
எஸ் எஸ் எஸ் மூவீஸ் சார்பில் ஏ எஸ் டி சலீம் மற்றும் பி.ரவிகுமார் இருவரும் வழங்க, முத்து நகரம் படத்தை இயக்கிய திருப்பதி இயக்கி இருக்கும் படம் திருட்டு ரயில் .
தூத்துக்குடியைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களுக்கும் ஒரு போலீஸ் அதிகாரிக்கும் பிரச்னை வருகிறது . தங்கள் பக்கம் எந்த தவறும் இல்லாத நிலையிலும், ‘ எதற்கு வம்பு…..? சென்னைக்கு போய் நிம்மதியாக பிழைத்துக் கொள்ளலாம்’ என்று அந்த ஐந்து இளைஞகர்களும் திருட்டு ரயில் ஏறி சென்னைக்கு வருகிறார்கள்.
வந்த இடத்தில் ‘தூத்துக்குடி விவகாரமாவது பரவாயில்லை’ என்று நினைக்கும் அளவுக்கு சென்னையில் மீண்டும் போலீசுக்கும் அவர்களுக்கும் ஒரு பெரிய பிரச்னை ஏற்படுகிறது . ஒரு நிலையில் தூத்துக்குடியில் பிரச்னை செய்த அதே அதிகாரியே இங்கும் அவர்களை துரத்துகிறார் .
புதிய இடம் .. முன்னிலும் பெரிய சிக்கலான பிரச்னை என்று சிக்கிக்கொள்ளும் அந்த ஐந்து இளைஞர்களின் கதி என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை என்கிறார் இயக்குனர் திருப்பதி .இதோடு “ஆள்மாறாட்ட என்கவுண்டர் என்று ஒரு பரபரப்பான ஏரியாவும் படத்தில் இருக்கிறது. இப்போதைக்கு அது சஸ்பென்ஸ்” என்கிறார்
சமூகத்தில் இன்றைய நிலையில் தனி மனிதர்கள் எப்படி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று இந்தப் படம் பேசுமாம் .
பொதுவாக திருட்டு ரயில் என்பது ரயிலில் டிக்கட் வாங்காமல் பயணம் செய்வதை குறிக்கும் . ஆனால் இந்தப் படத்தில் ஒரு ரயிலையே புது தண்டவாளம் போட்டு…. திருடிக் கொண்டு போய் விடுகிறார்களாம் .
சென்ட்ராயன், சண்முகராஜன், மயில்சாமி, பசங்க சிவகுமார், பிளாக் பாண்டி, தீப்பெட்டி கணேசன் உட்பட ஒரு நட்சத்திரக் கூட்டத்தையே கொண்ட இந்தப் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் ரக்ஷன் , மு.க.ஸ்டாலினின் மனைவியான துர்கா அம்மையாரின் தம்பி மகன். கதாநாயகி கேத்தி பல விளம்பரப் படங்களில் நடித்தவர். இது அவருக்கு முதல் திரைப்படம்.
முத்துநகரம் படத்துக்கும் இசையமைப்பாளராக பணிபுரிந்த ஜெய் பிரகாஸ் இந்தப் படத்துக்கும் இசையமைக்க, பாடல்களை எழுதி இருக்கிறார், மூன்று தலைமுறை கண்ட பழம்பெரும் பாடலாசிரியர் காமகோடியன்.
பொதுவாக உதவி இயக்குனர்கள் இயக்குனராக புரமோஷன் ஆவார்கள் . ஆனால் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ரவிக்குமார் உதவி இயக்குனராக இருந்து தயாரிப்பாளராக புரமோஷன் ஆகி இருக்கிறார் . இந்த ரவிக்குமார் முத்து நகரம் படத்தில் இயக்குனர் திருப்பதியிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர் .
திருப்பதி தனது அடுத்த கதையை தயார் செய்து இருவரும் சேர்ந்து செயல்பட , தயாரிப்பிலும் இறங்கினார் ரவிக்குமார் .பணம் போதாது என்ற நிலையில் தயாரிப்பாளராக படத்தில் இணைந்து இருக்கிறார் எஸ் எஸ் எஸ் மூவீஸ் ஏ எஸ் டி சலீம் .
படத்தில் சரண் செல்வம் என்ற நடிகர் இரட்டை வேடத்தில் ஒரு ரவுடி கேரக்டரில் நடித்து இருக்கிறார். ஒரு சில படங்களில் நடித்து வரும் இவருக்கு இது மிக முக்கியமான வாய்ப்பு.
”அந்த கேரக்டரை வைத்துதான் படமே இருக்கிறது” என்கிறார் இயக்குனர் .
”பழம் பெரும் பாடலாசிரியரான காமகோடியனை தேடிப் பிடித்து கொண்டு வந்திருக்கிறீர்களே …?” என்று ஆச்சர்யமாகக் கேட்டால் ” பாடல்களில் நல்ல தமிழ் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். எனவே அவரை பாடல் எழுத வைத்தோம் . எல்லா பாடல்களையும் இனிய தமிழில் எழுதி இருக்கிறார் ” என்கிறார்கள், இயக்குனர் திருப்பதியும், இசையமைப்பாளர் ஜெய் பிரகாஸும்.

”படத்தின் ஒரு முக்கியமான சண்டைக் காட்சியை கொடும் வெயிலில் ஒரு வறண்ட புழுதிப் பகுதியில் எடுத்தோம் . இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஒரு மரம் கூட இல்லாத இடம் அது . அந்த காட்சியில் நாயகன் ரக்ஷன் , வில்லனாக நடித்திருக்கும் இருவரும் மிக சிறப்பாக நடித்துக் கொடுத்தார்கள் .
காட்சி மிக மிக சிறப்பாக வந்துள்ளது . அதற்கு இயக்குனர் திருப்பதி, ஒளிப்பதிவாளர் விஜய் வல்சன் உள்ளிட்ட அனைவரின் உழைப்பும் சிறப்பானது” என்கிறார் சண்டைப் பயிற்சி இயக்குனர் கில்லி சேகர் .
படத்தின் பாடல்கள் நன்றாக இருந்தன .
மாரிஷ் படத்தொகுப்பில் முன்னோட்டமும் பரபரப்பாக இருந்தது .
நாயகன் ரக்ஷனின் தந்தையே படத்தை தமிழகம் எங்கும் ரிலீஸ் செய்கிறார் . வரும் டிசம்பர் 4 ஆம் தேதி வெளியாகிறது திருட்டு ரயில் .