ஜுனா பிக்சர்ஸ் சார்பில் என் சண்முக சுந்தரம் மற்றும் கே முகமது யாசின் தயாரிக்க, அவ்ரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் மற்றும் காவியா வேணுகோபால் ‘இணைந்து’ வெளியிட …
அனு, மைம் கோபி, தீபக் பரமேஷ், ஜாக்குலின் பிரகாஷ், குணாளன் மோகன் , மோர்னா அனிதா ஆகியோர் நடிப்பில்…
எம் ஆர் கே யின் கதைக்கு ஸ்ரீ கிருஷ்ணாவுடன் சேர்ந்து திரைக்கதை வசனம் எழுதி, ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கி இருக்கும் படம் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’படப் பாடல் வரியைக் கைக்கொண்டு வரும் இந்தப் படத்தின் பெயர், இது ஒரு அட்டகாசமான காதல் கதையோ என்று நினைக்க வைக்கிறது. ஆனால் அதையும் தாண்டிப் பயணித்து இருக்கிறார் இயக்குனர் .
பேய்ப் பயணம் !
” வெளிநாட்டில் இருந்து தன் மகனின் மருத்துவ உதவிக்காக சென்னை வரும் ஒரு குடும்பம்…. திருமணம் செய்து கொள்ளாமலே லிவிங் டுகெதர் ஆக வாழும் ஒரு தம்பதி…… இவர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளுக்குப் பின்னால் ஓர் எட்டு வயது ஆவி இருப்பது தெரிய வருகிறது . அது என்ன? ஏன்? என்பதுதான் இந்தப் படம் ” என்று வெகு இயல்பாக சொன்னாலும் ,
உள்ளுக்குள்ளே பூடகமாக ஓர் அட்டகாசமான சமாச்சாரம் வைத்து இருக்கிறார் இயக்குனர் .
கல்யாணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகெதர் அல்லது கோயிங் ஸ்டெடி டைப்பில் வாழ்ந்து ஒரு குழந்தையும் பெற்றுப் போட்டு விட்டு பிரியும் ஒரு தம்பதிக்கு ஏற்படும் நிகழ்வுகள் இந்தப் படத்தின் திரைக்கதையில் மிக முக்கியமானவை .
இதன் மூலம் — அமெரிக்கா ஃபுளோரிடாவில் டைரக்ஷன் படித்து பல குறும்படங்களை இயக்கிய 26 வயது இளைஞரே என்றாலும் — கலாச்சார சீர்கேட்டுக்கு எதிராகத் தனது படைப்புக் கொடியைப் பிடிக்கிறார் இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் .
(பின்னே ! அற்ப சந்தோஷத்தின் விளைவாக பெத்துப் ‘போட’ப்பட்டு அனாதையாக இறக்கும் குழந்தைகள் எல்லாம், இனிமேல் பேயாக வந்து மிரட்டும் என்றால் , யாராவது திருட்டுத்தனமாக குழந்தை பெற்றுத் தெருவில் எறிந்து விட்டுப் போவார்களா ?)
“அதே நேரம் இந்தப் படத்தில் பேய் என்ற பெயரில் வழக்கமான — உங்களை சலிப்பாக்குகிற எந்த விஷயமும் இருக்காது . இது குடும்பத்தோடு -குழந்தைகளோடு உட்கார்ந்து பார்க்க முடிகிற நல்லுணர்வுப் படமாகவே (feel good movie) இருக்கும் ” என்கிறார் இயக்குனர் .
படத்தின் விளம்பரத்தில்…
ஒரு கல்லறையின் மேல் பொறிக்கப்பட்டு இருப்பதாக வரும் , ‘பெயர் டெய்சி பிறப்பு 28.1.2014 இறப்பு 28.1.2014. வயது 8.’ என்ற ஒரு வாசகம கவனம் கவர்ந்தது .
“பிறந்த அன்றே இறந்த குழந்தைக்கு எப்படி எட்டு வயது ஆகும் ? பொதுவாக ஆவிகள் எந்த வயசில் இறந்ததோ அந்த வயசிலேயே இருப்பதுதானே வழக்கம் (?!) “என்று கேட்டால் …
திருமணத்துக்குப் பிறகு கர்ப்பம் ஆகி ஆறு மாதத்தில் அந்தக் கருக் கலைந்த ஒரு பெண்ணை, நான்கு வருடங்களுக்குப் பிறகு ஹிப்னாடிச மயக்கத்தில் ஆழ்த்தியபோது அவள் ஒரு நாலு வயது மகனுடன் மனதளவில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நிஜ சம்பவத்தைக் கூறி, ”அதில் இருந்து இன்ஸ்பயர் ஆன விஷயம் இது” என்று சொல்லி .. சும்மா ‘மிரட்டுகிறார்’ இயக்குனர் . (தெளிவாய்த்தான் இருக்காய்ங்க!)
“அன்புள்ள சாமிக்கு , நான் எங்க அம்மா அப்பாவை பழி வாங்கணும். நீதான் உதவி செய்யணும்- இப்படிக்கு டெய்சி ” என்ற வாசகமும் பட விளம்பரங்களில் வருவது , இது வழக்கமான படம் இல்லை என்ற நம்பிக்கையை தருகிறது.
படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் தீபக் பரமேஷ் ” நான் இந்தப் படம் தயாரிப்பு பற்றிக் கேள்விப்பட்டு இன்டர்நெட்டில் எனது காட்சித் தொகுப்பு (ஷோ ரீல் ) ஒன்றை அனுப்பினேன் . அதைப் பார்த்து வாய்ப்புக் கொடுத்தார் ” இயக்குனர் என்கிறார் .
இன்னொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குணாளன் மோகன் “நான் இந்தப் படத்தில் மட்டுமல்லாது , விஷ்ணு விஷால் நடிக்கும் வீர தீர சூரன் என்ற படத்திலும் வில்லனாக நடிக்கிறேன் . விஷ்ணு விஷால் , சூரி ஆகியோரிடம் இந்த உனக்கென்ன வேணும சொல்லு படத்தின் டீசரைக் காட்டினேன் .
ரொம்பவும் இம்ப்ரெஸ் ஆகிப் பாராட்டிய விஷ்ணு விஷால் , தனது சமூக வலைதளங்களிலும் அதை ஷேர் செய்தார் . சூரியோ இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கத்துக்கு பொன் செய்து பாராட்டினார் ” என்றார் .
படத்தை வாங்கி வெளியிடும் அவுரா பிக்சர்ஸ் மகேஷ் ” நாங்கள் த்ரிஷ்யம் இந்திப் படம் உட்பட பல படங்களையும் டெர்மினேட்டர் உட்பட பல ஆங்கிலப் படங்களையும் வாங்கி வெளியிட்டு இருக்கிறோம் . தமிழில் இது முதல் படம் . படம் மிக சிறப்பாக இருக்கிறது ” என்கிறார் .
அனைவருக்கும் வாழ்த்துகள் .
காவியாவுக்கும் மகேஷுக்கும் கல்யாண வாழ்த்துகள் !
( unakkenna venum teaser link : https://www.youtube.com/watch?