யூ டர்ன்@ விமர்சனம்

கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் கோ.தனஞ்செயன் தமிழில்  வெளியிட ,
 
BR 8 கிரியேஷன்ஸ் மற்றும் சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி, ராம்பாபு பண்டாரு தயாரிப்பில் சமந்தா, ஆதி, ராகுல் ரவீந்திரன், நரேன் , பூமிகா நடிப்பில், 
 
பவன் குமார் எழுதி இயக்கி , தமிழ், தெலுங்கு மொழிகளில் வந்திருக்கும் படம் யூ டர்ன். இதே இயக்குனர்  இதே பெயரில் எழுதி இயக்கி, 
 
கன்னடத்தில் ஹிட் அடித்த படத்தின் மறு உருவாக்கம்.. சரி , ரசிகர்கள் யூ டர்ன் அடிக்காமல் உள்ளே போகலாமா ? பேசலாம் . 
 
போக்குவரத்து நெரிசல் மிக்க  – குறுகலான மேம்பாலத்தில் எதிர் எதிர் திசைகளில் செல்லும், 
 
இருவழிச் சாலையில், நடுவில் சதுர வடிவ சிறு கற்கள் மட்டுமே பிரிப்பானாக இருக்கும் நிலையில், இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் , போக்குவரத்து விதிகளை மதிக்காமல் , நடுவில் உள்ள கற்களை நகர்த்தி, 
 
சாலைக்குள் வைத்து, தற்காலிக யூ டர்ன் வழியை உருவாக்கி பயணிக்கிறார்கள் . 
 
மற்ற யாரைப் பற்றியும் கவலைப் படாமல் தனது சுயநலத்துக்காக விதிகளை மதிக்காமல் இப்படி பயணிக்கும் நபர்களை மன நிலை – ஒழுக்க நிலை என்னவாக இருக்கும்
 
– என்பது பற்றி ஒரு கட்டுரை எழுத திட்டமிடுகிறார் ,ஒரு நாளிதழின் பத்திரிக்கையாளரான ரக்ஷனா ( சமந்தா) .
 
அதற்காக மேற்படி மேம்பாலத்தில் ஒரு ஓரமாக படுத்திருக்கும் பிச்சைக்காரர் ஒருவரிடம் சொல்லி , யூ டர்ன் எடுக்கும் நபர்களின் வாகன எண்களைக் குறித்து வாங்கி,
 
தனது நண்பர் ஒருவர் மூலம் சம்மந்தப்பட்ட நபர்களின் முகவரி பெற்று அவர்களை சந்தித்துப் பேச பட்டியல் தயாரிக்கிறார் . 
அந்த வகையில் அவர் சந்திக்கப் போன ரமேஷ் என்ற – யூ டர்ன் எடுத்த – நபர் கொலை செய்யப்பட, அந்த நாளில் அவரை சந்திக்கப் போய், 
 
 கதவு திறக்காததால் ரக்ஷனா திரும்பி வந்திருக்க, ரக்ஷனாதான் கொலைகாரி என்று சந்தேகப்பட்டு கைது செய்கிறது போலீஸ் . 
 
மேலதிகாரி ஒருவர் (ஆடுகளம் நரேன்) ரக்ஷ்ணாதான் குற்றவாளி என்று  எண்ணி ரிமாண்ட் செய்ய முயல ,
 
ரக்ஷனா தரப்பு நியாயத்தை உணரும் இளம் போலீஸ் அதிகாரி நாயக் ( ஆதி)  உதவுகிறான் 
 
(பத்திரிகையில் உடன் பணியாற்றும் கிரைம் நிருபர் ஆதித்யா  (ராகுல் ரவீந்திரன்) மீது ரக்ஷனாவுக்கு காதல் .
 
அவனும் அதை உணர்ந்திருக்கிறான் . ஏற்றுக் கொண்டும் இருக்கிறான்  . )
 
விசாரணையில் ரக்ஷனா வைத்திருக்கும் பட்டியலில் உள்ள அனைவரும், U வடிவத்தில் தங்கள் கை நரம்பை அறுத்துக் கொண்டு ,
 
செத்திருக்கும் நிலையில் எல்லாவற்றையும் தற்கொலை என்று எண்ணி கேசை முடித்திருகிறது போலீஸ் . 
 
பிச்சைக்காரரை பிடித்து விசாரிக்க, அவர் ரக்ஷ்ணாவுக்கு கொடுப்பதற்காக புதிதாக ஒரு வாகன எண் வைத்திருக்கிறார் . அந்த எண்ணுக்கு 
 
 உரியவரை நாயக் ரக்ஷ்னாவுடன் தேடிப் போக, அந்த புதிய எண்ணுக்குரிய  உரிய நபர் போலீஸ் ஜீப்பின் மீதே விழுந்து தற்கொலை  செய்து கொள்கிறார்
 
ரக்ஷனா குற்றவாளி இல்லை என்று உணரும் உயர் போலீஸ் அதிகாரி அவரை விடுவிப்பதோடு ,
 
இந்த மரணத்தையும் தற்கொலை என்று முடிப்பதோடு , இனி இந்த விஷயத்தை மறந்து விடு என்று ரக்ஷனாவுக்கும் சொல்லி அனுப்புகிறார் . 
மறுநாள் இரண்டு இளைஞர்கள் யூ டர்ன் எடுக்க, அதைப் பார்க்கும் ரக்சனா இருவரையும் காப்பாற்றச் சொல்லி போலீஸ் உதவியை நாடுகிறார் . 
 
நாயக் அவர்கள் இருவரையும் ஒரு தனி அறையில் வைத்துக் கண்காணிக்க, ஒரு நிலையில், 
 
 இருவர் மேலும் அமானுஷ்யம் புகுந்து இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு சாகிறார்கள் . 
 
அந்த மரணங்களையும் போலீஸ் மூடி மறைக்க ,  வெறுத்துப் போகும் ரக்ஷ்னா , மரணங்களுக்கு காரணம் அறிய , தானே அந்த தவறான யூ டர்ன் எடுக்கிறார்
 
அன்று இரவு அவரைக் கொல்ல வருகிறது , மாயா என்ற ஒரு பெண் (பூமிகா) ஆவி. கூடவே மாயாவின் குழந்தையின் ஆவியும்.
 
ஏன் எதற்கு எப்படி ? அவைகளிடம் இருந்து ரக்ஷனா தப்பினாரா இல்லையா?   என்பதே இந்த யூ டர்ன். 
அக்கம்பக்கம் பாராமல் நேர்க்கோட்டில் ஒரே சீராக பயணிக்கிற படம். படத்தின் பலமும் அதுதான் 
 
 மகள் ரக்ஷ்ணாவுக்கு திருமணம் செய்து வைக்க முயலும்  தாயின் தவிப்பாக துவங்கும் படம், ஆதித்யாவின் மனம் கவர முயலும் ரக்ஷ்னாவின் முயற்சியாக போய் , 
 
ரக்ஷ்னா கைது செய்யப்பட்ட நிலையில் நிமிர்ந்து உட்கார வைக்கிறது.  அதன் பிறகு கதைக்கு தேவையான காட்சிகள் மட்டுமே வருகின்றன. 
 
போலீஸ் ஜீப்பின் மேலேயே விழுந்து ஒருவர் சாகும் காட்சியும் அடுத்து இரண்டு பேர்  போலீஸ் கண்காணிப்பில் இருக்கும்போதே ,
 
அடித்துக் கொண்டு சாவதும் , ஆவி வரும் காட்சிகளை விடவும் திகிலும்  திரில்லுமாக அசத்துகின்றன . 
 
அதே நேரம் ரக்ஷனாவை மாயாவின் ஆவி, தனது குழந்தையோடு சந்திக்கும் காட்சியும்  திக் திகீர் திகில் 
ஒழுங்கு உணர்வுக்கு அப்பாற்பட்ட மனிதனின் சுயநலம் எப்படி சம்மந்த சம்மந்தமே இல்லாமல், 
 
இன்னொருவரை பாதிக்கிறது என்பதை ஆவி சொல்லும் போது மனம் கனக்கிறது . 
 
படத்தின் ஹீரோ ஹீரோயின் எல்லாமே நாம்தான் என்பதை உணர்ந்து கெத்தாக நடித்திருக்கிறார் சமந்தா.
 
அதே நேரம் டைரக்டர் சொன்னதைக் கேட்டு, தான் காதலுக்கு ஏங்குவது போலவும் நடித்து இருக்கிறார் 
 
ஆரம்பக் காட்சிகளில்  மஞ்சள் தடவிய உறிச்ச கோழி மாதிரி சில காட்சிகளில் வருகிறார் . முடியல . 
 
ஆதி துடிப்பு காட்டுகிறார் . மற்ற அனைவரும் ஒகே . 
 
பூர்ண சந்திர தேஜஸ்வியின் இசை திகிலுக்கு பிகில் ஊதுகிறது . வாழ்த்துகள்.  
 
நிக்கேத் பொம்மி ரெட்டியின் ஒளிப்பதிவும் சுரேஷ் ஆறுமுகத்தின் படத் தொகுப்பும் குறிப்பாக ஒலித் தொகுப்பு மிக சிறப்பு .
ஒரு சிலவற்றை எளிதில் ஊகிக்க முடிந்தாலும் கடைசி நேரத்தில் அடுத்து அடுத்து வரும் திருப்பங்கள் அசத்தல். பரபரப்பு . 
 
 I LOVE U  என்ற வார்த்தையில் இருந்து U என்ற அடையாளத்துக்கு  ஆதாரம் எடுக்கும் விதம் அபாரம் . 
 
பொதுவாக பேயாகி விட்டால் எல்லாம் தெரிந்து விடும் என்பதுதான் பேய்ப்படத்தின் தன்மை . இந்தப் படத்தில் வரும் பேய்க்கு மற்ற எல்லா சக்திகளும் இருக்கிறது .
 
ஆனால் என் மரணத்துக்கு காரணமானவனை கண்டு பிடித்துக் கொடு என்று ரக்ஷ்ணாவுக்கு கெடு வைக்கிறது . 
 
கேட்டால் அதுதான் கதை என்பார்கள் . சரி விட்ருவோம் 
 
 ஒரு நாளிதழின் பெண் பத்திரிக்கையாளரை போலீஸ் சந்தேகக் கேசில் பிடிப்பது கூட ஒகே.  ஆனால் அவர் காரணம் சொல்லியும், 
 
மண்ணு மாதிரி விழிக்கிறார் உயர் போலீஸ் அதிகாரி .  ரக்ஷனா சொன்னது உண்மையா என்று பத்திரிக்கையில் விசாரிக்க மாட்டாராமா ?
 
அவர்தான் அப்படி என்றால் , நடந்ததை தனது பத்திரிகைக்கு சொல்ல ரக்ஷனா என்ன முயற்சி எடுத்தார் ?
 
ரக்ஷ்ணாவும் சொல்லவில்லை என்றாலும் யார் மூலமும் பத்திரிக்கைக்கு தகவலே போகவில்லை என்பதும் என்ன யதார்த்தம் ?
 
அதுபோல தனக்கு வேண்டிய ஆள் யார் என்று தெரிந்த பின்னரும் மாயா பேய் கொஞ்சம் கூட உடைந்து போகாமல் எகிறுவதும், 
 
கொல்வேன் என்று கொந்தளிப்பதும் எல்லாம் என்ன நியாயம் ? அதெலாம் ஒரு குடும்பப் பேயா ?
 
பலபேரை மாயா கொன்ற நிலையில் இனிமேல் யாரையும் கொல்லக் கூடாது என்ற என்பதற்காக சம்மந்தப்பட்ட அந்த நபர், 
தான்தான் மாயாவின் மரணத்துக்குக் காரணம் என்று பொய்யாக ஒத்துக் கொண்டார் என்று சொல்லி இருந்தால்,  
 
இறுதிக் காட்சிக்கு இன்னும் கனமும் உயிர்ப்பும் கிடைத்து இருக்கும் . 
 
எனினும் ஒரு சமூக அக்கறை விஷயத்தை எடுத்துக் கொண்டு , அதில் திரில் திகில் திக் திகீர் சேர்த்து ஒரு படத்தை ரசிக்கும்படியாக கொடுத்த வகையில் கவர்கிறது படம். 
 
மொத்தத்தில் யூ டர்ன்….. நேர்க்கோடு

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *