கமல்ஹாசனிடம் சுமார் ஏழு ஆண்டுகள், நான்கைந்து படங்களுக்கு உதவி இயக்குனராக இருந்தவர் ராஜேஷ் எம் செல்வா .
ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் எஸ். சந்திரஹாசனும் கமல்ஹாசனும் தயாரிக்க, கமல்ஹாசன் , பிரகாஷ்ராஜ் , த்ரிஷா, கிஷோர், சம்பத், யூகி சேது, நடிப்பில் இந்த ராஜேஷ் எம் செல்வா இயக்குனராக அறிமுகமாகும் படம் தூங்காவனம் . தெலுங்கில் சீக்கட்டி ராஜ்ஜியம் . இது ஒரு இரு மொழிப்படம் .
படத்தில் திரிஷாவும் யூகி சேதுவும் மிக வித்தியாசமான கெட்டப்பில் வருகிறார்கள் . அந்த கெட்டப்களை உருவாக்கியது படத்தின் ஆடை வடிவமைப்பாளரான கௌதமி.
படத்தின் முன்னோட்டத்தை பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் யூ டியூபில் வெளியிட்டார் கமல்ஹாசன் .
மிகுந்த தொழில்நுட்ப சிறப்போடு ஒரு ஆக்ஷன் த்ரில்லராக படம் வருகிறது என்பதை முன்னோட்டம் காட்டியது. படக் குழுவினர் பேசினார்கள் .
“படத்தின் படப் பிடிப்பில் கமல் சார் மிமிக்ரி செய்வதை நான் பார்த்தேன் . எத்தனை பேருக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கும் என்று தெரியவில்லை ” என்றார் நண்டு ஜெகன் .
வசனகர்த்தா சுகா பேசும்போது ” எங்கள் வாத்தியார் பாலு மகேந்திராவுக்கு நெருக்கமானவர் கமல்ஹாசன் . எனவே எங்களுக்கு எல்லாம் மூத்தவர் . எனவே அவரை நான் அண்ணாச்சி என்றுதான் உணர்கிறேன் . பாலு மகேந்திராவின் வழி வந்த பாலா, வெற்றி மாறன் , நான் எல்லாம் கமல்சார் பற்றிப் பேசும்போது கமல் அண்ணாச்சி என்றுதான் சொல்வோம் ” என்றார்
“நானும் கமல் சாரும் பாலச்சந்தர் பள்ளியில் இருந்து வந்தவர்கள். சில படங்களில் அவரோடு நடித்து இருந்தாலும் இந்தப் படத்தில் அது மிக முழுமையான அனுபவமாக இருந்தது ” என்றார் பிரகாஷ் ராஜ்
“மன்மதன் அம்பு படத்துக்குப் பிறகு மீண்டும் கமல்ஹாசனுடன இணையும் படம் இது . பிரகாஷ் ராஜுடன் பல படங்களில் நடித்து இருக்கிறேன் . இந்தப் படத்தில் கமல் சார் காட்டிய வழிகாட்டுதல் படி நானே நல்லமுறையில் டப்பிங் பேசி இருக்கிறேன் ” என்றார் திரிஷா .
“எங்கள் ராஜ் கமல் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் இயக்குனர் ராஜேஷ் செல்வா பெரிய வெற்றி பெற வேண்டும் ” என்றார் கௌதமி.
இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா பேசும்போது
“கமல் சாரை இயக்கிய அனுபவம் பற்றி பலரும் கேட்கிறார்கள் . நான் அவர் கூடவே இருந்தவன் . எனவே அவரை ஸ்பாட்டில் இயக்கியதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. ஆனால் அவர் படைத்த படைப்புகளை யோசிக்கும்போதுதான் நாம் எப்பேர்ப்பட்ட ஒருவரை இயக்கிக் கொண்டு இருக்கிறோம் என்ற பிரம்மிப்பு வரும் . ஒரு வழியாக அவரை திருப்திப் படுத்தி விட்டதாகவே நம்புகிறேன்.” என்றதோடு விட்டு விடாமல் தொடர்ந்து ,
” நான் த்ரிஷாவின் பெரிய ஃபேன். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் . ஆரம்ப காலம் முதலே அவருக்கு பெரிய ரசிகன்.. ஹி ஹி ஹி ” என்றார் , அதுவும் கமல் முன்னாலேயே . (ம்ம்ம்ம் .. இருக்கட்டும் … இருக்கட்டும்)
நிறைவாகப் பேசிய கமல் ”
இது தமிழ் தெலுங்கு இரு மொழிப்படம் . அதாவது தமிழில் இருந்து தெலுங்குக்கு டப்பிங் செய்யப் படாமல் ஒரே நேரத்தில் இரண்டு மொழியிலும் தனித்தனியாக உருவாக்கப்பட்டது . இது மாதிரி நான் 24 படங்களில் நடித்து இருக்கிறேன் . இப்படி இத்தனை இரு மொழிப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு வேறு யாருக்கும் அமையவில்லை என்றே நினைக்கிறேன் .
ஆக , இந்தப் படம் தமிழ்நாடு ஆந்திரா இரண்டு மொழிகளையும் மாநிலங்களையும் சேர்த்து 14 கோடி பேருக்காக எடுக்கப்பட்ட படம் .
அடுத்த படத்துக்கான கதை மற்றும் ஏற்பாடுகள் முடிவாகி விட்டன . விரைவில் அது பற்றிய அறிவிப்பு வரும் . இனி எங்கள் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பாய்ச்சல் சற்று அதிகமாக இருக்கும் ” என்றார் .
அதாவது தூங்காவனம் படத்தைத் தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமே தூங்காவனமாக இருக்கும் என்கிறார் கமல் .
அப்போ அதையே தலைப்பாக வச்சுக்குவோம்