சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி ஜி தியாகராஜன் தயாரிக்க , தனுஷ் கீர்த்தி சுரேஷ் , தம்பி ராமையா ஆகியோர் நடிக்க,
பிரபு சாலமன் இயக்கி இருக்கும் படம் தொடரி . ரசிகர்கள் தொடர்வார்களா ? பார்க்கலாம்
சென்னை — டெல்லி விரைவுத் தொடர் வண்டி ஒன்றின் உணவகத்தில் பணியாற்றும் இளைஞன் பூச்சியப்பன் (தனுஷ்).
தனது சக நண்பர்கள் மற்றும் மேலாளருடன் ( தம்பி ராமையா ) நக்கல் நையாண்டி என்று வாழும் பூச்யசிப்பன், ஒரு நாள் அந்த வண்டியின் டெல்லி -சென்னை பயணத்தின் போது,
அதே தொடர் வண்டியின் பயணிக்கும் சிரிஷா என்ற நடிகையின் முக அலங்கார உதவியாளரான ஒரு மலையாளப் பெண் மீது (கீர்த்தி சுரேஷ்) காதல் வயப்படுகிறான்.
பாடகியாகும் ஆர்வம் உள்ள அந்தப் பெண்ணுக்கு, இரண்டு பிரபல பின்னணி பாடகிகளின் பெயரை இணைத்து சித்ரா கோஷல் என்று பெயர் வைப்பதோடு ,
தனக்கு பிரபல பாடலாசிரியர் வைரமுத்துவைத் தெரியும் . அவர் மூலம் ஏ ஆர் ரகுமானை சந்தித்து பாட வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்று சொல்லி அதன் மூலம் பழகி , தன்னை காதலிக்கவும் வைக்கிறான்
இந்நிலையில், அதே ரெயிலில் பயணம் செய்யும் மத்திய ‘சாண எரிவாயு’த் துறை அமைச்சரின் (ராதாரவி) பாதுகாப்புக்கு வரும் கருப்பு பூனைப்படையை சேர்ந்த ஒரு மலையாள அதிகாரிக்கும் (ஹரீஷ் உத்தமன்),
பூச்சியப்பனுக்கும் பிடிக்காலம் போய், இருவருக்கும் இடையில் பிரச்னை ஏற்படுகிறது.
இதன் நீட்சியாக பூச்சியபனை ஒரு அறைக்குள் அடைக்கும் அந்த பாதுகாப்புப் படைஞன் , அவனைப் பழிவாங்க ‘சென்னை போய் சேர்வதற்குள் சித்ரா கோஷலை கொல்லப் போவதாகச் சொல்லி விரட்ட
சித்ரா கோஷல் பயந்துபோய் தொடர் வண்டியின் ஓட்டுனர் இயங்கும் எந்திரப் பெட்டிக்குப் போய் ஒளிந்து கொள்கிறாள் .
வண்டியை இயக்கும் ஓட்டுனரை (இயக்குனர் ஆர் .வி.உதயகுமார்), சக ஊழியர் ஒருவர் ஒருவர் தனது மனைவி தொலைபேசியில் ஊட்டும் எரிச்சல் காரணமாக பொறுமை இழந்து மரியாதை இன்றிப் பேச,
ஓட்டுனர் மனம் பாதிக்கப் படுகிறார் . (வயசுக்கும் அனுபவத்துக்கும் திறமைக்கும் நேர்மைக்கும் எந்த பய மரியாதை தர்றான்?)
அதனால் மயக்கம் அடைந்து வேகக் கட்டுப்பாட்டுக் கருவியின் மேல் அவர் விழ, வண்டி ஆகப் பெரும் வேகத்தில் பயணிக்க ஆரம்பிக்கிறது .
பூட்டிய அறையில் இருந்து தப்பிக்கும் பூச்சி, சித்ரா கோஷலைத் தேடி தொடர் வண்டி முழுக்க அலைகிறான் .
இதற்கிடையே கொள்ளைக் கும்பல் ஒன்று வண்டியில் பல பயணிகளிடம் கொள்ளை அடித்திருக்கும் தகவல் வர,
ஒட்டு மொத்த அரசு இயந்திரமும் அந்த ரயிலை நிறுத்த வழியின்றித் தவிக்க,
தொடர் வண்டியை தீவிரவாதிகள் கடத்திவிட்டதாகத் தொலைகாட்சிகள் செய்தி வெளியிடுவதோடு சித்ரா கோசலை தீவிரவாதியாகவும் சித்தரிக்கின்றனராம்.
அதை ஒட்டி பரபரப்பான அரசியல் நிகழ்ச்சிகள் சூடு பிடிக்கின்றன .
தொடர் வண்டிக்கு இணையான வேகத்தில் பயணித்து அவளைக் கொல்ல போலீஸ் திட்டமிடுவதாகவும் தகவல் வருகிறது
ரெயிலை நிறுத்துவதற்கான பணிகளில் தீவிரமாகக் களமிறங்குகிறார்கள்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தொடர்வண்டித் துறை கட்டுப்பாட்டு அதிகாரிகள் வண்டியை நிறுத்தினரா ?
பூச்சியப்பன், சித்ரா கோஷல் மற்றும ரயிலில் பயணிக்கும் எழுநூற்று சொச்சம் பயணிகளுக்கு என்ன ஆனது என்பதே இந்த தொடரி .
அருமை.
லைப்ரரிக்கு நூலகம் என்று மொழிபெயர்ப்பு சொன்னோம் . வீடியோ லைப்ரரி வந்த பிறகு அதை காட்சி நூலகம் என்று சொல்ல முடியுமா? அங்கே நூல் எங்கே வருகிறது ?
ஆக லைப்ரரி என்பதற்கு தொகுப்பகம் என்றே ஆரம்பத்தில் மொழிபெயர்த்து இருக்க வேண்டும்.
அப்படிதான் ரயில் என்ற சொல்லுக்கு தமிழில் புகை வண்டி என்ற வார்த்தையையே பயன்படுத்தி வருகிறோம், புகை பயன்பாடு இல்லாத தொடர் வண்டிக்கும் கூட .
இதுவும் தவறான மொழிபெயர்ப்பு .
இதை சரி செய்யும் வகையில் தொடர் வண்டி என்ற சாதரண வார்த்தையை விடவும் சிறப்பான அழகிய தொடரி என்ற வார்த்தையை,
ஒரு திரைப்படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி இருக்கும் பிரபு சாலமனுக்கு நன்றியும் நல் வணக்கமும் .!
இரண்டு எளிய மனிதர்கள் இடையே உருவாகும் வலிய காதலின் வழியே கட்சி அரசியல் , சமூக அரசியல் , ஊடக அரசியல் , அதிகார மட்ட அரசியல் ,
இவற்றின் மீதான தனது கோபத்தை எரிச்சலை நேரடியாகவும் எள்ளலாகவும் பதிவு செய்வது பிரபு சாலமனின் நோக்கமாக இருந்ருதிருக்கிறது .
முழு படமும் தொடரியும் தொடரி சார்ந்த இடமும் என்பதில் அதீத உழைப்பும் தனித் தன்மையும் தெரிகிறது
பிரபு சாலமன் படங்களிளுக்கே உரிய அழகாக இயற்கை காட்சிகளை இந்தப் படத்திலும் வெற்றி வேல் மகேந்திரனின் ஒளிப்பதிவில் ஆரம்பக் காட்சிகளில் அழகாகப் பார்க்க முடிகிறது.
டி.இமான் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையும் முன்னணியாக இல்லை
தொடரி உணவாக ஊழியராக, தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை செய்திருக்கிறார் தனுஷ்
எனினும் அவருக்குள் இருக்கும் நடிப்பு யானைக்கு கட்டுக் கரும்பு கிடைக்கவில்லை . சோளப் பொறிக்கும் கொஞ்சம் மேலே. அம்புட்டுதான்
மேக்கப் இல்லாத இயல்பான தோற்றம் அட்டகாசமான நடிப்பு என்று அசத்தி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
‘பெண்மையின் அழகு அலங்காரத்தில் இல்லை . இயல்பான நடவடிக்கைகளில் இருக்கிறது’ என்று இவரைப் பயன்படுத்திய விதத்தின் மூலம் சொல்கிறார் பிரபு சாலமன் சபாஷ்
பிரபு சாலமன் தம்பிராமையா நகைச்சுவை வீரியம் எங்கே போச்சு ? ஏதோ ஒரு சில முறைகள் சிரிப்பதற்காக பல வசனப் பதர் மூட்டைகளை மூச்சு முட்ட நாம் சுமக்க வேண்டி இருக்கிறது
கூடவே கருணாகரன், தர்புகா சிவா, கும்கி அஸ்வின் என ஒரு கூட்டணி இருந்தாலும் நகைச்சுவைக்கான காட்சிகளிலும் கூட பலன் இல்லை
மந்திரியாக வரும் ராதாரவி, தனது எதார்த்தமான நடிப்பால் ரசிக்க வைத்திருக்கிறார். கருப்பு பூனைப் பாதுகாப்புப் படைஞனாக வரும் ஹரிஷ் உத்தமன் மிரட்டல்.
தொடரித் துறை காவல் அதிகாரியாக வரும் கணேஷ் வெங்கட்ராமன், கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளாக வரும் சின்னி ஜெயந்த், மற்றும் இயக்குனர் வெங்கடேஷ், ஓட்டுனராக வரும் இயக்குனர் ஆர் .வி.உதயகுமார்,
பயணச் சீட்டுப் பரிசோதகராக வரும் இமான் அண்ணாச்சி, தொலைக்காட்சி விவாதங்களில் பேசும் படவா கோபி, ஞானசம்பந்தன் , பட்டிமன்றம் ராஜா ஆகியோர் சற்றே கவனம் ஈர்க்கிறார்கள்
தொலைக்காட்சிகளில் தங்கள் கட்சிக்காக கண் மூடித்தனமாக நியாயம் இன்றியும் விவரம் தெரியாமலும் பேசும் அரசியல்வாதிகளையும் விட்டு வைக்கவில்லை .
குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் கோபண்ணாவை மறைமுகமாகக் குறிப்பிட்டு கிண்டல் அடிக்கும் வசனம் கல கல லக லக .
படத்தின் முதல் பாதிக் காட்சிகள் வெகு சாதாரணம் . விளைவு ? சுமார் இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் படத்தில்,
சுவாரஸ்யம் இல்லாத காட்சிப் பெட்டிகளை இழுக்கும் ஓட்டுனர் எந்திரம் போல நாம் சோர்ந்து போகிறோம்.
இடைவேளைக்குப் பிறகு வேகம் என்ற பெயரில் அள்ளித் தெளித்த அவசர கோலம் போல காட்சிகள் நகர்வதால் சில நல்ல காட்சிகளும் கூட,
அழுத்தம் இல்லாததால் போதுமான ரசனை விளைவை ஏற்படுத்த முடியாமல் தோற்கின்றன .
அட, காட்சிகள் வசனங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்…
தொலைக் காட்சி (மற்றும்) ஊடகங்கள் மீது இயக்குனருக்கு உள்ள வெறுப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு….
தொடர் வண்டி மோதி நொறுங்கும் பொருட்களில் ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும் பிரதனமாக இருப்பதே உதாரணம் .
சில தொலைக்காட்சிகள் ஊடகங்கள் அப்படி இருக்கலாம் . அதற்காக ஒட்டு மொத்த மீடியாவையும் இப்படி புரட்டி இருக்க வேண்டாம் .
எனினும் அந்த காட்சிகள் வெகு ஜன மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு பெறும் என்றே தோன்றுகிறது . அதையும் மறுப்பதற்கில்லை.
தொடரி பயணக் கதை கொண்ட படம் என்றால் அதன் புறவெளிக் காட்சிகள் மிக முக்கியப் பங்கு வகிக்கும் .
ஆனால் இந்தப் படத்தில் ஆரம்பத்தில் அப்படி சில காட்சிகள் உள்ளதே தவிர, போகப் போக ரயிலின் உட்புறம் மட்டுமே படத்தை பெரிதாக ஆக்கிரமித்து சலிப்பை ஏற்படுத்துகிறது .
காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு ஏற்ப அப்படி தொடரி பயணிக்கும் புறவெளிக் காட்சிகளை எடுத்து போட்டுக் கொண்டே வந்தால்
படம் இன்னொரு கவிதைப் பூர்வமான தளத்துக்குப் போய் இருக்கும் . ஏன் விட்டுட்டீங்க பிரபு சாலமன் ?
அதே போல படமாக்களில் காட்டிய உழைப்பில் பத்து விழுக்காட்டை திரைகதைக்குக் காட்டி இருந்தால் கூட , பலன் இரண்டு மடங்காகப் பெருகி இருக்கும் . அது அமையாதது ஏமாற்றமே.
தொடரி …… விட்டு விட்டு !