தொட்டால் தொடரும் @ விமர்சனம்

thottal 3

எஃப் சி எஸ் கிரியேஷன்ஸ் சார்பில் துவார் ஜி சந்திரசேகர் தயாரிக்க, தமன் குமார்,  அருந்ததி,  பாலாஜி வேணுகோபால் ஆகியோரின் நடிப்பில் கேபிள் சங்கர் இயக்கி இருக்கும் படம்,  ‘தொட்டால் தொடரும்’

பார்வையாளர்கள் கூட்டம் படத்தை தொடருமா ? பார்க்கலாம் .

அம்மா இறந்த நிலையில் இரண்டாவது கல்யாணம் செய்து கொண்ட அப்பா, வெறுப்பாகவே நடந்து கொள்ளும் சித்தி, அந்த சித்திக்கு மகனாக பிறந்த பாசமுள்ள தம்பி……

இவர்களுக்காக கால் சென்டரில் வேலைக்கு போய் சம்பாதிக்கும் மது என்ற இளம்பெண்ணுக்கு (அருந்ததி ),  வேறொரு நிறுவனத்தில் பணியாற்றும் சிவா என்ற இளைஞனுடன் ஏற்பட்ட மோதல்,  காதலை நோக்கி மெல்ல மெல்ல முன்னேறுகிறது .

 காரை ஏற்றி விபத்து போன்ற தோற்றத்தை ஏற்படுத்ததி, திட்டமிட்டு கொலை செய்யும் கும்பல் ஒன்று , அந்த வேலையை ஏவும் ஆளுக்கும் அதை செய்யும் நபருக்கும் தொடர்பே இல்லாதபடியான ஒரு புத்திசாலித்தனமான நெட் வொர்க்கில் பல கொலைகளை செய்கிறது . ஒரு அமைச்சரே அப்படி கொல்லப்படுகிறார் .

 ஒரு  நிலையில் மதுவின் தம்பிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு,  முப்பது லட்ச ரூபாய் செலவில் ஓர்  அறுவை சிகிச்சை செய்யவேண்டி இருக்கிறது. அதற்கான பணம் புரட்ட முடியாத நிலையில் மதுவையும் அவளது தந்தையையும் சித்தி கரித்துக் கொட்ட, மனம் வெறுத்துப் போகும் மதுவுக்கு , தான் முப்பது லட்ச ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு செய்திருக்கும் விஷயம், ஒரு யோசனையை உருவாகுகிறது. தான் விபத்தில் இறந்து விட்டால் அந்தப் பணம் வந்து , அதன் மூலம் தம்பி காப்பாற்றப்படுவான் என்று எண்ணுகிறாள்.

Thottal 4

அதற்கான சுயமுயற்சியில் தோற்றுப் போகும் சமயம்,  ,மேற்படி கொலை செய்யும் கூட்டத்தில் ஒருவன் இன்னொருவனுக்கு போன் செய்து அடுத்த கொலைத் திட்டத்தை சொல்லி , கொலை செய்யப்பட வேண்டிய பெண்ணின் புகைப்படத்தை ஓரி டத்தில் வைத்து விட்டுப் போவதாக சொல்ல, அதைக் கேட்கும் மது ஒரு முடிவுக்கு வருகிறாள் .

சம்மந்தப்பட்ட பெண்ணின் போட்டோவை எடுத்து விட்டு அந்த இடத்தில் தனது போட்டோவை வைத்து விட்டு வந்து விடுகிறாள் . ‘அவர்கள் எப்படியும் இயல்பான விபத்து மாதிரிதான் நம்மைக் கொல்வார்கள் . எனவே தம்பியைக் காப்பாற்ற பணம் இன்ஷ்யூரன்ஸ் பணம் வந்து விடும் ‘

மருத்துவமனைக்கு வந்தால்,  தம்பியின் மருத்துவ செலவுக்கு தேவையான பணத்தை சிவா கட்டி இருக்கிறான் .

தம்பியின் பிரச்னை முடிந்த சந்தோஷத்தில், போட்டோ மாற்றியது ஞாபகம் வர, தனது  புகைப்படத்தை எடுத்து விட  முடிவு செய்யும் ம,அது, ஓடிப்போய்ப் பார்த்தால்…  அவளது போட்டோ, கொடூரக் கொலையாளியின் (வின்சென்ட் அசோகன்) கைக்கு எப்போதோ போய்விட்டது!

 ஈவு  இரக்கம் இல்லாத அந்த  கொலையாளி மதுவைக் கொலை செய்ய வீரியமாகக் களம் இறங்க , மதுவை சிவாவால் காப்பாற்ற முடிந்ததா இல்லையா என்பதுதான் …. இந்த தொட்டால் தொடரும் .

thottal 2

முதல் பாதியில்  மதுவின் குடும்ப சூழல் எளிமையாக விளக்கப்படுகிறது .  நாயகன் நாயகி பழகும் காட்சிகளோடு  மெதுவாக போகும் திரைக்கதையில் பாலாஜியின் ‘பஞ்ச்’கள் கொஞ்சம் கூடுதல்  சுமை கொடுத்தாலும்,  பொதுவான  வசனங்களில் சுவை கொடுத்து,  முதல் பாதியை கொண்டு போகும் இயக்குனர் கேபிள் சங்கர், மது தனது புகைப்படத்தை மாற்றி வைக்கும் காட்சியில் நிமிர்ந்து உட்கார வைக்கிறார் .

இரண்டாம் பகுதி முழுக்கவே பரபரப்பும் சுறுசுறுப்பும் தொடர் வண்டியாக தொடர்கிறது.

படத்தின் துவக்கத்திலும் இரண்டாம் பகுதியிலும் வரும் கார் சேசிங் காட்சிகளை ஏரியல் வியூ ஷாட்களை எல்லாம் வைத்து மிரட்டலாக, சிறப்பாக படம் ஆக்கி இருக்கிறது , இயக்குனர் கேபிள் சங்கர், ஒளிப்பதிவாளர் விஜய் சங்கர், மற்றும் சண்டை இயக்குனர் கூட்டணி . பாடல் காட்சிகளில் மூர்த்தியின் கலை இயக்கம் , ‘பல்பு வாங்கி’  பாராட்டுக்குள்ளாகி இருக்கிறது

thottal 1

காரில் செல்லும் நாயகன் மற்றும் நாயகியை வில்லன் லாரியில் சென்று துரத்தும் காட்சியை ,ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் டுயல் (DUEL) படத்தை மனதில் (மட்டும்)  வைத்துக் கொண்டு எடுத்து இருக்கிறார்கள்.

பி.சி. சிவனின்  இசையில் பெண்ணே.. பெண்ணே பாடல் இனிமை . எம் ஆர் ராதா பாடுவது போன்ற குரலில் வரும் “யாருக்கும் ஈவு இரக்கம் …” பாட்டு , ஜனரஞ்சக ஈர்ப்பு. பின்னணி இசை இரண்டாவது பாதிக்கு பலம் சேர்க்கிறது

மதுவின் கையில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி,  அந்த சிக்னலை வைத்து அவளை வில்லன் பின் தொடர்வதான காட்சிகள் சிறப்பு.  . அதை அவளது கையில் பொருத்தும் காட்சி பலே! .

“நான் சாகறதுக்கு ரிஸ்க் எடுத்தபோது கூட பயப்படல. ஆனா இப்போ வாழறதுக்கு ரிஸ்க் எடுக்கும்போது ரொம்ப பயமா இருக்கு ” என்ற வசனம் அழகு  இலக்கியம் .

தொட்டால் தொடரும் … முதல் பாதியை தொடர்ந்தால் இரண்டாம் பகுதி தொடும் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →