தொண்டன் @ விமர்சனம்

thondan 1
வசுந்தரா தேவி சினி பிலிம்ஸ் மற்றும் நாடோடிகள் சார்பில் ஆர்.மணிகண்டன் மற்றும் சமுத்திரக் கனி இருவரும் தயாரிக்க,

சமுத்திரக் கனி, விக்ராந்த், சுனைனா , அர்த்தனா, சூரி, தம்பி ராமையா , வேல ராம மூர்த்தி , கஞ்சா கருப்பு ஆகியோர் நடிக்க,

கதை – திரைக்கதை வசனம் எழுதி சமுத்திரக் கனி இயக்கி இருக்கும் படம் தொண்டன் . ரசிகனுக்கு தொண்டு செய்யுமா படம் ? பார்க்கலாம்

உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் வண்டியின் ஓட்டுனராக இருப்பவர் மகா விஷ்ணு ( சமுத்திரக் கனி) அவருடன் வண்டியில் இருக்கும் அட்டெண்டர் சேவியர் (கஞ்சா கருப்பு )

thondan 2

மகா விஷ்ணுவின் தங்கை மகிஷாசுரமர்த்தினி ( அர்த்தனா) .அப்பா குலதெய்வம் ( வேல ராமமூர்த்தி)

மதுரை தா . கிருட்டிணன் ஸ்டைலில் வாக்கிங் போய்க் கொண்டிருந்த மரக்கடை பாபு என்பவர் (பாபூஸ்) ஒருவர் நடு ரோட்டில் தாறு மாறாக வெட்டப்பட ,

அங்கு வண்டியுடன் போகும் மஹா விஷ்ணு அவரை உயிரோடு மருத்துவ மனையில் சேர்க்கிறார் .

அதனால் வெட்டிக் கொல்ல ஆள் அனுப்பியவரும் , அமைச்சர் பாண்டியனின் ( முனைவர் ஞான சம்மந்தன்) தம்பியுமான மந்திரி நாராயணனின் ( நமோ நாராயணன்) கோபத்துக்கு ஆளாகிறார் மகா விஷ்ணு .

மகா விஷ்ணுவை மந்திரி நாராயணன் மிரட்டி விட்டுப் போகிறான்

thondan 3

மகா விஷ்ணுவின் நண்பனான விக்னேஷ் ( விக்ராந்த்) மகா விஷ்ணுவின் தங்கையான மகிஷாசுரமர்த்தினி மீது ஆசைப்பட்டு முரட்டுத்தனமாக காதல் சொல்ல முயன்று அதில் பிரச்னையாகி மனம் பாதிக்கப்படுகிறான் .

அவனை தன்னைப் போலவே ஆம்புலன்ஸ் டிரைவர் பயிற்சிக்கு அனுப்பி உயிரை காக்கும்போது ஏற்படும் மனச் சிலிர்ப்பை உணர வைத்து மனிதன் ஆக்குகிறார் மகா விஷ்ணு .

பகலா முகி என்ற பள்ளி ஆசிரியை மகா விஷ்ணுவை விரும்ப இருவருக்கும் திருமணம் ஆகிறது . பகலா முகி கர்ப்பாமாகிறாள்

இந்த நிலையில் மந்திரி நாராயணனின்  தம்பி சின்ன பாண்டி பஸ்ஸில் ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க அந்தப் பெண் அறைந்து விடுகிறாள் .

thondan 4
அதில் வெறி பிடித்து அவள் படிக்கும் கல்லூரி வகுப்புக்குள் நுழைந்து அவளை கட்டையால் உயிராபத்து ஏற்படுத்தும் வரை அடிக்கிறான்  சின்ன பாண்டி

உடன் படிக்கும் மகிஷாசுரமர்த்தினி பதிலுக்கு மற்ற மாணவிகளை திரட்டி அவனை கும்பலாக பலரும் சேர்ந்து அடிக்க அவனும் உயிராபத்து நிலைக்குப் போகிறான் .

மாணவியை மருத்துவ மனைக்கு கொண்டு போக, விக்னேஷின் ஆம்புலன்ஸ் வருகிறது .  சின்ன பாண்டியை கொண்டு போக மகா விஷ்ணுவின் ஆம்புலன்ஸ் வருகிறது .

டிராஃபிக் காரணமாக வேகமாக மருத்துவமனையை அடைய மகா விஷ்ணு சுற்றுப் பாதையில் வருகிறார் . மருத்துவ மனைக்கு வந்து சேர, டாக்டர் பரிசோதிக்கும் போது சின்ன பாண்டி இறந்து விட்டது தெரிகிறது .

thondan 888

முன்பு மிரட்டப்பட்டதை மனதில் வைத்துக் கொண்டு திட்டமிட்டே ஆம்புலன்சை சுற்று வழியில் ஓட்டி மகா விஷ்ணுவே சின்ன பாண்டியை கொன்று விட்டதாக அமைச்சரின் ஆள் ஒருவன் குற்றம் சாட்ட ,

மந்திரி நாராயணனும் அவன் ஆட்களும் மகா விஷ்ணுவை அடித்துத் துவைக்கிறார்கள் .

மகா விஷ்ணு பதிலுக்கு கோபப்பட , அவனுக்கு ஆம்புலன்ஸ் பயிற்சி அளித்த ஒரு நல்ல மனிதர் , ”பழி வாங்க எல்லாம் வேண்டாம் . புறக்கணித்துப் போ . மீறி வந்தால் அவனை திசை திருப்பு” என்று கூறுகிறார் .

இன்ஸ்பெக்டர் உத்தமன் (அனில் முரளி) மந்திரி நாராயணின் எடுபிடியாகச்  செயல்பட, சப் இன்ஸ்பெக்டர் அப்துல் ரகுமான்( திலீபன்) மகாவிஷ்ணுவுக்கு உதவுகிறார் .

thondan 8888

மகா விஷ்ணு அவன் தங்கை இருவரையும்  குறி வைக்கிறது மந்திரி நாராயணன் மற்றும் இன்ஸ்பெக்டர் கோஷ்டி

தவிர மகா விஷ்ணு வீட்டில் குண்டு வெடித்து அவன் அப்பா செவித் திறன் பாதிக்கப்படுகிறார் . பகலா முகியின் கர்ப்பம் கலைகிறது .

எனவே மந்திரி நாராயணனை திசை திருப்ப முடிவு செய்யும் மகா விஷ்ணு , நாராயணின் மற்ற குற்றங்களைத்  நோண்ட , அப்புறம் என்ன நடந்தது என்பதே தொண்டன் .

உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் மூலம் உழைப்பையும் உயிரையும் பணயம் வைத்து ஒய்வு ஒழிச்சல் இன்றி பல உயிர்களை காக்கும் பணியாளர்களின் சேவை, தியாகம், சிலிர்ப்பு ,

thondan 5
அவர்களின் மன நிலை . அவர்கள் பயிற்சி பெறும் விதம் , அவர்களுக்கு ஏற்படும் பிரசனைகளை இந்தப் படம் சொல்லும் விதம் அபாரம் .

இந்த உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் சமாச்சாரம்தான் இந்தப் படம் காக்கும் விஷயம் .

இதற்கிடையே தன்னிலும் வலியோர் தன்னிடம் மோதும்போது என்ன செய்ய வேண்டும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லும் ட்ரீட்மென்ட்டும் , (எல்லா சூழலிலும் சாத்தியம் இல்லை என்றாலும் கூட) அருமை .

 வயற்காட்டிலேயே பூச்சி மருந்து குடித்து விட்டு மரணத்தின் விளிம்பில் இருக்கும் விவசாயியை மகாவிஷ்ணு அங்கேயே காப்பாற்றும் விதமும் அப்போது பேசும் உணர்வுப் பூர்வமான விசயங்களும் சிறப்பு .

thondan 6

ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் வெறும் டிரைவர்களாக மட்டும் இருக்கக் கூடாது என்று சொல்வதோடு படைப்பாளியின் சமூக அக்கறை என்ற வகையில் சமுத்திரக்கனிக்கும் பெருமை சேர்க்கிறது அந்தக் காட்சி  .
தற்போதைய தலைமுறையினர் குறிப்பாக அரசியல்வாதிகள் இந்த நாட்டின் இயற்கைச் செல்வங்களையும் நல்ல விசயங்களையும் அழித்து விட்டதை சொல்லும் விதமும், 
இன்றைய தலைமுறையின் அரசியல் விழிப்புணர்ச்சியின் வெற்றியே ஜல்லிக்கட்டுப் போராட்டம் என்று சொல்வதும் சிறப்பு .

அந்த ஜல்லிக்கட்டின் வெற்றியை மாணவர்கள் கொண்டாட முடியாமல் அடித்து விரட்டப்பட்ட சதியை கண்டிப்பது சபாஷ் என்றால் ,

thondan 7

தமிழ் நாட்டில் இருந்து அழிந்து போன எண்பத்தி ஏழு வகை நாட்டு மாடுகளின் பெயரை சமுத்திரக் கனி ஒரே ஷாட்டில் சொல்லும் காட்சி படத்தின் கருத்துச் சிகரம் !

 அமைச்சரின் வீட்டில் நடக்கும் ரெய்டு , ஐ டி ஆபீசராக வரும் தம்பி ராமையாவின் நடிப்பு , வரதட்சணையாகப் போடுவதாக சொன்ன பதினைஞ்சு பவுனை கேட்டு வரும் அந்த வீட்டு மருமகன் ராமர் (சூரி), 

வீட்டில் இருந்து ரெய்டில் தோண்டப்படும் பணம் மற்றும் நகைகளை பார்த்து ஒரு எளிய மனிதனின் மன நிலையில் பேசும் வசனங்கள்,

பத்திரிக்கை நிருபராக வரும் படவா கோபியின் நகைச்சுவை என்று…..
 thondan 8

படத்தின் உற்சாகக் கொண்டாட்டம் படத்தின் ஆன்ட்டி கிளைமாக்ஸாக அதகளம் செய்யும் இந்த ஏரியாதான் .

இந்த ஏரியாவில் கஞ்சா கருப்பு பேசும் வசனங்கள் கூட வெடிச்சிரிப்பை வர வைக்கின்றன .  புதிய ஆயிரம் ரூபாய் நோட்டு , அவை கோடி கோடியாக பணக்காரர்கள் வீட்டுக்கு போனது ,

அதே நேரம் பொது மக்கள் ஏ டி எம் வாசலில் மணிக் கணக்கில் நின்றது எல்லாம் சொல்லும் இந்தப் பகுதியில் சில வசனங்களில் ஜெயலலிதா, சசிகலா , ராம் மோகன் ராவ், சேகர் ரெட்டி என்று, 

எல்லோரையும் ஞாபகப்படுத்துவது சமுத்திரக் குறும்பு

சற்றே மூச்சு முட்டும் படத்துக்கு தூய ஆக்சிஜன் கொடுப்பதும் இந்த அட்டகாச ஏரியாதான்

இது மாதிரி படத்தில் இன்னொரு விஷயம் இருந்திருந்தால் படம் இன்னும் பட்டையை கிளப்பி இருக்கும்

thondan 9

நடிப்பில் சமுத்திரக்கனி அருமைக் கனி .

ஆத்திரத்தின் விளிம்பில் மிருக நிலைக்குப் போய் பின்னர திருந்தி மனிதனாவதோடு உயிரைக் காக்கும் தெய்வ நிலைக்குப் போய் சிலிர்த்துக் குமுறி குளிர்ந்து ,

சம நிலைக்கு வரும் மனிதனின் கேரக்டரில் அசத்தி இருக்கிறார் விக்ராந்த் .

நல்ல காவல் அதிகாரி திலீபன் , ஆட்டோ டிரைவராக வரும் மூர்த்தி , மற்றும் நமோ நாராயணன், பகலாமுகியின் த்மபியாக் வரும் சின்னத் தம்பி ஆகியோர்  தங்கள் கேரக்டரை மிக அழகாக உணர்ந்து செய்திருக்கிறார்கள்.

ஜஸ்டின் பிரபாகரின் இசை பாடல்களில் சுமார் ரகம். பின்னணி இசையில் சூப்பர் ராகம் !

thondan 88

காதலித்தவனை மணந்து முறைப்படி முதலிரவில் முதன் முதலாக உடல் இன்பம் பெற்ற பெண்ணின் அடுத்த நாள் முக ஜொலிப்பை அப்படியே ஒளிப்பதிவில் கொண்டு வரும் விதத்தில்,

 இயக்குனரோடு சேர்ந்து தானும் ஜொலிக்கிறார் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் .

படம் முழுக்க அவரும் ரிச்சர்டு நாதனும் சிறப்பான ஒளிப்பதிவைக் கொடுத்துள்ளார்கள் .

படத்தின் ஆரம்பக் காட்சிக்கு பிறகு அந்த திருடனை பிடிக்கும் ஏரியா கொஞ்சம் இழுக்கிறது . திருடனாக் வரப் போவது யார் என்று முதல் முயற்சியிலேயே புரியும் நிலையில் இருக்க,

அதை வெகுநேரம் நீட்டித்திருக்கத்  தேவை இல்லை

thondan 99

பகலில் திருடு போகும் பொருட்களைக் கண்டு பிடிக்க இரவில் ரோந்து எதுக்கு ? எதிர்பார்த்தே வரும் திருடன் முக மூடியைக் கழற்றிய உடன் ஏன் அப்படி ஒரு எதிர்பாராத ஷாக் ரியாக்ஷன் தரணும்?

வீட்டில் சிலிண்டர் வெடிப்பது கர்ப்பம் கலைவது எல்லாம் ஜஸ்ட் நிரப்பல் வேலை .  பல காட்சிகள் வாழ்வியலாக வருவதற்குப் பதில் போதனையாகவே நீள்வதும் ஒரு பின்னடைவே .

கதாபாத்திரங்களுக்கு எல்லாம் இப்படி அசத்தாலாக அட்டகாசமாக பெயர் வைத்து விட்டு அவற்றை இப்படியா டீலில் விடுவது .

அந்தப் பெயர்களும் கதாபாத்திரங்களும் ஒன்றுக்கொன்று பொருந்தும் அழகை குட்டி குட்டியாக  ரசிகனுக்கு புரியும்படி ஃபோகஸ் செய்திருக்க வேண்டாமா ?

thondan 9999

இப்படி சில குறைகள் இருந்தாலும் , வித்தியாசமான அடிப்படைக் கதை , நல்லதை வலியுறுத்தும் நிகழ்வுகள்  யதார்த்த வாழ்வில் யாரும் எதிர்கொள்ள வாய்ப்புள்ள பிரச்னைகள் இவற்றை சொல்வதோடு ,

சமூக அக்கறையோடு விவசாயத்தின் அழிவு , அரசியல் அராஜகம் , ஊழல் என்று பல பயனுள்ள விசயங்களை சொன்ன வகையில் ஜொலிக்கிறது படம் .

தொண்டன்… சொல்லேருழவன் !

 

மகுடம் சூடும் கலைஞர்கள்

—————————————-

சமுத்திரக் கனி, விக்ராந்த், ஏகாம்பரம்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *