ஜுனா பிக்சர்ஸ் சார்பில் என் சண்முக சுந்தரம் மற்றும் கே முகமது யாசின் தயாரிக்க, அவ்ரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் மற்றும் காவியா மகேஷ் இணைந்து வெளியிட …
அனு, மைம் கோபி, தீபக் பரமேஷ், ஜாக்குலின் பிரகாஷ், குணாளன் மோகன் , மோர்னா அனிதா ஆகியோர் நடிப்பில்…
எம் ஆர் கே யின் கதைக்கு ஸ்ரீ கிருஷ்ணாவுடன் சேர்ந்து திரைக்கதை வசனம் எழுதி, ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கி இருக்கும் படம் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’
இந்த அவ்ரா சினிமாஸ் மகேஷ் மற்றும் காவ்யா தம்பதி இதற்கு முன்பு டெர்மினேட்டர் , மிஷன் இம்பாசிபிள் உள்ளிட்ட பல ஆங்கிலப் படங்களையும் திரிஷ்யம் இந்தி மறு ஆக்கத்தையும் வெளியிட்டவர்கள் . இவர்கள் வெளியிடும் முதல் தமிழ்ப்படம் இது .
படத்தின் இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் ,
தமிழ் நாட்டின் திருச்சியில் இருந்து இலங்கைக்கு போன ஒரு குடும்பத்தில் பிறந்து அமெரிக்கா ஃபுளோரிடாவில் டைரக்ஷன் படித்து சிங்கப்பூரில் பணியாற்றி பல குறும்படங்களை இயக்கிய 26 வயது இளைஞர்.
வெளிநாட்டில் இருந்து தன் மகனின் மருத்துவ உதவிக்காக சென்னை வரும் ஒரு குடும்பம்…. திருமணம் செய்து கொள்ளாமலே லிவிங் டுகெதர் ஆக வாழும் ஒரு தம்பதி…… இவர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளுக்குப் பின்னால் ஓர் எட்டு வயது ஆவி இருப்பது தெரிய வருகிறது . அது என்ன? ஏன்? என்பதை சொல்லும் அதே நேரம் …
கல்யாணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகெதர் அல்லது கோயிங் ஸ்டெடி டைப்பில் வாழ்ந்து ஒரு குழந்தையும் பெற்றுப் போட்டு விட்டு பிரியும் ஒரு தம்பதிக்கு ஏற்படும் நிகழ்வுகள் இந்தப் படத்தின் திரைக்கதையில் மிக முக்கியமானவை
படத்தின் விளம்பரத்தில்…
ஒரு கல்லறையின் மேல் பொறிக்கப்பட்டு இருப்பதாக வரும் , ‘பெயர் டெய்சி பிறப்பு 28.1.2014 இறப்பு 28.1.2014. வயது 8.’ என்ற ஒரு வாசகம கவனம் கவர்கிறது .
இப்படி ஒரு பேய்ப் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில், ‘இருக்கு ஆனா இல்ல’ பட இயக்குனர் டீகே, டார்லிங் பட இயக்குனர் சாம் ஆண்டன் , மாஸ் பட இயக்குனர் வெங்கட் பிரபு ஆகிய மூன்று பேய்ப்பட இயக்குனர்களும் இவர்களுடன் தயாரிப்பாளர் ஏ. எம் ரத்னமும் கலந்து கொண்டனர் .
ஏ. எம் ரத்னம் ?
காரணங்கள் இரண்டு . ஏ எம் ரத்னம் போலவே மகேஷ் தீவிர சாய்பாபா பக்தர் . அஜித் நடித்த மூன்று படங்களை தயாரிப்பவர் ரத்னம். அஜித்தின் தீவிர ரசிகர் மகேஷ் . இவர்களை இணைத்தவர் சுரேஷ் சந்திரா . தவிர உனக்கென வேணும் சொல்லு படத்தை மகேஷிடம் கொண்டு போனவரும் அவரே .
எனவே விழாவில் சுரேஷ் சந்திராவுக்கு நெகிழ்வான பாராட்டுகள் நிறையவே இருந்தன . படம் சம்மந்தப்பட்ட பலரும் சுரேஷ் சந்திராவுக்கு மனப்பூர்வமான நன்றிகள் கூறினர்.
படத்தின் முன்னோட்டம் அசத்தலாக இருந்தது . எடுத்த உடனேயே சவுண்டில் மிரட்டுகிறார்கள். திரில் , ஹாரர் , செண்டிமெண்ட் , அழகியல் எல்லாம் கலந்து இருந்தது முன்னோட்டத்தில் . மேக்கிங் நன்றாக இருந்தது . அதன் மூலம் ஸ்ரீநாத் ராமலிங்கத்தின் இயக்கத் திறமை தெரிந்தது .
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர்கள் சாம் ஆண்டன் , டீகே இருவரும் அதையே குறிப்பிட்டுப் பேசினார்கள்
வெங்கட் பிரபு பேசும்போது ” மாஸ் படத்தில் பேயாக வரும் சூர்யா இலங்கைத் தமிழில் பேசுவார் இல்லையா ? அந்த பேச்சுத் தொனி, உடல் மொழிகள் எல்லாம் இந்தப் படத்தின் இயக்குனர் ஸ்ரீநாத்
ராமலிங்கத்தினுடையதுதான் . ஒவ்வொரு வசனத்தையும் ஸ்ரீநாத் ராமலிங்கம் பேச, அதை பார்த்து அப்படியே சூர்யா பேசினார் ” என்றார் .
படத்தின் நாயகன் தீபக் பரமேஷ் பேசும்போது
” படத்தில் என் மகளைப் பார்த்து நான் அழ வேண்டிய ஒரு காட்சி . அந்தக் காட்சி பற்றி முன்பே எனக்கு தெரியும் . ஆனால் அழுகை நமக்கு வருமா என்ற பயம் இருந்தது . ஆனால் இடையில் என் அப்பா இறந்து விட்டார் . அந்தக் காட்சி நடிக்கும் நாள் வந்த போது , அப்பாவை நினைத்தேன். என்னை அறியாமலே அழுகை வந்தது ” என்றார் .
படத்தில் இன்னொரு ஹீரோவாக நடிக்கும் குணாளன் மோகன் ” நான் சிவனின் மிகப்பெரிய பக்தன் . அவனின்றி அணுவும் அசையாது ” என்றார் .
கதாநாயகி ஜாக்குலின்
” எங்கள் அனைவரின் தெய்வ நம்பிக்கையும் தன்னம்பிக்கையும்தான் இந்தப் படத்தை உருவாகியது ” என்றார் .
மகேஷ் பேசும்போது ” செப்டம்பர் 18ஆம் தேதிதான் வெள்ளிக்கிழமை. ஆனால் நான் சாய்பாபா பக்தன். எனவே அவருக்கு உகந்த நாளான வியாழக் கிழமை அதாவது ஒரு நாள் முன்னதாகவே படத்தை வெளியிடுகிறேன் ” என்றார் .
இப்படியாக ஒரு பேய்ப் படத்தின் முன்னோட்ட விழா பக்திமயமாகவும் இருந்தது ஆச்சர்யம்தான்.