2D என்டர்டைன்மென்ட் சார்பில் ஜோதிகா & சூர்யா தயாரிக்க, ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன் இணை தயாரிப்பில், ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி நடிப்பில், இதற்கு முன்பு கத்துக்குட்டி படத்தை இயக்கிய இரா.சரவணன் இயக்கி இருக்கும் படம் உடன் பிறப்பே .
எல்லையில்லாப் பாசம் கொண்ட ஓர் அண்ணன் – தங்கை ( சசிகுமார் – ஜோதிகா). தங்கையின் கணவர் பள்ளிக்கூட வாத்தியார் ( சமுத்திரக்கனி) . நல்லது கெட்டது இரண்டையும் சட்டப்படிதான் எதிர்கொள்ள வேண்டும் என்பது வாத்தியாரின் எண்ணம். அதற்கெல்லாம் காத்திருக்க முடியாது . அதற்கு தாமதம் ஆகும் . தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் . அடிதடி மூலம் உடனடியாக நீதி வழங்க வேண்டும் என்பது அண்ணனின் செயல்பாடு.
வாத்தியாரின் மகன் பள்ளி வயதிலேயே தாய்மாமனால் கவரப்பட்டு அவர் பாணியில் செயல்பட , அதனால் வாத்தியார் குடும்பத்துக்கு ஓர் இழப்பு . அதனால் அண்ணனின் குடும்பத்தை தள்ளி வைக்கிறார் . தடுமாறுகிறாள் தங்கை . அண்னன் மனைவி(சிஜா ரோ ஸ்) , இரண்டு குடும்பத்துக்கும் பொதுவான ஓர் உறவுக்காரன் (சூரி) இருவரும் நடுவு நிலைமை .
காலம் மாறியும் மாறாத பகை அண்ணனின் மகன் , வாத்தியாரின் மகள் கல்யாண வயதாகியும், திருமணத்துக்கு குறுக்கே நிற்க அதன் பின்னர் என்ன ஆனது என்பதே உடன்பிறப்பே .
கிராமியப் பண்பாடு , பழக்க வழக்கம் , கலாசார நிகழ்வுகள், இயல்பு வாழ்க்கை, உறவுகளின் பெருமை, இவற்றை காட்டுவதில் கைதேர்ந்து இயங்கி இயக்கி இருக்கிறார் சரவணன் .
அதோடு நிலத்தடி நீரை வியாபார தேவைக்காக போர் போட்டு உறிஞ்சும் அவலம் , ஆழ் துளைக் கிணறுகளை மூடாததால் வரும் விபரீதம் , பெண்களை எதிர்பாராத மயக்கத்துக்கு ஆளாக்கி பாலியல் வன்கொடுமை செய்யும் அவலம் இவற்றையும் சொல்லி இருக்கிறார் . அதிலும் மூடாத ஆழ்துளைக் கிணறு , பெண்கள் வன் கொடுமை விஷயம் இரண்டையும் திரைக்கதையில் கோர்த்த விதம் அருமை. நம்மாழ்வாரை நினைவு கூர்வதும் சிறப்பு .தாலி செண்டிமெண்ட் பகடி போன்ற காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன
படத்தின் முதன்மைக் கதாபாத்திரம் ஜோதிகாவுக்கு . அவருக்காகவே எழுதப்பட்ட காட்சிகள் . கம்பீரம், கண்ணீர், கனிவு, கோபம் என்று சர்வ வாய்ப்புகளும் தரும் கதாபாத்திரத்துக்கு சிறப்பான நடிப்பால் நியாயம் செய்து இருக்கிறார்.
அங்கங்கே வெள்ளை முடி தெரியும் தாடி , முகத்தில் அதற்கேற்ற முதிர்ச்சி , அதிரடி சண்டைக் காட்சிகள் என்று அண்ணன் கதாபாத்திரத்தை அழகாக செய்து இருக்கிறார் சசி குமார் . மாப்பிள்ளை இறந்த நிலையில் அழும் காட்சியில் நெகிழ வைக்கிறார் .
கொஞ்சம் அசந்தாலும் வில்லத்தனமாகப் போய் விட வாய்ப்புள்ள கதாபாத்திரத்தின் கவனமான காட்சிகளை இன்னும் கவனமான தன் நடிப்பால் தாங்குகிறார் சமுத்திரக்கனி.
இமானின் இசையில் யுகபாரதி , சினேகன் வரிகளில் அண்ணே என்கண்ணே , ஒத்தைப்பனை காட்டேரி பாடல்கள் இதயம் தொடுகின் றன. . கிராமிய அழகு, திருவிழாக் காட்சிகள் , உணர்வு பூர்வமான காட்சிகள் என்று எல்லா வகையிலும் அசத்தலான ஒளிப்பதிவில் கவர்கிறார் வேல் ராஜ் . ரூபனின் படத் தொகுப்பும் நேர்த்தி
இரண்டு குடும்பத்துக்கும் இடையில் அல்லாடும் கதாபாத்திரத்தில் காமெடி , நெகிழ்ச்சி இரண்டும் கொண்டு வருகிறார் சூரி .
அண்ணன் மனைவியாக வரும் சிஜா ரோஸ் பாந்தம்.
ஒரு சில காட்சிகளே வந்தாலும் ஆடுகளம் நரேன், வேல ராமமூர்த்தி , தீபா ஆகியோரின் கதாபாத்திர மேன்மையால் நடிப்பும் சிறப்பாக மிளிர்கிறது .
வில்லனாக கலையரசன் சிறப்பு
பார்த்துப் பழகிய காட்சிகள் அடுத்து என்ன வரும் என்பதை எளிதாக யூகிக்க முடிகிற திரைக்கதை என்று படம் போனாலும், அந்தக் காட்சிகள் வரும்போது நாம் நெகிழ்ந்து விடும் அளவுக்கு சரவணனின் இயக்கமும் நடிகர்களின் பங்களிப்பும் சிறப்பாக இருக்கிறது .
கிழக்குச் சீமையிலே படத்தில் எல்லோரும் கொஞ்சம் நிதானமாகவும் பக்குவமாகவும் இருந்தால் எப்படி இருக்கும்? என்ன ஆகும்? அப்படி ஒரு முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்று இருக்கிறார்கள் .