ராஜ் கமல் இன்டர்நேஷனல் மற்றும் ஸ்ரீ கோகுலம் மூவீஸ் இணைந்து தயாரிக்க, கமல்ஹாசன், திரிஷா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிப்பில் கமல்ஹாசன் திரைக்கதையில் கமலிடம் உதவியாளராக இருந்த ராஜேஷ் ம செல்வா இயக்கி இருக்கும் படம் தூங்காவனம் .
பிரெஞ்சில் இருந்து sleeping nights என்ற பெயரில் ஆங்கிலத்துக்குப் போன படத்தின், அனுமதி பெற்ற ரீமேக் இது. தூங்காவனத்தில் மகிழுமா ரசிக மனம்? பார்க்கலாம்
போதைப் பொருள் தடுப்புத் துறையில் பணியாற்றும் போலீஸ் அதிகாரி அவர் ( கமல்ஹாசன்). டாக்டர் மனைவி(ஆஷா சரத் )யிடம் இருந்து விவாகரத்துப் பெற்றவர். இருவருக்கும் பிறந்த பதின்ம வயது மகன் ஒருவன் அப்பாவிடமும் அம்மாவிடமும் மாறி மாறி வசிக்கிறான் .
கடத்தப்படும் கோகைன் போதைப் பொருளைக் கைப்பற்றும் போலீஸ் அதிகாரி , அந்த ஆபரேஷனில் கத்தி குத்து வாங்குகிறார் . நகரில் night after night என்ற கேப்ஷனோடு கூடிய இன்சோம்னியா என்ற பெயர் கொண்ட , பிரம்மாண்டமான இரவு விடுதி நடத்தி வரும் ஒருவனுக்கு ( பிரகாஷ்ராஜ் ) போய் சேர வேண்டிய போதைப் பொருள் அது. . அவன் அதை கடத்தல் தொழில் செய்யும் தாதா ஒருவனுக்கு கொடுக்க வேண்டும் .
போலீஸ் அதிகாரியின் மகன் அவரோடு தங்கி இருக்கும் நாளில் அந்த போதைப் பொருள் கைப்பற்றல் நடக்கிறது . அன்று இரவு மகனை முன்னாள் மனைவியான கோபக்கார டாக்டர் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் .
ஆனால் அந்த நாளில் போலீஸ் அதிகாரியின் மகனை கடத்தி விடும் இரவு விடுதி உரிமையாளன், ”கோக்கைனை கொடுத்து விட்டு மகனை மீட்டுப் போ”என்கிறான் .
போதைப் பொருளோடு போலீஸ் அதிகாரி அங்கு போக , அவரை சந்தேகப்படும் சக பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் (திரிஷா) அவரைப் பின் தொடர்ந்து போய் கொக்கைனை கைப்பற்றி விடுகிறார் . அதனால் மகனை மீட்பது சிக்கலாகிறது . பெண் போலீஸ் அதிகாரிக்கு அவரது சக அதிகாரி (கிஷோர் ) ஒருவரும் ஆதரவாக களம் இறங்குகிறார் .
ஒரே நேரத்தில் இரவு விடுதி ஓனர், போதைப் பொருள் தாதா, அவர்களது படைகள், பெண் போலீஸ் அதிகாரி , அவரது சக அதிகாரி , இன்னும் சில துரோகிகள் இவர்களை சமாளித்து…. கத்திக் குத்து காயத்தின் உபாதையையும் மீறி அந்த , தன் மகனை அந்த போலீஸ் அதிகாரி மீட்டாரா ? குற்றவாளிகளை தண்டித்தாரா ? என்பதே தூங்காவனம் .
இப்படியாகக் கதையில் புதிதாக ஒன்றும் இல்லைதான் . ஆனால் திரைக்கதை போற்றுதலுக்குரியது .
எப்படி ?
பொதுவாகப் பல படங்களில் திரைக்கதையில் வரும் சிறு சிறு கதாபாத்திரங்கள் அந்தந்தக் காட்சிகளோடு உதிரிப்பூக்கள் போல ஓடி விடுவார்கள் . ஆனால் இதில் அப்படி அல்ல . ஒரு வசனம், ஒரு பார்வை, ஒரு குறுக்கு நடை நடக்கும் பல கதாபாத்திரங்கள் கூட மீண்டும் காட்சிகளில் பொருந்தி வருகிறார்கள்.
இது கூட தமிழ் சினிமாவுக்கு புதிது இல்லைதான் .
இன்னும் ஒரு படி மேலே போய் ஒரு காட்சியில் வீசி எறியப்படும் ஒரு பொருள் , ஒரு காட்சியில் மறைக்கப்படும் ஒரு விஷயம் இவை எல்லாம் மீண்டும் படத்துக்குள் திரைக்கதையோடு இணைகின்றன. ஒரு காட்சியில் போகிற போக்கில் சொல்லப்படும் ஒரு வசனம் கொஞ்ச நேரத்துக்குப் பிறகு அடுத்து ஒரு மணி நேரத்துக்கான கதையின் போக்கை தீர்மானிக்கிறது .
அந்த விதத்தில் sleeping nights படத்தின் அட்டகாசமான திரைக்கதையில், தன் பங்குக்கும் ஒரு சில மாற்றங்களையும் செய்து , சரியான கட்டமைப்பு மற்றும் அதிகப் பட்ச பயன்பாடுகளுடன் அமைக்கப்பட்ட திரைக்கதைக்கான உதாரணமாக தூங்காவனம் படத்தின் திரைக்கதையை கொண்டு வந்திருக்கிறார் கமல்.
ஒரு காட்சியில் சம்பத் , பிரகாஷ்ராஜை அடித்து நொறுக்குவார். இன்னொரு காட்சியில் பிரகாஷ்ராஜ் கமல்ஹாசனை அடித்துக் கிழி கிழி என்று கிழிப்பார் . மற்றொரு காட்சியில் கிஷோர் கமலை அடித்துச் சிதற்றுவார். . பிறிதொரு காட்சியில் திரிஷா கமலை எகிறி அடிக்க , பின்னர் கமல் திரிஷாவை அடித்துப் பிளப்பார் .
இப்படி எல்லோரும் இமேஜை என்ற குப்பை மாயையை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு கேரக்டராகவே மாறி இருப்பது பாராட்டுக்குரிய விஷயம் .
வசனங்களுக்கான வாய்ப்பு கம்மியாக உள்ள திரைக்கதையிலும் இரவு விடுதியின் கிச்சன் சம்மந்தப்பட்ட காட்சிகள் உட்பட பல இடங்களிலும் தன்னை நிரூபித்துள்ளார் சுகா . குறிப்பாக அடையாள அட்டையும் ஆதார் கார்டும்.!
இரவு விடுதிக்குள் இருந்து திரிஷாவும் கிஷோரும் வெளியே வந்து கமலைத் தேடும் இடத்தில் ஜிப்ரனின் பின்னணி இசை அருமை . ஆனால் மொத்தத்தில் பற்றாக்குறைதான் . அதே நேரம் ஒலிப் பயன்பாடு மிக சிறப்பு .
சானு ஜான் வர்கீசின் ஒளிப்பதிவும் ஷான் மொஹம்மதுவின் படத் தொகுப்பும் இயக்குனருக்கு பலம் . மிக சிறப்பான படமாக்கலில் நம்பிக்கையூட்டும் இயக்குனராக ஜொலிக்கிறார் இயக்குனர் ராஜேஷ் ம செல்வா . வாழ்த்துகள்! அடுத்து நம்ம ஊருக்கான ஒரு நல்ல — சொந்தக் கதையில் , உங்க மேக்கிங் திறமையை வைத்து ஒரு அட்டகாசமான படம் கொடுங்க ராஜேஷ் .
தூங்கவனம் தொழில் நுட்ப ரீதியாக மிகச் சிறந்த படம் .நமது ஊரில் வியாபார ரீதியாக இது எல்லாத் தரப்பினரையும் கவரும் படமாகவும் அமைந்தால் சந்தோஷமே .
தூங்காவனம் .. தொழில்நுட்ப பவனம் !
மகுடம் சூடும் கலைஞர்கள்
———————————————–
கமல்ஹாசன், ராஜேஷ் ம செல்வா , சானு ஜான் வர்கீஸ், ஷான் மொஹம்மது