி, வரும் திருவள்ளுவர் தினமான ஜனவரி 16 ஆம் தேதி அன்று வெளிக்கொணர்கிறார் பரத்வாஜ் . (விலை நூறு முதல் 125 ரூபாய்க்குள் இருக்குமாம் )
பொருட்பாலை ஏப்ரல் மாதம் கொண்டு வருகிறார் . (கவலையே பட வேண்டாம் காமத்துப் பாலும் வரும் !)
இந்த ‘உள்ளம் தோறும் வள்ளுவம் –ஒரு குறள் ஒரு குரல்’ பற்றிய அறிமுக விழாவில் பரத்வாஜும் , அவரை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்திய இயக்குனர் சரணும் , பூஜ்யஸ்ரீ ஓம்காரானந்தாவும் கலந்து கொண்டனர் .
“போகப் போக பரந்து விரிந்து பொங்கிப் பாயும் காவிரி நதி, தான் உருவாகும் தலைக்காவிரியில் சிறிய அளவில்தான் துவங்குகிறது. அதுபோல் இன்று இந்த விழா எளிமையாக இருந்தாலும் இந்தத் திருக்குறள் இசை உலகம் முழுக்க பரவப்போவது உறுதி ” என்றார் சரண் .
“திருக்குறளை படித்தாலே போதும். வாழ்க்கைக்கு அதை விட நல்லது செய்யும் நூல் எதுவும் இல்லை ” என்றார் பூஜ்யஸ்ரீ ஓம்காரானந்தா சுவாமிகள்.
“நான் டெல்லியில் படித்தவன் . எனக்கு தமிழ் எழுதத் தெரியாது ” என்று ஆரம்பித்த பரத்வாஜ் “சென்னைக்கு வந்து தமிழ் கற்று திருக்குறள் படித்த போது இப்படி ஒரு அற்புதமான புத்தகமா என்று வியந்தேன் . ‘ இன்னொருவர் மீது கோபப்படுவது என்பது நமது கையை நாமே தரையில் ஓங்கி அடித்துக் கொள்வது போல முட்டாள்தனம் ‘என்கிறார் வள்ளுவர். இப்போதெல்லாம் நான் கோபப்படுவதே இல்லை.
திருக்குறளை குழந்தைகள் படித்தால் அவர்கள் வாழ்வில் வெற்றி உறுதி . இசை வடிவில் அவர்கள் மனதில் பதிய வைக்க முடியும் என்பதால் இதை செய்கிறேன் . மற்றபடி இதில் பெரிதாக வணிக நோக்கம் இல்லை . இதை வழக்கமான ஆடியோ சிடி போல கடைகளில் விற்பனைக்கு கொடுக்கும் எண்ணமும் இல்லை . ” என்கிறார் .
பிறகு இந்த திருக்குறள் குறுந்தகட்டை பெறுவது எப்படி?
பரத்வாஜ் பவுண்டேஷன் ,
3B, அரிஹந்த் வேதாந்த் ,
42, மலோனி சாலை,
தி.நகர்,
சென்னை- 600017
Email :- bwfchennai@gmail.com
Phone :- 91 94423 29280
-என்ற முகவரியில் தொடர்பு கொண்டு வாங்கிக் கொள்ளலாம் .
(எல்லாம் சரிதான்… ஆனால் உலகப் பொதுமறையில் மதம் சம்மந்தப்பட்டவர்களை கொண்டு வந்திருக்க வேண்டாம். அட, பூஜ்யஸ்ரீ ஓம்காரானந்தாவை விடுங்கள். முதல் குறளுக்கு பொருள் சொல்பவர் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி . விளக்கங்களில் எதுவும் விவகாரம் இருக்காதே ?)