சாவனிர் புரடக்ஷன்ஸ் மற்றும் பின்ரோம் பிக்சர்ஸ் சார்பில் விஜயகுமார் , இயக்குனர் நலன் குமாரசாமி, சமீர் பரத்ராம், சதீஷ் சுவாமிநாதன் ஆகியோர் தயாரிக்க ,
தயாரிப்பாளர் விஜயகுமார் , மைம் கோபி, சிட்டிசன் சிவகுமார், சந்துரு , ஜெயகாந்த், சிவபெருமாள் , ஹென்னா பெல்லா ஆகியோர் நடிக்க ,
தயாரித்து நடித்து இருக்கும் விஜயகுமாரே எழுதி இயக்கி இருக்கும் படம், விடியும் வரை விண்மீன்களாவோம் என்கிற உறியடி.
அடி எப்படி ?பார்ப்போம் .
1999 ஆம் ஆண்டில் நிகழும் கதை .
திருச்சி நகரை ஒட்டிய பகுதி! இரண்டு சாதிக்காரர்களின் ஆதிக்கம்! இறந்து போன சாதிப் பிரமுகர்களுக்குச் சிலைகள்! .
ஒரு சாதியின் முக்கியப் பெரிய மனிதர் இறந்து போயிருக்க , அவருக்கு சிலை வைக்க முடிவு செய்கின்றனர் அந்த சாதியினர் .
அதன் பின்னால் ஏற்பட வாய்ப்புள்ள சாதி மோதல்களைத் தவிர்ப்பதற்காக ,அந்தச் சிலை திறப்பை தடுக்கிறார் மாவட்ட ஆட்சித் தலைவர்
தங்கள் சாதிக்கு ஒரு கட்சி இருந்தால் இது போன்ற தடைகள் வராது என்று கூறும் அந்த சாதியின் இளம் தலைவர் ஒருவர் (மைம் கோபி ),கட்சி ஆரம்பிக்க தனது சாதி மக்களைச் சம்மதிக்க வைக்கிறார் .
இவர்களுக்கு இணையாக உள்ள இன்னொரு சாதியினருக்கு இதனால் மனசுக்குள் புகைச்சல் . இப்படி புகையும் சாதியைச் சேர்ந்த இறந்த போன பிரமுகருக்கு முன்பே சிலை இருக்கிறது
கட்சி ஆரம்பிக்க முயலும் சாதித் தலைவருக்கு போலி சாராயம் தயாரிப்பு உள்ளிட்ட பல சட்டவிரோதத் தொழில்கள் .
அந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள உள்ள ஒரு பொறியியல் கல்லூரி . அங்கே ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவர்களில்,
ஒரே அறையில் தங்கி இருக்கும் நான்கு நண்பர்கள் (விஜயகுமார், சிவகுமார், சந்துரு, ஜெயகாந்த். பேர்லாம் கரெக்டா பாஸ்? )
கல்லூரியில் ஜாலியாகப் பொழுதை ஓட்டுவது , சைட்டடிக்க கிளாஸ் போவது, ஹாஸ்டலில் சிகரெட் புகை நடுவில் வாழ்வது ,
இரவானால் நெடுஞ்சாலை தாபாவில் தண்ணி அடிப்பது என்று போகிறது இவர்கள் வாழ்க்கை .
அந்த நால்வரில் ஒருவனுக்கும் (விஜயகுமார் ) சக மாணவிக்கும் (ஹென்னா பெல்லா ) காதல்
நான்கு மாணவர்களில் இருவர் , கட்சி ஆரம்பிக்க நினைக்கும் சாதியைச் சேர்ந்தவர்கள் .
அந்த இளம் ஜாதித் தலைவரின் போலி சாராய தொழிலில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு நபரின் மகனும் அந்தக் கல்லூரியில் படிக்கிறான் .
கஞ்சா அடிப்பது பெண்களிடம் தவறாக நடப்பது என்று எல்லை மீறும் அந்த மெல்லிய சைக்கோ மாணவனுக்கும், நண்பர்கள் நால்வருக்கும் ஏற்படும் சண்டை பகையாகிறது . பகை போர்க்களம் ஆகிறது .
இதில் ஜாதிப் பகையும் , ஜாதித் தலைவர்களின் சிலை அவமதிப்புகளும், கட்சி ஆசை ஜாதித் தலைவனின் வஞ்சகமும் கலக்கும்போது என்ன ரணகளம் நடக்கிறது என்பதே இந்த உறியடி.
வாஜ்பாய் கட் அவுட், மாணவர் அறைகளில் சிம்ரன் , கஜோல் , மாதுரி தீட்சித் ஆகியோரின் கவர்சிப் படங்கள், , பொதிகைத் தொலைக்காட்சி என்று…..
1999 ஆம் ஆண்டு காலக்கட்டத்தை ஆர்ப்பாட்டம் இல்லாமல் மிக எளிமையாக இயல்பாக படத்தில் கொண்டு வருகிறார்கள் . சபாஷ்
அந்தக்கால சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளின் தனிமை சூழலை , மாணவர்களின் வாழ்க்கை முறையை, பரபரப்போ பதட்டமோ இல்லாமல் ஜஸ்ட் லைக் தட் சொல்கிறார்கள் .
ஒரு பகுதியில் பெரும்பான்மையாக இல்லாத ஜாதியினரும் பிரிவினரும கூட கட்சி ஆரம்பிக்க ஆசைப்படுவதற்கு பினனால் இருக்கிற , ஒட்டு அரசியல் ரகசியத்தை சொல்லும் அந்த வசனம் சிறப்பு .
கல்லூரி ஆய்வகத்தில் காதலை உணரும் காட்சியில், பிங்க் நிறம் வரும் அந்த , டைட்ரேஷன் பரிசோதனைக் காட்சி , அட்டகாசமான டைரக்டோரியல் டச் !
பயங்கரமான ஆயுதங்கள் உருவப்பட, அவற்றை யார் எடுத்துள்ளார்கள் என்பதை சொல்லும் இந்த இன்டர்வல் டுவிஸ்ட், அபாரம் ! .
இடைவேளைக்குப் பிறகு சில வசனங்களில் காமடி கலகலக்க வைக்கிறது .
கேரளாவின் புகழ்பெற்ற மசாலா காபி இசைக் குழுவின் இசையில் வரும் பாரதியார் பாடல் சிறப்பு
விஜயகுமாரே அமைத்து இருக்கும் பின்னணி இசையில் அமைதியின் அருமையை சரியாகப் பயன்படுத்தி இருப்பது ரசிக்க வைக்கிறது .
மாணவர்களின் பிராக்டிக்கல் வகுப்பில் வரும் பெருநெருப்புக் கலனை கிளைமாக்சில் பயன்படுத்துய விதம் பாராட்ட வைக்கிறது .
படமாக்கி இருக்கும் விதத்தில் ஒரு கேண்டிட் கேமரா எஃபெக்ட் இருப்பதுவும் அபாரம்
அதே நேரம் முதல் பாதியில் மிக சாவகாசமாக நகரும் காட்சிகள் அதனால் நின்ற இடத்திலேயே அசையும் திரைக்கதை, இவை எல்லாம் குறைகள் .
கதை எதை நோக்கி நகர்கிறது என்பது சாதாரண ரசிகனுக்கும் புரியும் நிலையில் ..வெகுஜன ரசிகனை ஈர்க்கும் பரபரப்பு, சுறுசுறுப்பு , உத்வேகம் எல்லாம் படத்தில் மிஸ்ஸிங் .
தவிர அதிரடியாக உரத்துச் சொல்ல வேண்டிய ஒரு கதையை,– சண்டைக் காட்சிகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் கிளைமாக்ஸ் ஏரியா வரும் வரை,— ரொம்ப சல்லிசாக சொல்லி இருக்கிறார்கள் .
ஒரு புதிரை பூடகத்தோடு விளக்கும் பாணியில் இருக்கும் கிளைமாக்ஸ் ஏரியாவும் வெகுஜன ரசிகனை குழப்பும் வகையில்தான் இருக்கிறது .
மொத்தத்தில் உறியடி… அடி விழுந்தது ! ஆனா உறி உடையல !