திருமணம் போலவே நடந்த ‘திருமணம் ‘இசை வெளியீட்டு விழா

“வீட்டில் இருந்து ஓர் அலுமினியப் பாத்திரம் தவறிப் போனால் போனா போகுதுன்னு விட்டுடுவோம்,

அதே எவர் சில்வர் பாத்திரம்னா  வருத்தப் படுவோம் . தொலஞ்சது தங்கப் பாத்திரம்னா ? எப்படி துடிதுடிச்சுப் போவோம் ? 

இயக்குனர் சேரன் கொஞ்ச காலம் படங்கள் பண்ணாம இருந்தது , தங்கப் பாத்திரம் தொலைந்தது போன்ற உணர்வையே தந்தது . 

அப்படிப்பட்ட சேரன் மீண்டும் இயக்கும் படத்தை தயாரிக்கும் தம்பி பிரேம்நாத் சிதம்பரத்தையும் வெள்ளை சேதுவையும்
 
மனதாரப் பாராட்டுகிறேன் ” என்றார் தம்பி ராமையா, திருமணம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில். 
 
ஆம் ! அப்படி தம்பி ராமையா சொன்ன — தொலைந்து போன தங்கப் பாத்திரத்தை மீட்டுக் கொண்டு வந்த மீட்பர்…
 
 PRENISS INTERNATIONAL (OPC) PRIVATE LIMITED நிறுவனத்தின் தயாரிப்பாளர் பிரேம்நாத் சிதம்பரம் . 
 
அந்த மீட்புக்கு ‘இன்பார்மர்’ (அதாவது சேரன் – பிரேம்நாத் சிதம்பரம் இணைவுக்கு காரணமாக இருந்தவர்)
 PRENISS INTERNATIONAL (OPC) PRIVATE LIMITED தலைமை செயல் அதிகாரி வெள்ளை சேது 
 
திருமணம் இசை வெளியீட்டு விழா நடந்த சென்னை கமலா திரையரங்கு வளாகம் ஒரு திருமண மண்டபம் ஆகவே மாறி இருந்தது .
 
முன்புற வளாகத்தை அடைத்துப் பந்தல் .ஒலி பெருக்கியில் எம் ஜி ஆர் பாடல்கள் . நான் போனபோது, 
 
”திருமணமாம் … திருமணமாம் .. தெருவெங்கும் ஊர்வலமாம் .. ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம் பாடல்
 
(நான் ‘ஒருத்தி’யை ஒருவனாக்கி சொந்தக் கதையை நினைத்துக் கொண்டேன் . நோ… அது சோகக் கதை அல்ல !)
 
உள்ளே வாத்திய மேடை .. அதில் மங்கள இசை ஒலிக்கும் கலைஞர்கள் . பட்டு வேட்டி பட்டு சட்டையில் படக் குழுவினர் . 
 
கண்ணில் வெற்றிக் கனவுகளோடு நாயகன் உமாபதி ராமையா மற்றும் நாயகி காவ்யா சுரேஷ் .
 
மகனின் வளர்ச்சியில் மகிழும் தந்தையாக தம்பி ராமையா, தவிர  சுகன்யா,  உள்ளிட்ட படக் கலைஞர்கள் . ! சேரனின் பொற்காலம் நாயகி மீனா !
 
இவர்களுடன் கல்யாணமாலை மோகன் !
 
நிகழ்ச்சியை இயக்குனர்  சேரன் மிக அழகாக வடிவமைத்து இருந்தார் . அவர்  விரும்பிய எல்லாம் தந்து நடத்தினார்கள் 
 
 PRENISS INTERNATIONAL (OPC) PRIVATE LIMITED நிறுவனத்தின் தயாரிப்பாளர் பிரேம்நாத் சிதம்பரம் மற்றும்  தலைமை செயல் அதிகாரி வெள்ளை சேது  இருவரும். 
 
மகேந்திரன், பாரதிராஜா , வைரமுத்து மூன்று மாபெரும் கலை ஆளுமைகள், சேரனின் குருநாதரான கே எஸ் ரவிகுமார்  தவிர ,
 
இப்போது சாதனை படைத்து இருக்கும்  கலைஞர்களான மேற்குத் தொடர்ச்சி மலை லெனின் பாரதி,  அறம் கோபி நைனார் , கனா அருண்ராஜா காமராஜா,
 
பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ், அடங்க மறு கார்த்திக் தங்கவேல் , விருதுகள் பல வென்ற நிலையில்
 
விரைவில் திரைக்கு வர இருக்கும் டூ லெட் படத்தை இயக்கிய செழியன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர் . 
 
சேரனின் இந்த அற்புதமான வடிவமைப்பை சிறப்பாக செயல்படுத்தி இருந்தார்கள் தயாரிப்பாளர்கள் . நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும்
 
பிரேம்நாத் சிதம்பரம் , வெள்ளை சேது இருவரும்முகமும் மனமும் மலர மலர  மலர்க் கொத்து வழங்கி வரவேற்றார்கள் . 
 
திரையிடப்பட்ட முன்னோட்டக் காட்சிகள் வண்ணங்களால் கண்களையும் எண்ணங்களால் மனதையும் நிறைத்தன . லெனின் பாரதி,  கோபி நைனார் , அருண்ராஜா காமராஜா, மாரி செல்வராஜ், கார்த்திக் தங்கவேல் , செழியன்  ஆகியோர் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர் . 
 
படக் குழுவை பாராட்டிப் பேசிய வைரமுத்து , “விரைவில் திருமணம் என்ற அமைப்பு இல்லாமல் போகும் .
 
சுதந்திரம் பெருகும் . ஆனால் அதற்கு எல்லாம் ரொம்ப நாள் ஆகும் . இந்தப் படம் வெற்றி பெறும்” என்றார் 
 
மகேந்திரன் ” நான் சேரனை எப்போதும் நினைத்துக் கொண்டே இருப்பேன் . இது உண்மை . அவர் மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி ” என்றார் . 
 
சேரன் எனது அசிஸ்டன்ட் என்பது எனது வாழ்நாள் பெருமைகளில் ஒன்று ” என்றார் கே எஸ் ரவிக்குமார் 
 
முன்னோட்டத்தை வைத்து கதையை சரியாக ஊகித்துப் பேசிய பாரதிராஜா , ”  வைரமுத்து, மகேந்திரன் , நாங்கள் எல்லாம் வயதைக் கடந்தவர்கள் .
 
எங்களுக்கு வயது இல்லை . தொடர்ந்து ஓடுவோம் . அதே போல ரவிகுமார் . ஒரு மாஸ் படத்தை சரியாக எடுப்பது மாபெரும் திறமை .
 
அதில் வல்லவர் ரவிக்குமார் ” என்றார் . 
 
நிறைவுரை ஆற்றிய சேரன் , “பிரேம்நாத் சாரும் வெள்ளை சேது சாரும் இல்லை என்றால் நான்  இல்லை . இந்தப் படம் இல்லை . நிகழ்ச்சி இல்லை .
 
அவர்கள் இல்லை என்றால் இந்த நிகழ்ச்சி சாத்தியப்பட்டு இருக்காது . டிரைலரை வைத்தே கதையை சரியாக சொல்லி விட்டார் பாரதிராஜா சார் .
 
தான் பாடல் எழுதாத நிகழ்ச்சிக்கு வைரமுத்து சார் வந்திருப்பது எனக்குப் பெருமை . 
 
நான் இந்தக் கலை முன்னோடிகளையும் இப்போது சாதித்து இருக்கும் கலைஞர்களையும் இங்கே ஒரு சேர அழைக்கக் காரணம் உண்டு .
 
குடும்பம் என்றால் மூத்தோர்களை மதிக்கணும் . இளையவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும் .
 
அந்த குடும்பம் திருமணத்தால்தான் வருகிறது . எனவே திருமணம் பட நிகழ்ச்சிக்கு இப்படி ஒருங்கிணைத்து அழைத்தேன் ” என்ற, 
 
சேரன் செய்த இன்னொரு காரியம் அற்புதமானது . 
 
நம் வீட்டு நிகழ்ச்சிக்கு வருபவர்களில் ஒரு சிலரை மட்டும் முக்கியத்துவம் தந்து வந்திருக்கும் மற்றவர்கள் பேசலாம் . ஆனால் நாம் ?
 
வந்திருப்பவர்களில் அதிகம் கவனிக்கப் படாதவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் அல்லவா ? அதை செய்தார் சேரன் . 
 
எல்லோரும் பாரதி ராஜா பற்றியே அதிகம் பேசி இருக்க, சேரன் அவரை கொண்டாடிய அதே நேரம் பேச்சில் மகேந்திரனுக்கும்
 
  முக்கியத்துவம் கொடுத்தார் “முள்ளும் மலரும் இயக்குனர் இங்கே உட்கார்ந்து இருக்கிறார் .
 
அந்தப் படத்தில் அவர் பயன்படுத்திய விஞ்ச் ஆபரேட்டர் என்ற கதாபாத்திரத்தை அவரைத் தவிர வேறு யாரும் இன்னும் பயன்படுத்தவில்லை .
 
எனக்கு ரஜினியின் ஸ்டைல் பிடிக்காது . ஆனால் அவர் சிறந்த நடிகர் . காரணம் மகேந்திரன் படங்கள் ” என்றார் . 
 
அதே போல வந்திருந்த புதிய சாதனையாளர்களில்  லெனின் பாரதி,  கோபி நைனார் , அருண்ராஜா காமராஜா, மாரி செல்வராஜ்,
 
செழியன் ஆகியோருக்கு மற்றொர்களால் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கார்த்திக் தங்க வேலுக்கு கொடுக்கப் படாத நிலையில்
 
அவருக்கு அழுத்தம் கொடுத்துப் பேசிய சேரன் , ” பஞ்ச் டயலாக் இல்லாமல் தேவையற்ற ஆரவாரம் இல்லாமல்
 
ஒரு அழகான ஹீரோயிசம் உள்ள படத்தை கொடுத்து இருந்தார் கார்த்திக் தங்கவேல் .
 
ஜெயம் ரவி உட்கார்ந்து இருப்பார் . ஆனால் காட்சிகளில் ஹீரோயிசம் அற்புதமாக இருக்கும் ” என்றார் . 
 
விருந்தினர்களை இல்லத்தவர்கள் கவனிக்கும் மிகச் சிறந்த கலாச்சாரம் விகசிக்கும் வெளிப்பாடு இது . 
 
அருமை சேரன் ! இந்த திருமணத்துக்குப் பிறகு நீங்கள் இன்னும் பல கலைக்காவியக் குழந்தைகளைப் பெற்றெடுக்க  வாழ்த்துகள் !
 
திருமணம் படத்தைத் தொடர்ந்து மீண்டும் சேரனை வைத்து இன்னொரு படத்தை தயாரிக்கிறார்கள் 
 
PRENISS INTERNATIONAL (OPC) PRIVATE LIMITED பிரேம்நாத் சிதம்பரம்  மற்றும் தலைமை செயல் அதிகாரி வெள்ளை சேது  இருவரும் . 
 
தொடர்ந்து  படங்களை தயாரிக்கும் திட்டமும் இருக்கிறது . வருக … செய்க .. வெல்க !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *