உத்தம வில்லன் @ விமர்சனம்

uththama 9999

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் , திருப்பதி பிரதர்ஸ், ஈராஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கமல்ஹாசன் மற்றும்  லிங்குசாமி இணைந்து வழங்க , கமல்ஹாசனின் கதை திரைக்கதை வசனத்தில் கமல்ஹாசன் ,  கே.பாலச்சந்தர், நாசர், கே.விஸ்வநாத், ஜெயராம் , ஆன்டிரியா , ஊர்வசி, பூஜா குமார் ஆகியோர் நடிக்க,  ரமேஷ் அரவிந்த் இயக்கி இருக்கும் படம் உத்தம வில்லன் .

ரசிகர்களின் ரசனைக்கு இவன் உத்தமனா? மத்திமனா? அதமனா ? பார்க்கலாம் .

மார்க்கதரிசி என்ற இயக்குனரால் (கே.பாலச்சந்தர்) திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டு,  ஆரம்பத்தில் அவர் இயக்கிய பல தரமான படங்களில் நடித்து உயர்ந்து……. பின்னர் பூர்ண சந்திர ராவ் என்ற தெலுங்கு புரடியூசரின் (இயக்குனர் கே.விஸ்வநாத் ) படங்களில் நடிக்க ஆரம்பித்து,  அதன் மூலம்  பி அண்ட் சி ஏரியாவிலும் கமர்ஷியல் ஹீரோவாக உயர்ந்த  மாபெரும் ஸ்டார் நடிகர்,   தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மனோரஞ்சன் (கமல்ஹாசன்).
uththama 4

யாமினி என்ற கேரளப் பெண்ணோடு காதலும் காமமுமாக வாழ்ந்து, அவளை திருமணம் செய்து கொள்ள மனோரஞ்சன் திட்டமிடும்போது,  பூர்ண சந்திரராவின் மகள் வரலக்ஷ்மி (ஊர்வசி ) மனோரஞ்சன் மீது இனக் கவர்ச்சி கொண்டு, அவரை  திருமணம் செய்து கொள்ள விரும்பி பிடிவாதம் பிடிக்க….

மகளின் ஆசைக்காக பூர்ண சந்திரராவ் களம் இறங்கி  யாமினிக்கும் மனோ ரஞ்சனுக்குமான உறவை அடித்து நொறுக்கி , யாமினியை மிரட்டி , யாமினி – மனோரஞ்சன இருவரும் சந்திக்க முடியாமல் செய்து பிரித்து விடுகிறார் .மகளுக்கு கணவனாக  மனோரஞ்சனை மாற்றுகிறார். மனோரஞ்சனுக்கு விசுவாசமாக இருந்தாலும் அவரது உதவியாளரான சொக்கலிங்கம் செட்டியாரும் (எம் எஸ் பாஸ்கர் ) இந்த விசயத்தில் பூர்ண சந்திர ராவுடன் சேர்ந்து மனோரஞ்சனுக்கு துரோகம் செய்து விடுகிறார்.

மனோ ரஞ்சனால் கர்ப்பம் ஆன யாமினி,  ஒரு பெண் பிள்ளையைப் பெற்று எடுத்து , அதன் பின்னர் சக்காரியா என்ற மலையாளியை (ஜெயராம்) மணக்கிறார் . அந்த பிள்ளைக்கு மனோன்மணி என்று மனோரஞ்சனின் பெயரையே வைக்கிறார் . மனோன்மணி இளம் பெண்ணாக (பூ பார்வதி )வளர்கிறார் .  மனோரஞ்சன் வரலக்ஷ்மி தம்பதிக்கும் மனோகர் என்ற ஒரு டீன் ஏஜ் மகன் இருக்கிறான்.

uththama 2

யாமினி இறந்து விட்ட நிலையில் மனோன்மணிக்கு அவளது நிஜமான தந்தை யார் என்பதை சொல்லும் சக்காரியா, மனோன்மணியையும் மனோரஞ்சனையும் யாமினியின் மரணப் படுக்கை விருப்பப்படி  சந்திக்க வைக்கிறார் . ஆனால் அம்மாவை ஏமாற்றிய அயோக்கியனாக மனோரஞ்சனை தவறான புரிதலுடன் பார்க்கும் மனோன்மணி,  அவரை அவமானப் படுத்துகிறாள் .

இது தவிர மனோரஞ்சனுக்கும் அவரது குடும்ப டாக்டருமான அர்ப்பணாவுக்கும்  (ஆண்டிரியா) காதலும் காமமுமான உறவு இருக்கிறது . அது அபர்ணாவின் கணவனுக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இந்த நிலையில் மனோரஞ்சனுக்கு மூளையில் கட்டி ஏற்படுகிறது . தான் இனி ரொம்ப நாள் வாழ முடியாது என்று உணரும் மனோரஞ்சன் தனது குருநாதரான மார்க்கதரிசியின் இயக்கத்தில் கலை நயமும் நகைச்சுவைத் தன்மையும் நிறைந்த ஒரு அற்புதமான படத்தை கடைசி படமாகக் கொடுத்து விட்டுப் ‘போக’ முடிவு செய்கிறார் . அதே நேரம் தனது உடல் நலக் குறைபாடு டாக்டர் அர்ப்பணா, மார்க்கதரிசி தவிர மனைவி மாமனார் உட்பட யாருக்கும் தெரியக் கூடாது என்று முடிவு செய்கிறார்.

uththama 5

மார்க்க தரிசிக்கும் பூர்ண சந்திர ராவுக்கும் முன்னரே பிடிக்காமல் போய்,  இருவருக்கும் இடையில் கோர்ட் வழக்கு கூட இருக்கும் நிலையில் மார்க்கதரிசி இயக்கத்தில் மனோ ரஞ்சன் நடிப்பதை,  தங்களுக்கு செய்யும் அவமானமாக நினைக்கும்  மாமனார் பூர்ண சந்திர ராவும் மனைவி வரலக்ஷ்மியும்  மனோரஞ்சனை பிரிகிறார்கள் . மகன் மனோகரும் அம்மா கூடவே போய் விடுகிறான் .

மனோரஞ்சன் நடிக்க மார்க்கதரிசி இயக்கும் படம்?

மரணத்தில் இருந்து பலமுறை தப்பும் உத்தமன் என்ற மனிதனை (கமல்ஹாசன்)  , மரணமே இல்லா வரம் பெற்றவனான மிருத்யுன்ஜயன் என்ற புராணக் கதாபாத்திரம் என்று எண்ணி முத்தரசன் என்ற  ஒரு அரசனும் (நாசர்)   மற்றும் பலரும் செய்யும் கூத்துக்களை ,  தேயக் கூத்துக் கலையின் பின்னணியில் உத்தம வில்லன் என்ற பெயரில் புராண – வரலாற்றுப் படமாக இருவரும் எடுக்கிறார்கள் . அதில் அரசி கற்பகவல்லி (பூஜா குமார்) , அமைச்சர்கள் காக புஜண்டர் (முனைவர் கு. ஞானசம்மந்தன், ) சுடலைமுத்து (சண்முகராஜன்) என்று இரண்டு அமைச்சர் கதாபாத்திரங்கள் .

 உத்தம வில்லன்  வளர வளர மனோரஞ்சனின் உடல் நிலை மோசமாகிக் கொண்டே போகிறது. .

மனோரஞ்சனின் உடல்நிலை பற்றி  தெரியவருபோது  அவர் மீது காதல் , கோபம் , மரியாதை , பாசம் என்று தலைக்கொரு  உணர்வைக் கொண்டிருக்கும் கதாபாத்திரங்கள் என்ன செய்தன . அவர் நடிக்கும் படம் முடிந்ததா என்பதே ….

இந்த உத்தம வில்லன் படம் .

uththama 7

படம் பார்த்தவர்கள் மட்டுமல்ல , இன்னும் பார்க்காமல் இப்போது இந்த விமர்சனத்தை படித்துக் கொண்டு இருப்பவர்களும் கூட , இப்போதே ஒரு முறை நம்பிக்கையோடு எழுந்து கமல்ஹாசனுக்கு மனப்பூர்வமாக ஒரு முறை கைதட்டி விடலாம். தப்பே இல்லை . அது ரசனைக்கு கவுரவம்.

நடிப்பில் இதுவரை பல்வேறு அவதாரங்களை எடுத்து இருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் இந்தப் படத்தில் இன்னும் பல வியப்பூட்டும் விஸ்வரூப அவதாரங்களை எடுத்து இருக்கிறார்.

நடிப்பில் நான்காவது பரிமாணத்தையும் தாண்டி ஐந்தாவது பரிமாணத்தில் அடி எடுத்து வைத்திருக்கிறார் கலைஞானி கமல்ஹாசன் .

சிலிர்க்க வைக்கும், வியக்க வைக்கும் , மலைக்க வைக்கும் , பிரமிப்பூட்டும் நடிப்பு !

uththama 6

யாமினி இறந்து போனதை அறிவது, யாமினி வயிற்றில் மலர்ந்த தன் கரு குழந்தையாக பிறந்து இருப்பதை  அறிவது  … அந்தப் பிள்ளையின் ஐந்து வயது , பத்து வயது , கல்லூரிக் காலப் புகைப்படங்களை பார்ப்பது என்று இவை யாவும் ஒரே காட்சியில் நிகழ,  அந்தக் காட்சியில் ஆயிரமாயிரம் முகபாவனைகளை கொட்டி நடித்து இருக்கிறான் பாருங்கள் அந்த நடிப்பு ராட்சஷன் …..

அதே போல , தனது உடல்நிலை நிலை அறிந்து மகன் நொறுங்கும் காட்சியில்  பிள்ளையை சமாதானப்படுத்தும் வகையில்  கமல் நடித்திருக்கும் நடிப்பு …

இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்  எந்தக் கிரகத்தில் யார் நடித்தாலும் அங்கே போய் இந்த இரண்டு காட்சியையும் தூக்கிப் போட்டு பார்க்கச் சொல்லி,  காலரைத்  தூக்கி விட்டுக் கொள்ளலாம் நாம்.

uththama 1இன்னொரு பக்கம் நடனத்தில் கலக்குகிறார் . பைக்கில் இன்னும்  சின்னப் பையனைப் போல வீலிங் (WHEELING) செய்கிறார். முகத்தில் பக்குவம் தெரிந்தாலும் உடம்பில் இன்னும் இளமை திமிறுகிறது . 

மனோரஞ்சன் கதையின் காட்சி அமைப்பில் சிகரம் தொட்டு உத்தமன் கதையின் காட்சிகளில் ஆழம் காண்கிறார்  திரைக்கதை ஆசிரியர் கமல்ஹாசன்

கம்பை எடுத்து அடிக்க வரும் ஒரு பாட்டியை “அடி கம்பன் மகளே!” என்று அழைப்பது…. “வில்லன் என்பது ஆங்கில வார்த்தை மட்டுமல்ல . அது தமிழ் வார்த்தையும் கூட . மல்யுத்தம் செய்பவன் மல்லன் . வில் யுத்தம் செய்பவன் வில்லன் ” என்று விளக்கம் சொல்வது … “எப்போதுமே வலதை விட இடதுதானே சிறப்பானது” என்று கைகளைப் பற்றி பேசும் போதே, சோஷலிச இஞ்செக்ஷன் போடுவது …. இப்படி பல இடங்களில் தகதகவென ஜொலிக்கிறார் வசனகர்த்தா கமல்ஹாசன் .

“நிலைத்து என்றும் வாழும் வாழ்வை அடைந்தவர் யாரோ ? முடிவுறாமல் தொடரும் கதையை ரசிப்பவர் யாரோ ” போன்ற வரிகளில் கம்பீரப் புன்னகை புரிகிறார் பாடலாசிரியர் கமல்ஹாசன் . 

uththama 999

மார்க்கதரிசி கதாபாத்திரத்தில் பாலச்சந்தராகவே வாழ்ந்திருக்கிறார் கே.பாலச்சந்தர் !

மன்னிப்புக் கேட்கும் காட்சியில் நெக்குருக வைக்கிறார் எம் எஸ் பாஸ்கர் .

உற்சாக பூஜா குமார், அப்பாவித்தன ஊர்வசி, சுயமரியாதைக் கவிதை பார்வதி மேனன் , அசட்டு கம்பீர நாசர் , என்று எல்லோரும் அசத்த

இயல்பாக கதைக்குள் நுழைந்து லேசாக கிளுகிளுக்க வைத்து கடைசி யில் கவிதையாக கண்ணீர் பூக்கும் கள்ளக் காதலி பாத்திரத்தின் வலுவால்,  போகிற போக்கில் சிறப்பாக செய்து இந்தப் படத்தின் பெண் கதாபாத்திரங்களில் முதல் இடம் பெறுகிறார்  ஆண்ட்ரியா . 

குறையில்லாமல் இயக்கி இருக்கிறார் ரமேஷ் அரவிந்த்.

ஷம்தத்தின் ஒளிப்பதிவு நிறைவு .

uththama 99

ஜிப்ரானின் இசை நன்று . எனினும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் .

உத்தமன் வரலாற்றுக் கதையில் ரத்தினமாக ஜொலிக்கிறது, லால்குடி இளையராஜாவின் கலை இயக்கம் . 

குணால் ராஜனின் ஒலி வடிவமைப்பு, மதுசூதனின் விஷுவல் எபெக்ட்ஸ், கவுதமி  மற்றும் கவுதம் தடிமல்லா,  செய்திருக்கும் ஆடை வடிவமைப்பு …. மூன்றும் படத்துக்கு மிக பக்க பலமாக இருக்கின்றன .  

ஆனால் எல்லாச் சாலைகளும் ரோம் நகரை நோக்கி என்பது போல , கமல்ஹாசனின் நடிப்பும் அதன் பின் மனோரஞ்சன் வாழ்க்கைக் கதையின் திரைக்கதையும் பிரம்மாண்டமாக ஜெயித்திருக்கும் வேகத்தை ஒப்பிடும்போது  மற்றவை எல்லாம் கொஞ்சம் பின் தங்கியே இருக்கின்றன .

மனோ ரஞ்சனின் கதை இயல்பாக ஆரம்பித்து போகப் போக விஸ்வரூபம் எடுக்கிறது . நேர்மாறாக உத்தமன் கதை ஆரம்பத்தில் மிகவும் எதிர்பார்க்க வைத்து போகப் போக சுரத்துக் குறைகிறது .

தவிர மனோ ரஞ்சன்  ஆசைப்படுவது போல உத்தமன் படம்  ஒன்றும் பெரிய நகைச்சுவைப் படமாக உருவாகவும் இல்லை .

uththama 9அதே நேரம் இரணியன் கதை , அதில் ‘கறுப்புச் சட்டை’  அணிந்த இரணியன் நடனக் குழு என்று தனது வழக்கமான ‘வண்ணம்’ காட்டவும் தவறவில்லை கமல்ஹாசன் . 

உத்தம வில்லன் … உயர்கலை வில்லாளன் !

மகுடம் சூடும் கலைஞர்கள்

————————————————–

கமல்ஹாசன் , கே. பாலச்சந்தர், லால்குடி இளையராஜா, குணால் ராஜன் ,

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →