திரைப்படத் தயாரிப்பாளர்கள் , கலைஞர்களுக்கும் பத்திரிக்கைகள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கும் இடையே தகவல் பாலமான பத்திரிக்கை தொடர்பாளர் என்ற துறையை உருவாக்கிய பிலிம் நியூஸ்’ ஆனந்தன்,
அதோடு நின்றுவிடவில்லை
தொழிலுக்கும் அப்பாற்பட்டு சினிமாவை நேசித்த காரணத்தால் தமிழ் சினிமா பற்றிய அனைத்துப் புள்ளி விவரங்களையும் சேகரிக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பணியை ஒரு தவம் போல செய்தார்
கடந்த 1954ம் ஆண்டு முதல் தமிழ் உள்ளிட்ட தென் இந்திய திரைப்படங்களின் நடிகர் நடிகைகள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், பாடலாசிரியர்கள் என்று,
அனைத்துத் திரைப்படத் துறையினர்கள் பற்றிய பல அரிய தகவல்களை ரசிகர்கள் அறிந்துகொள்ளும் வகையில் திரட்டி வைத்திருந்தார். சுருக்கமாக, திரையுலகின் விக்கிபீடியாவாக அவர் விளங்கினார்.
எவரிடமும் இல்லாத வகையில் அனைத்து விவரங்களையும் இவர் தொகுத்து வைத்திருந்தார். இதன் காரணமாகவே, கலா பீடம், கலைச்செல்வம், கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றார்.
அதனால் திரை உலகின் வரலாற்று ஆசிரியர் என்றும், நடமாடும் நூலகம் என்றும் ‘தென்னிந்திய திரைப்பட உலகின் தகவல் களஞ்சியம் என்று அழைக்கப்பட்டார்.
அவருடைய மறைவுக்குப் பிறகு, கடந்த ஜனவரி 2017 அன்று பெரு. துளசி பழனிவேல் தயாரித்த,
2016 ஆம் ஆண்டிற்கான தமிழ்த் திரைப் படப் புள்ளி விபரங்களடங்கிய தொகுப்புப் புத்தகத்தை ஏ.வி.எம்.சரவணன் வெளியிட்டார்.
அதை தொடர்ந்து இன்று மறைந்த பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் பாதையில் பெரு.துளசி பழனிவேல் ‘துளசி சினிமா நியூஸ்’ (அரையாண்டு இதழ்) என்ற பெயரில்,
இந்த ஆண்டின் (2017) ஆறு மாத காலத்தில் நிகழ்ந்த தமிழ்த் திரையுலகத்தின் ஒட்டு மொத்த நிகழ்வுகளையும் ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.
பளபளக்கும் வண்ணத் தாளில் அடிமைப் பெண் , மாட்டுக்கார வேலன் போன்ற படங்களின் விளம்பரங்களோடு ஜொலிக்கிறது அந்தப் புத்தகம் .
தனது குருநாதர் கிளாமர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் பிலிம் நியூஸ் ஆனந்தன் இவர்களை வணங்கி முன்னுரையிட்டு விவரங்களை மிக அழகாக சரியாகத் தொகுத்து இருக்கிறார்
படத்தின் பெயர் , தயாரிப்பு நிறுவனப் பெயர், வெளியான தேதி இவை அடங்கிய விவரங்களோடு கலைத்துறையில் நடந்த திருமணங்கள், மரணங்கள் ,
சினிமா தொடர்பாக வெளியான புத்தகங்கள் பற்றியும் ஒரு தொகுப்பு கொடுத்திருப்பது சிறப்பு
அது மட்டுமா?
ஆறு மாதத்தில் நடந்த முக்கிய சினிமா செய்திகளையும் தொகுத்துள்ளார் .
அதோடும் நிறுத்திக் கொள்ளாமல் முன்னோடிக் கலைஞர்களின் முதல் படங்கள் , திரைக் கலைஞர்களின் வாரிசுகள் பணியாற்றும் படங்கள் இவை பற்றிய செய்திகளும் அழகு
எம் ஜி ஆரின் நூற்றாண்டு விழா சமயத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடித்த அடிமைப் பெண் மற்றும் மாட்டுக்கார வேலன் படங்கள் வருவது பற்றிய ஒரு நறுக் கட்டுரையும் கொடுத்துள்ளார்
மேற்படி புத்தகத்தை இலவசமாக எல்லோருக்கும் வழங்கி வருகிறார்
பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் பாதையில் தென்னிந்திய தமிழ் திரைப்பட உலகின் தகவல் களஞ்சியமாக பெரு.துளசி பழனிவேல் திகழ வேண்டும் என்றும்,
அவரது இந்த அற்புதமான சேவை என்றென்றும் தொடர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறோம்.