
ஃபர்ஸ்ட் காப்பி பிக்சர்ஸ் சார்பில் ராம்ஜி நரசிம்மன் தயாரிக்க, கருணாகரன் , நந்திதா, எம் எஸ் பாஸ்கர், சாம்ஸ், நடிப்பில் மகேஷ் முத்து சுவாமியின் ஒளிப்பதிவில் ராதா மோகன் இயக்கி இருக்கும் படம் உப்புக் கருவாடு .
படம் இயக்க விரும்பும் ஓர் இளைஞன், அவனுக்கு கிடைக்கும் தயாரிப்பாளர் , நடிகை , மற்ற டெக்னிசியன்கள் , சினிமா வியாபார ஆட்கள், கடற்கரைப் பகுதியில் நடக்கும் சில நிகழ்வுகள் இவைகளை நகைச்சுவையாக விளக்கும் படமாக இது வந்திருக்கிறது என்பது……
படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்தால் தெரிகிறது . ( இம்சையான நபர்கள் காரணமாகவே சில நல்ல படைப்பாளிகளின் மனசில் ஃபிரெஷ்ஷான மீனாக இருக்கும் கதைகள் படமாவதற்குள் உப்புக் கருவாடாக மாறி விடுகின்றன என்பது உண்மைதானே )
படத்தின் இசையமைப்பாளர் ஸ்டீவ் வாட்ஸ், கவுதம் வாசுதேவ் மேனனால் ராதா மோகனுக்கு சிபாரிசு செய்யப்பட்டவர் .
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய படக் குழுவினர் பலரும் ராதா மோகனின் முந்தைய படங்களின் சிறப்பு அவற்றில் உள்ள காட்சிகள் மற்றும் வசனங்களின் ஆழம் பற்றிப் பேசினார்கள் .
படத்தின் முன்னோட்டத்தில் அழகிய தீயே , மொழி, அபியும் நானும் , பயணம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனரின் படைப்பு என்று குறிப்பிடப்பட்டு இருப்பது போல, ராதா மோகனின் அடுத்த பட முன்னோட்டத்தில் உப்புக் கருவாடு படத்தை இயக்கிய இயக்குனரின் படைப்பு என்று குறிப்பிடும் அளவுக்கு…..
இந்தப் படம் சிறந்து விளங்கும் என்று குறிப்பிட்டார்கள் .ராதா மோகனின் படப்பிடிப்பு போல ஜாலியான படப்பிடிப்பு எங்கும் அமையாது என்றார்கள் .
உதாரணமாக ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி பேசும்போது ” பொதுவாக ஒளிப்பதிவாளர்களுக்கு, தினசரி ஷூட்டிங் முடிந்த உடன் எப்போது கிளம்புவோம் என்றுதான் இருக்கும் . ஆனால் இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்த ஒவ்வொரு நாளும் இன்னும் கொஞ்ச நேரம் ஷூட்டிங் போனால் நன்றாக இருக்குமே என்று எனக்கு தோன்றியது” என்றார்
“இதுவரை நான் நடித்த கேரக்டர்களிலேயே மிக வித்தியாசமான கேரக்டர் இது. என் கேரியரில் முக்கிய படம் இது ” என்றார் நந்திதா .
படத்தை உலகம் எங்கும் வெளியிடும் அவுரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ் பேசும்போது ” படத்தை நான் பார்க்க வரும்போது என் தந்தையும் வந்திருந்தார் . படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை சிரித்துக் கொண்டே இருந்தார் . அப்படி ரசித்தார் . பார்க்கவே எனக்கு சந்தோஷமாக இருந்தது.
வெளியே வந்த போது தட்டிக் கொடுத்துப் பாராட்டினார் . அப்படி ஒரு நல்ல நகைச்சுவைப் படம் இது. தமிழகத்தில் 180 தியேட்டர்களில் படத்தை வரும் 27 ஆம் தேதி வெளியிடுகிறோம். உலகம் முழுக்க இன்னும் பல தியேட்டர்கள் ஒப்பந்தமாகிக் கொண்டு இருக்கின்றன ” என்றார் .
தயாரிப்பாளர் ராம்ஜி நரசிம்மன் தனது பேச்சில் ” படம் ஆரம்பம் முதல் இறுதி வரை கண்ணியமான நகைச்சுவைப் படமாக வந்திருக்கிறது . எல்லோரையும் சந்தோஷப் படுத்தும் படம் இது . ராதா மோகன் மிகச் சிறந்த இயக்குனராக மட்டுமின்றி மனிதராகவும் இருப்பவர்.
இந்தப் படத்தை வேண்டாம் என்று சொல்லும் தியேட்டர்காரர்களும் கூட , படம் வந்த பிறகு இந்தப் படம் வேண்டும் என்று கேட்டு வாங்கிப் போடுவார்கள் . ராதா மோகனோடு இன்னொரு படத்தில் இணையும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வேன் ” என்றார் .
ராதா மோகன் பேசும்போது ” கருணாகரன் , எம் எஸ் பாஸ்கர், சாம்ஸ், நந்திதா எல்லோரும் மிக சிறப்பாக நடித்துள்ளார்கள். நந்திதாவுக்கு வித்தியாசமான முக்கியமான கதாபாத்திரம். சில கதா பாத்திரங்களை வடிவமைக்கும்போதே அதற்கு பொருத்தமான முகங்கள் ஞாபகம் வரும்.
எனக்கு இந்த கதாபாத்திரத்தை எழுதும்போதே நந்திதா முகம்தான் ஞாபகத்துக்கு வந்தது. எனக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்த அனைவருக்கும் நன்றி ” என்றார் .