சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், ராஷ்மிகா மந்தனா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கி இருக்கும் படம்.
அலட்சியமான ஒரு சிறிய தவறு காரணமாக குடும்பத்தில் ஏற்பட்ட பெரிய இழப்பால் , உணவு டெலிவரி செய்யும் மகனுக்கும் (தனுஷ்) , போலீஸ் அதிகாரியான அப்பாவுக்கும் ( பிரகாஷ் ராஜ்) ஏழாம் பொருத்தம் . இருவரையும் கஷ்டப்பட்டு இழுத்துப் பிடித்து ஒரே வீட்டில் வைத்திருக்கிறார் தாத்தா (பாரதிராஜா)
நாயகன் மேல் அக்கறை உள்ள – அவனை முழுதும் அறிந்த – சிறு வயது முதல் பழகி வருகிற – பக்கத்து வீட்டு இளம்பெண் ஒருத்தி ( நித்யா மேனன்) . அவனைப் பொறுத்தவரை அவள் நல்ல தோழி .தனது பழைய பள்ளித் தோழி (ராஷ்மிகா மந்தனா) , கிராமத்து உறவுக்காரப் பெண் (பிரியா பவானி சங்கர்) ஆகியோர் மீது தோழியின் அறிதலோடு நாயகனுக்கு வரும் அடுத்தடுத்த காதல்கள் அந்தப் பெண்களால் ஜஸ்ட் லைக் தட் உதறித் தள்ளப்படுகின்றன.
அப்பாவுக்கும் மகனுக்குமான சண்டை முற்றி அப்பா பக்கவாதத்தில் விழ, கடைசியில் தோழியிடம் காதல் சொல்ல, அவள் கண்டிக்க , அப்பாவால் ஜெயிலுக்குப் போன ஒரு குற்றவாளி அப்பாவைக் கொல்ல வர, என்ன நடந்தது என்பதே திருச்சிற்றம்பலம். படத்தில் அதுவே நாயகனின் பெயர் .
திரைக்கதையில் பாராட்டுப் பெறுகிறார் இயக்குனர் மித்ரன் ஜவகர் .காட்சிகளை அடுக்கும் விதம், கதைப் போக்கின் ஒவ்வொரு நிலையிலும் சின்ன சின்ன திருப்பங்கள் என்று படத்தின் பாய்வு அபாரம் . அதுவும் முதல் பாதி அற்புதம் .
பெண் இல்லாத- மூன்று ஆண்கள் இருக்கும் வீடு எப்படி இருக்கும் என்பதை எழுத்திலும் படமாக்கலிலும் பிரம்மாதமாகப் படைத்திருக்கிறார் இயக்குனர்.
ஒரு காட்சியில் நித்யாமேனன் சொல்வார் ” எனக்கு பனிரெண்டு மணிக்கு மேல தான் காலை நேரம் வர்ற மாதிரி இருக்கு ” . பல பேரின் இயல்பாக இருக்கும் அட்டகாசமான வசனம் . ( முற்காலத்தில் தமிழர்கள் மதியம் பனி ரெண்டு மணியைத் தான் நாளின் துவக்கமாக கருதியதாக ஒரு தகவல் உண்டு)
அதே போல ஒரு காட்சியில் மாடியில் நிற்கும் தனுஷ் , ” சின்ன வயசுல அம்மா இந்த இடத்துல நின்னுகிட்டு கீழ விளையாடிகிட்டு இருக்கற என்னைப் பார்த்து சாப்பிட வாடான்னு கூப்பிடுவாங்க . இப்போ நான் கீழ போகும்போது எல்லாம் இந்த இடத்தில் இருந்து அம்மா கூப்பிடற மாதிரியே இருக்கு ” என்று உருகுவார். THE SCENE OF THE MOVIE.!ஒரு நல்ல காட்சி என்பது சும்மா பேனா பேப்பரில் மெக்கானிக்கலாக எழுதுவது அல்ல. கதையின் சூழல் , கதாபாத்திரங்களின் மனநிலை , அதோடு கதை நிகழும் இடத்தையும் உயிர்ப்பாகப் பயன்படுத்தி எழுத வேண்டும் என்பதற்கு அந்தக் காட்சி உதாரணம் . சபாஷ் மித்ரன் ஜவஹர்
தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் , நித்யா மேனன் ஆகிய நால்வரும் நடிப்பு
ராட்சஷ ராட்சஷிகளாய் பிரம்மாதப்படுத்தி இருக்கிறார்கள் . தனுஷ் சும்மா நின்னு விளையாடுகிறார் . பாரதிராஜா கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் . பிரகாஷ் ராஜ் பிரம்மிக்க வைக்கிறார் . நித்யா மேனன் நுண்ணிய முகபாவனைகளால் பிரம்மாதப்படுத்துகிறார் .
அனிருத்தின் இசை நெகிழ்வான காட்சிகளுக்குப் பலம் சேர்க்கிறது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு, பிரசன்னா ஜி கே வின் படத் தொகுப்பும் சிறப்பு.நாயகன் , நாயகி வீட்டை வடிவமைத்ததில் பாராட்டுப் பெறுகிறார் கலை இயக்குனர் ஜாக்கி .
தாய்க் கிழவி பாட்டு ரகளை.
முதல் பாதியில் அவ்வளவு பிரம்மாதமாக இருந்த படம் இரண்டாவது பாதியில் கமர்ஷியல்
பயத்தில் சினிமாத்தனமான காட்சிகளிலும், முடிவை எளிதாக யூகிக்க முடிந்த கதைப் போக்கிலும் சிக்கினாலும் ,
ஒரு நிலையில் சுதாரித்து சுற்றி வளைத்து இழுத்துப் பிடித்து மனம் நெகிழும் வகையில் படத்தை முடிக்கிறார் இயக்குனர் . ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி ஏற்படுகிறது .
திருச்சிற்றம்பலம்…… திருப் பொன்னம்பலம் !