செல்போன், டவர், சிக்னல் , அது தொடர்பான விஷயங்கள், கிரைம் , வில்லத்தனம் , காதல் , காமெடி , ஆக்சன் , த்ரில் என்று முழு சாப்பாடாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் தினேஷும் பிந்து மாதவியும் காதல் ரசத்தை ஊற்றி சோறு நொறுங்க நொறுங்கப் பிசைய ,
விஞ்ஞானியாக வளரத் துடிக்கும் இளைஞராக வித்தியாசமான வேடத்தில் நகுல் அசத்தி இருப்பது, படத்தின் டிரைலரிலும் பாடல் காட்சியிலும் தெரிகிறது .தீபக் குமார் பாதியின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது
எஸ் எஸ் தமனின் இசையில் ”சட்டுன்னு என்ன சாச்சுபுட்டா”… ”என் தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்”…, நகுல் நடிக்கும் விஞ்ஞானி பாட்டு மூன்றும் மிக ஈர்ப்பாக இருப்பதோடு நடனம் , மாண்டேஜஸ் மற்றும் படமாக்கப்பட்ட விதமும் அருமையாக இருக்கிறது .
நல்ல சரக்கு நன்றாக விலைபோகும் என்பதற்கு உதாரணமாக, இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவீஸ் வாங்கி வெளியிடுகிறது.
அதற்கு உதயநிதிக்கு நன்றி சொல்வதற்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்து படக் குழு .
நிகழ்ச்சியில் பேசிய பலரும் உதயநிதி வாங்கிய உடனேயே படத்தின் வெற்றி உறுதியாகி விட்டது என்று உற்சாகமாக பேசினார்கள் . நன்றி சொன்னார்கள் .
நிகழ்ச்சியில் பேசிய கலை இயக்குனர் வன ராஜ் ” உதயநிதி சார் படங்களில் வேலை செய்யும்போது ஓர் ஆர்ட் டைரக்டாக சுதந்திரமா வேலை செய்யலாம். இந்த தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் படத்திலும் அப்படித்தானே வேலை செய்தேன் .உதாரணமா நான் இந்தப் படத்துக்கு போட்ட செல்போன் டவரை பார்த்து, பல செல் போன் கம்பெனி ஆட்கள் , ‘எங்க டவர் பக்கத்துல நீங்க எப்படி இன்னொரு கம்பெனிக்கு டவர் வைக்கலாம்?’னு சொல்லி சண்டைக்கே வந்துட்டாங்க . அப்புறம் இது சினிமா செட்னு சொன்ன உடனே ஆச்சர்யப்பட்டுட்டு போனாங்க . அவ்ளோ திருப்தியா வேலை பார்த்தேன் .இப்போ இந்தப் படத்தையும் உதயநிதி சாரே ரிலீஸ் பண்றது சந்தோஷமா இருக்கு ” என்றார்
நிகழ்ச்சியில் பேசிய நகுல் “சில நாட்களுக்கு முன்னால் உதயநிதி சார் நடிச்ச நண்பேன்டா பட டிரைலர் பார்த்தேன். சூப்பரா இருந்தது. முதல் நாள் முதல் ஷோ தியேட்டர் போய்ப் பாத்துடணும்னு யோசிச்சு கிட்டு இருந்தப்ப, நம்ம படத்தையும் உதயநிதி சாரே வாங்கி ரிலீஸ் பண்ற தகவல் வந்தது. ரொம்ப சந்தோசம் . அது மட்டுமில்ல … நண்பேன்டா பிரவியூ ஷோவுக்கு மறக்காம உதயநிதி சார் கூப்பிடனும் ” என்றார் .
இயக்குனர் ரமேஷ் ரங்கசாமி பேசியபோது ” பொதுவா நம்முடைய பொருளை ஒருத்தர் கிட்ட விற்கப் போனா , அது அவங்களுக்கு பிடிச்சு இருந்தாலும் விலையை குறைக்கறதுக்காக அது சொட்டை இது நொள்ளைன்னு சொல்வாங்க . ஆனா உதயநிதி சார் இந்தப் படத்தை முழுக்க பாராட்டி வாங்கினார் . அந்த குணம் ரொம்ப பெருசு ” என்றார் .
கவிஞர் மதன் கார்க்கி “இந்தப் படத்தில் நான் எழுதி இதுக்கும் ‘தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்; என் தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் .’ பாடலில் ‘குறுஞ்செய்தி எழுத விசைப் பலகை அழுத்தவும் பெருஞ் செய்தி எழுத வாழ்க்கையை அழுத்தவும்’என்று, பாடல் முழுக்க அழுத்தவும் என்ற வார்த்தையை பயன்படுத்தி எழுதி இருப்பேன். அந்த பாடல் வரிகளை மற்ற எல்லோரையும் விட இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சந்திரனும் இயக்குனர் ராம் பிரகாஷும் சரியாகப் புரிந்து கொண்டு , உதயநிதி ஸ்டாலினை அழுத்தி , அவரை வாங்கி ரிலீஸ் செய்ய வைத்து விட்டார்கள் . அப்போதே படத்தின் வெற்றி உறுதி ஆகி விட்டது ” என்றார் .
அதற்கு பதில் சொல்லும் விதமாக பேசிய உதயநிதி ஸ்டாலின் ” இந்தப் படத்தை நான் வாங்க இசையமைப்பாளர் எஸ் எஸ் தமன்தான் காரணம்னு சொல்லணும் ஒருமுறை படத்தின் பாடல்களை எஃப் எம் மில் கேட்டேன் . நன்றாக இருந்தது. படம் பற்றி விசாரித்த போது , தயாரித்திருக்கும் சந்திரன் எனக்கு முன்பே தெரிந்த நண்பர் என்பது புரிந்தது.
ஆக, கார்க்கி சொன்னது போல அவர் என்னை அழுத்தவில்லை . நான்தான் அவரது தொலைபேசி எண்ணை அழுத்தினேன். படம் பார்த்தேன் . படம் ரொம்ப நல்லா இருந்தது. வாங்கி ரிலீஸ் செய்கிறேன். பொதுவாக நான் தயாரிக்கும் படங்கள் கூட தோல்வி அடைந்தது உண்டு . ஆனால் வாங்கி வெளியிடும் படம் எதுவும் தோற்றது இல்லை . இந்தப் படமும் பெரும் வெற்றி பெரும் ” என்றார் .
பிப்ரவரி 20 ஆம் தேதி திரைக்கு வருகிறது… ‘தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் ‘.