நாடக நடிகர்களை தென்னிந்திய நடிகர் சங்கம் மதிப்பது இல்லை என்ற ஒரு குற்றச்சாட்டு ரொம்ப நாட்களாகவே இருந்து வந்தது . ஆனால் அண்மையில் தேர்தலில் வென்று பதவிக்கு வந்த நாசர்- விஷால் அணி அந்த குற்றச்சாட்டைக் களையும் வகையில் பல செயல்பாடுகளைச் செய்து வருகிறது .
அவற்றில் ஒன்றுதான் , அண்மையில் அவர்கள் சங்க உறுப்பினர்கள் அனைவரின் முழு விவரங்களையும் சேகரித்த பணி
நடிகர் சங்க வரலற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு….
தமிழகம் எங்கும் சென்று , நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரின் விவரங்கள்,அவர்களது குடும்ப அங்கத்தினர்களின் படிப்பு தொழில் உள்ளிட்ட தகவல்கள் , அவர்களது நிலைமை , உறுப்பினரின் பொருளாதார சூழல், உடல் நலம் , தற்போதைய அவர்களது சூழ் நிலை , தனித் திறமைகள் , பிற தேவைகள் இவைகள் பற்றி …
முழுமை என்றால் மிக முழுமையான விவரங்களை…. சும்மா பேப்பரில் அல்ல , போட்டோ மற்றும் வீடியோவில் பதிவு செய்து…. சிறு குறைபாடும் இல்லாத வகையில் முழுமையாக பதிவு செய்தார்கள் .
குறிப்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உள்ள இளம் உறுப்பினர்கள் பலர் இதில் காட்டிய ஆர்வமும் போட்ட உழைப்பும் அபாரமானது. இந்த பணியை மிக சரியாக செய்து அனுபவம் மிக்க மூத்த ஏழை எளிய உறுப்பினர்களின் ஆசீர்வதங்களையும் பெற்றுக் கொண்டு வந்துள்ளார்கள் இந்த இளம் நடிகர்கள்.
குறிப்பாக திருச்சி , புதுக் கோட்டை ஏரியாவில் ரமணா , ஹேமச் சந்திரன் , நாமக்கல் பகுதியில் நந்தா, வேலூர் பகுதியில் விஜய் பிரபாகர் மற்றும் பிரேம்,தஞ்சையில் பசுபதி, சேலம் பகுதியில் கோவை சரளா , பாண்டிச்சேரியில் மனோபாலா ஆகியோர் நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்க,
மதுரை ஏரியாவில் ஓடித் தேடி அந்த வேலையை முழு ஈடுபாட்டுடன் செய்தவர் நடிகர் உதயா .
மதுரையில் அவர் அந்த பணியில் இருந்தபோது கே.வி. ராமச்சந்திரன் என்ற 88 வயதான பழம் பெரும் நடிகர் ஒருவர் திருப்பரங்குன்றத்தில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஆதரவின்றி இருப்பது,
கோவை சரளா மூலம் உதயாவுக்கு தெரிய வந்திருக்கிறது. அவருக்கு கோவை சரளா உதவிகள் செய்து கொண்டு இருப்பதும் தெரிய வந்திருகிறது .
திருப்பரங்குன்றத்தில் உள்ள விநாயகர் முதியோர் இல்லத்துக்கு சென்று மேற்படி கே வி ராமச்சந்திரனை சந்தித்த உதயாவுக்கு ஆச்சர்ய அதிர்ச்சி . இந்த கே.வி. ராமச் சந்திரன் அந்த ராமச்சந்திரனோடு அதாவது எம் ஜி ஆரோடு ஒரு காலத்தில் பழகியவர் . அவருடன் நடித்தவர் .
இன்னொரு ராமச்சந்திரனான பழம்பெரும் நடிகர் டி ஆர் ராமச்சந்திரன் இவருக்கு பக்கத்து ஊர்க்காரர் .
கே வி ராமச்சந்திரன் பற்றிய விவரங்களைக் கேட்டு அசந்து போய் விட்டார் உதயா . “என்னென்னே உதவிகள் வேண்டும்?” என்று கேட்க ,
“பெருசாக ஒன்றும் வேண்டாம் . நான் உயிரோடு இருக்கும்வரை இந்த முதியோர் இல்லத்துக்கு பணம் அனுப்பினால் போதும் ” என்று கூறி இருக்கிறார் கே.வி.ராமச்சந்திரன் .
இப்போது அவருக்கு நடிகர் சங்கம் சார்பில் மாதம் ஆயிரம் ரூபாய் தவிர கோவை சரளா, ஐசரி கணேஷ் ஆகியோரும் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்க ஆரம்பித்துள்ளனர் .
நடிகர் உதயா தன் பங்கிற்கு கே வி ராமச்சந்திரனின் மருத்துவ செலவுக்கு தன்னால் இயன்ற ஒரு தொகையை கொடுத்து அவரிடம் ஆசீர்வாதமும் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார் .
சபாஷ் நடிகாஸ்!