இன்று ஆளவந்தான் படத்தின் அடையாளமாக இருப்பது … ‘கடவுள் பாதி மிருகம் பாதி ‘ பாடல்தான் .
இசை மற்றும் குரல் இரண்டும் கொப்பளித்து வெளிப்பட, காட்சியிலும் காட்டப்பட்டு…. ஊரறியப் பிரபலமான ஒரு பாட்டின் முதல் அடிகளை படத்துக்கு பெயராக வைத்தால் சுலபமாக மக்கள் மனதுக்குள் நங்கூரம் போடும்
— என்கிற அந்த நாற்பதாண்டு கால நட்பு விதியின் அடிப்படையில் , செலிப்ஸ் அண்ட் ரெட்கார்பெட் நிறுவனம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்கும் படத்தின் தமிழ் வடிவத்தின் பெயர்…. கடவுள் பாதி மிருகம் பாதி.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கடவுள் குணம் எனப்படும் நல்ல குணங்களும் உண்டு . மிருக குணம் எனப்படும் கெட்ட குணங்களும் உண்டு . நல்ல குணங்களோடு இருக்க விரும்பும் ஒருவனின் மிருக குணங்களை தூண்டி விட்டால் என்ன ஆகும் என்பதுதான் படத்தின் கதையாம் . (டிக் அடிக்க சொல்லுதா டீடெய்லு…?)
படம் சம்மந்தப்பட்டதொரு பலவேலைக்காரரின் பெயர் ராஜ் . படத்தின் தயாரிப்பாளர் இவரே . படத்தின் இரண்டு இயக்குனர்களில் இவரும் ஒருவர் . இன்னொருவர் பெயர் சுரேஷ் . படத்தின் இரண்டு ஹீரோக்களில் இவரும் ஒருவர். இன்னொருவர் பெயர் அபிஷேக் வினோத்.
இவர்களோடு மைனா படத்தின் மூலம் அறியப்பட்ட சேது, ஸ்வேதா விஜய் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்தித்தில் நடித்திருக்கிறார் பூஜா.
படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தொட்டுத் தொடரும் ஒரு ‘அட்டு’ காதல் கதை வெளியே வந்தது.
அந்த பழைய பூனைக்குட்டி வெளியே வருவதற்குமுன்பு….
போலீஸ் ஸ்டேஷனில் சேரில் உட்கார்ந்து இருக்கும் இன்ஸ்பெக்டரை கீழே உட்கார்ந்து இருக்கும் ஹீரோ சட்டென்று எழுந்து நெஞ்சில் ‘திம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம் ….’ என்று உதைக்க , அந்த இன்ஸ்பெக்டர் ஸ்லோமோஷனில் பின்பக்கமாகப் பறக்கும் டீசர் காட்டினார்கள். ஒரு டிரைலர் காட்டினார்கள். மூன்று பாடல்களை போட்டுக் காட்டினார்கள். இனியும் பூஜா இளம்பெண்ணாக நடித்தால் அவருக்கு குளோசப் வைக்க ஒளிப்பதிவாளர்கள் மேஜிக் செய்தால்தான முடியும் என்பது புரிந்தது.
இந்தப் படத்தில் தான் நடிக்க வந்தது எப்படி என்பதை சொல்ல வந்த பூஜா அந்த… சொந்த…. காதல் கதையை படு உற்சாகமாக விவரித்தார் .
பதினாறு வயது பருவப் பெண்ணாக பூஜா பெங்களூரில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே இருக்கும் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அந்தக் காலத்தில், ஒரு கலை நிகழ்ச்சிக்காக ஆண்கள் பெண்கள் சேர்ந்து படிக்கும் கல்லூரிக்கு போனாராம். ரொம்ப எக்சைட்டிங்காக இருந்ததாம் . அப்போது அந்த கல்லூரி மாணவர் ஒருவரோடு அறிமுகம் ஏற்பட்டதாம்.
அப்புறம் சில தடவைகள் வெளியே சந்தித்த அந்த இளைஞர், திடீரென்று பூஜாவிடம் ஐ லவ் யூ சொன்னாராம். ஆனால் அப்பா அடிப்பார் என்ற பயத்தில் பூஜா அந்தக் காதலை ஏற்கவில்லையாம். (வாவ்! வாட் எ ரீசன் !)
அந்த நபர்தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் நடிகருமான ராஜ் .
“கொஞ்ச நாள் முன்னாடி போன் பண்ணி நான் ஒரு படம் எடுக்கப்போறேன் . நீ நடிக்கணும்னு சொன்னான். . ஏதோ கலாய்க்கிறான்னு நினைச்சு ‘ஹேய்… போடா .. முடியாது’ன்னு சொல்லிட்டேன். திரும்ப கூப்பிட்டு அவன் சொல்லும்போதுதான் சீரியஸா பேசறான்னு புரிஞ்சது . நடிச்சுக் கொடுத்தேன். (அப்போ படத்துல பொங்கி வழியுமோ?) ” என்றவர் “அவன் இப்பவும் என் மேல லவ்வாதான் இருக்கான் ” என்று சொல்ல,
பக்கத்தில் இருந்த ராஜ் உணர்ச்சிவசப்பட்டு “இப்பவாவது என் காதலை ஏத்துக்க ….” என்று கேட்க ,” ஹேய், போடா… முடியாது ” என்றார் பூஜா . (அடங்கப்பா.. படத்துக்கு எப்படி எல்லாம் புரமோஷன் பண்றாங்க !)
“படம் எடுக்கறதை விட ரிலீஸ் பண்றது கஷ்டம்னு சொல்வாங்க . பட்சே…. எனிக்கு படம் எடுக்கறத விட ஆடியோ ரிலீஸ் ஃபங்க்ஷன் வைக்கிறது கஷ்டமாயிட்டுண்டு.. ஆயிரம் பேரையாவது கூப்பிட்டு இருப்பேன். யாரும் வரல. வந்து விஷ் பண்ணின ஞானவேல் ராஜாவுக்கு நன்றி ” என்றார் ராஜ் .
வெள்ளையான புள்ள மட்டும் இல்ல . வெள்ளந்தியான புள்ளையும் கூட !