டி கிரியேஷன்ஸ் சார்பில் தேவராஜ் தயாரிக்க, கிஷோர், சாய் தன்ஷிகா, தாக்கூர் அனுப் சிங் , தான்யா ஹோப் , கபீர் துஹான் சிங் , வம்சி கிருஷ்ணா , ஷ்ரத்தா தாஸ், ஹர்ஷிகா பூனாச்சா, பிரபாகர் நடிப்பில் சுனில் குமார் தேசாயி இயக்க, உத்கர்ஷா என்ற பெயரில் கன்னடம் தெலுங்கு, மலையாள மொழிகளில் வெளியாகும் படத்தின் தமிழ் மொழி மாற்ற வடிவமே உச்ச கட்டம் 2019.
1980 ஆம் ஆண்டு ராஜ் பரத் எழுத்து இயக்கத்தில் நேரடித் தமிழ்ப் படமாக வந்த உச்சக்கட்டம் மாபெரும் வெற்றிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
சரி இந்த உச்ச கட்டம் 2019ன் கட்டம் எப்படி இருக்கு ? பேசலாம் .
பழைய ரூபாய் நோட்டை மாற்றும் விசயத்தில் மேனன் ( கிஷோர்) என்பவருக்கும் இன்னொரு நபருக்கும் ( கபீர் துஹான் சிங்) இடையே மோதல் .
புது வருடத்தை கல்யாண நிச்சயதார்த்த மோதிர அணிவிப்பு நிகழ்வோடு கொண்டாட மலை வாசஸ்தல ரிசார்ட்டுக்கு வந்திருக்கிறது ஒரு ஜோடி (தாகூர் அனுப் சிங்– சாய் தன்ஷிகா) .
காதலன் அறையில் இல்லாத நேரம் பக்கத்து காட்டேஜில் நடக்கும் கொலையை வீடியோவில் படமாக எடுத்து விடுகிறாள் காதலி .
பக்கத்து அறையில் கொல்லப்பட்டவர் மேனன் என்றும் அவரது அடையாளமே தெரியவில்லை என்றும் கொன்றது அவரது தனிச் செயலாளர் பெண்மணி என்றும் கூறுகிறது போலீஸ் .
வீடியோ எடுத்த காதலியை, மேனனுடன் ஆரம்பத்தில் பண விசயத்தில் மோதிய வில்லனின் கோஷ்டி துரத்த, அவள் ஒரு காரின் டிக்கியில் பதுங்க , அது வில்லன் ஆட்களின் கார் . டிக்கியில் உடன் இருப்பது குத்திக் கொல்லப்பட்டவரின் உடல் . கார் பயணிக்கிறது.
காதலியைத் தேடும் காதலன் வழியில் ஒரு பெண்ணின் ( தான்யா ஹோப் ) காரை மறித்து அவள் உதவியோடு காதலியைத் தேடுகிறான் .
பிணத்தை புதைக்கும் வில்லன் கோஷ்டி காதலியைக் கண்டு பிடித்ததுடன், அவளையும் கொல்ல துரத்துகிறது .
தேடி வரும் காதலனை நையப் புடைக்கிறது . காதலனுக்கு உதவிய பெண்ணுக்கும் ஆபத்து .
காதலன் , காதலி, உதவ வந்த பெண், ஆகியோர் வில்லன் கோஷ்டியிடம் சிக்குவதும் அடித்து போட்டு விட்டு தப்புவதுமாக கதை போக, ஒரு நிலையில் உயிரோடு வருகிறார் மேனன் .
வில்லன் செய்த ஒரு கொடிய கற்பழிப்பில் காதலனுக்கும் மேனனுக்கும் ஒரு சம்மந்தம் .
இருவராலும் வில்லனை பழிவாங்க முடிந்ததா இல்லையா என்பதே இந்த உச்ச கட்டம் 2019.
மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போது தமிழ் நாட்டோடு சேர வேண்டிய, ஆனால் இங்குள்ள திராவிட , தேசிய , கம்யூனிச அரசியல்வாதிகளின் சுயநலத்தால் கர்நாடகாவுடன் போய் விட்ட –இயற்கை எழில் கொஞ்சும் குடகு மலைக் காடுகளில்
அற்புதமான லொகேஷன்களில் பெரும்பகுதி படத்தை எடுத்து இருக்கிறார்கள் . காடுகள் , மரங்கள், அருவிகள், புதர்கள் என்று மயக்குகிறது லொக்கேஷன் . பி. ராஜன் விஷ்ணுவர்த்தன் இருவரின் ஒளிப்பதிவும் அருமை .
பெல்லி டான்ஸ்…. நிறைய கிளாமர் பெண்கள் . எல்லோரும் எப்போ அவுந்துடுமோ என்ற மாதிரியே உடை அணிந்து இருக்கிறார்கள் .
மற்றபடி, காட்டுக்குள் தறிகெட்டு பல கேரக்டர்களும் ஓடுவது போல படத்தில் தறி கெட்டு ஓடுகிறது திரைக்கதை .
நாயகனும் வில்லனும் மாறி மாறி அடித்துக் கொள்கிறார்கள் . . தப்பித்துக் கொள்கிறார்கள் . அப்புறம் அடிக்கிறார்கள் சிக்கிக் கொள்கிறார்கள் . தப்பிக்கிறார்கள்.
பெண்கள் பரிதாபமாய் அழுகிறார்கள் . அப்புறம் திடீர் திடீரென்று வீராங்கனை ஆகிறார்கள் .
அடுத்ததடுத்து ரெஸ்ட்லிங் சண்டைகளை பார்ப்பது போல ஏகப்பட்ட சண்டைக் காட்சிகள் .
சதக் சதக் என்று யாரவது யாரையாவது சிறிதும் பெரிதுமாக பல்வேறு வித கத்திகளால் குத்திக் கொண்டே இருக்கிறார்கள் . அல்லது இழுத்துத் தள்ளி சுவரிலும் மரத்திலும் முட்ட வைக்கிறார்கள்.
ஏகப்பட்ட ரத்தம் .. அதாவது சிகப்பு பெயின்ட் .
முன்பே ஒரு தமிழ்ப் படத்தில் வில்லனாக நடித்து விட்ட தாகூர் அனுப் சிங் அறிமுகம் என்று டைட்டிலில் போடுகிறார்கள் .
தன்ஷிகா படம் முழுக்க அலறிக் கொண்டும் கதறிக் கொண்டும் இருக்கிறார்.
இசை இரைச்சல் .எஃபெக்ட் போட்டவர்கள் களைப்பில் கதறி இருப்பார்கள் . அவ்வளவு வேலை .
படம் முடியும் போது நிறுத்தி நிதானமாக ஒரு பிளாஷ்பேக் சொல்கிறார்கள் . கற்பழிப்புக் காட்சி காட்ட வேண்டியதுதான் . அதற்காக இப்படியா ?
நல்ல கதையும் திரைக்கதையும் தேவைப் படும் படம் .