பொதுவாக ஒரு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு என்றால் அதில் படத்தின் பாடல்கள், முன்னோட்டம், மேக்கிங் , சில சமயம் சில காட்சிகள் இவற்றை போட்டுக் காட்டுவார்கள் . ஆனால் கிளைமாக்சில் ஒரு துணுக்கு போட்டுக்காட்டக் கூட ஒரு ‘தில்’ வேண்டும் .
‘உனக்கென்ன வேணும் சொல்லு’படக் குழுவினரிடம் அந்த தில் இருக்கிறது என்பது , பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர்கள் கிளைமாக்சின் ஒரு பகுதியைப் போட்டுக் காட்டியதில் இருந்தே தெரிந்தது.
அவ்ரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் மற்றும் காவியா வேணுகோபால் வாங்கி வெளியிட …ஜுனா பிக்சர்ஸ் சார்பில் என் சண்முக சுந்தரம் மற்றும் கே முகமது யாசின் தயாரிக்க,
அனு, மைம் கோபி, தீபக் பரமேஷ், ஜாக்குலின் பிரகாஷ், குணாளன் மோகன் , மோர்னா அனிதா ஆகியோர் நடிப்பில்…
எம் ஆர் கே யின் கதைக்கு ஸ்ரீ கிருஷ்ணாவுடன் சேர்ந்து திரைக்கதை வசனம் எழுதி, ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கி இருக்கும் படம் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ .
தமிழ் நாட்டின் திருச்சியில் இருந்து இலங்கைக்கு போன ஒரு குடும்பத்தில் பிறந்து அமெரிக்கா ஃபுளோரிடாவில் டைரக்ஷன் படித்து சிங்கப்பூரில் பணியாற்றி பல குறும்படங்களை இயக்கிய 26 வயது இளைஞர் இந்த ஸ்ரீநாத் ராமலிங்கம்
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’படப் பாடல் வரியைக் கைக்கொண்டு வரும் இந்தப் படத்தின் பெயர், இது ஒரு அட்டகாசமான காதல் கதையோ என்று நினைக்க வைக்கிறது. ஆனால் அதையும் தாண்டிப்போகிறது படம்.
வெளிநாட்டில் இருந்து தன் மகனின் மருத்துவ உதவிக்காக சென்னை வரும் ஒரு குடும்பம்…. திருமணம் செய்து கொள்ளாமலே லிவிங் டுகெதர் ஆக வாழும் ஒரு தம்பதி…… இவர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளுக்குப் பின்னால் ஓர் எட்டு வயது ஆவி இருப்பது தெரிய வருகிறது . அது என்ன? ஏன்? என்பதுதான் இந்தப் படம் .
அதே நேரம் இந்தப் படத்தில் பேய் என்ற பெயரில் வழக்கமான — உங்களை சலிப்பாக்குகிற எந்த விஷயமும் இருக்காது . இது குடும்பத்தோடு -குழந்தைகளோடு உட்கார்ந்து பார்க்க முடிகிற நல்லுணர்வுப் படமாகவே (feel good movie) இருக்கும் ” என்கிறார் இயக்குனர் .
படத்தின் விளம்பரத்தில்…
ஒரு கல்லறையின் மேல் பொறிக்கப்பட்டு இருப்பதாக வரும் , ‘பெயர் டெய்சி பிறப்பு 28.1.2014 இறப்பு 28.1.2014. வயது 8.’ என்ற ஒரு வாசகம கவனம் கவர்ந்தது .
அன்புள்ள சாமிக்கு , நான் எங்க அம்மா அப்பாவை பழி வாங்கணும். நீதான் உதவி செய்யணும்- இப்படிக்கு டெய்சி ” என்ற வாசகமும் பட விளம்பரங்களில் வருகிறது.
படத்தின் முன்னோட்டம் அசத்தலாக இருந்தது . எடுத்த உடனேயே சவுண்டில் மிரட்டுகிறார்கள். திரில் , ஹாரர் , செண்டிமெண்ட் , அழகியல் எல்லாம் கலந்து இருந்தது முன்னோட்டத்தில் . மேக்கிங் நன்றாக இருந்தது . அதன் மூலம் ஸ்ரீநாத் ராமலிங்கத்தின் இயக்கத் திறமை தெரிந்தது.
ஒரு பாடல் காட்சி மென்மையான கவிதையாக இருந்தது .
திரையிடப்பட்ட கிளைமாக்சின் பகுதியில், எட்டு வருடங்ளுக்கு முன்பு பிறந்த உடனே இறந்து போன ஒரு பெண் குழந்தை, எட்டுவயது சிறுமியாக வளர்ந்த ஆவியாக இருக்கும் நிலையில், ஹீலிங் தெரபி மூலம் ஹிப்னாடிச மயக்கத்தில் ஆழ்த்தப்படும் தனது தகப்பனுடன் பேசுவது போன்ற ஒரு காட்சி இடம்பெற்று இருந்தது.
‘நீ என் கூடவே இருந்துடுப்பா. அப்படி இருந்தால் நான் அம்மாவையும் அண்ணனையும் பேயா வந்து கொடுமைப்படுத்த மாட்டேன் ” என்கிறது . அதோடு நிறுத்தி விட்டார்கள் .
ஆவியாக உள்ள மகளுடன் வாழ்வதற்காக நிஜமாகவே அந்தத் தகப்பன் செத்துப் போனானா அல்லது இக வாழ்வில் உள்ள மனைவி மற்றும் குழந்தைக்காக ஆவியாக உள்ள மகளை விட்டு விட்டு வந்தானா என்பதுதான், கிளைமாக்ஸாக வரும் போலிருக்கிறது
“பிறந்த அன்றே இறந்த குழந்தைக்கு எப்படி எட்டு வயது ஆகும் ? எப்படி எட்டு வயது உருவத்தில் வரும் ? பொதுவாக ஆவிகள் எந்த வயசில் இறந்ததோ அந்த வயசிலேயே இருப்பதுதானே வழக்கம் ?” மற்றும் “உயிரோடு உள்ள மனிதன் இறந்து போன பெண்ணின் உலகத்துக்குப் போய் அந்தப் பெண்ணின் ஆவியோடு பேசுவது என்பது — கற்பனை சினிமா என்றாலும்– என்ன விதமான லாஜிக்?” என்றெல்லாம் இயக்குனரிடம் கேட்டால்
“எனக்குத் தெரிந்த ஒரு தம்பதி. திருமணத்துக்குப் பிறகு கர்ப்பம் ஆகி ஆறு மாதத்தில் அந்தக் கருக் கலைந்து போனது. ஆனால் அந்தப் பெண் இயல்பாக இல்லை . நான்கு வருடங்களுக்குப் பிறகு அந்தப் ஹிப்னாடிச மயக்கத்தில் ஆழ்த்தியபோது அவள் ஒரு நாலு வயது மகனுடன் மனதளவில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு சிகிச்சை செய்து குணப்படுத்தினார்கள் .
இறந்து பிறந்த குழந்தையை மனதளைவில் வளர்த்துக் கொண்டிருக்கும் பெண்ணுக்கு ஹிப்னாடிச சிகிச்சை அளித்து அதில் அவளோடு வாழும் இறந்து போன குழந்தையை முறைப்படி பிரிய வைத்து சிகிச்சை அளிப்பது உண்டு .
இது தவிர எனக்கு ஆவிகள் நம்பிக்கை உண்டு . எனக்கே ஆவிகளை சந்தித்த அனுபவம் உண்டு . அப்புறம் கல்யாணம் செய்யாமல் லிவிங் டுகெதர் வாழ்க்கை என்பது சம்மந்தப்பட்ட நபர்களின் பக்குவத்தைப் பொறுத்தே கண்ணியமான விஷயமாகவோ அசிங்கமான விசயமாகவோ மாறுகிறது .
பக்குவமற்ற வயதில் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து பிரிவதால் ஏற்படும் பிரச்னைகள் கொஞ்ச நஞ்சமல்ல . இவற்றின் அடிப்படையில் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன்.
பிறந்த உடனே இறந்துபோன ஒரு குழந்தை , அது புதைக்கப்படாத நிலையில் ஒரு சக்தியாக உருவெடுத்து வளர்ந்து குழந்தமையான கோபத்தில் காட்டும் ஆவேசம், அதனால் அந்தப் பெண்ணின் தகப்பன் , தாய் மற்றும் ஒரு சகோதரனுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்று இந்தப் படத்தின் கதை போகிறது. இதற்கிடையில் அந்த சிறுமியின் ஆவிக்கும் தகப்பனுக்கும் பாசம் மிக்க பழக்கம் ஏற்படுகிறது .
இப்போது குழந்தையின் உடளை எரித்தால் அந்த பாச மகளின் ஆவி நிரந்தரமாக பிரிந்து விடும் . ஆனால் அப்படிப் பிரிந்தால்தான் தாய்க்கும் இன்னொரு மகனுக்கும் நல்லது . அந்த சூழ்நிலையில் அப்பா எடுக்கும் முடிவுதான் இந்தப் படம் . படம் உங்களை நெகிழ வைக்கும் ” என்கிறார் இயக்குனர் .
படத்தை வாங்கி வெளியிடும் அவுரா பிக்சர்ஸ் மகேஷ்
”நாங்கள் த்ரிஷ்யம் இந்திப் படம் உட்பட பல படங்களையும் மிஷன் இம்பாசிபிள் டெர்மினேட்டர் உட்பட பல ஆங்கிலப் படங்களையும் வாங்கி வெளியிட்டு இருக்கிறோம் . தமிழில் எங்களுக்கு இது முதல் படம் . படம் மிக சிறப்பாக இருக்கிறது.
தொடர்ந்து தமிழ்ப்படங்களை வாங்கி வெளியிடுகிறோம் . படங்களும் தயாரிக்க இருக்கிறோம். நான் சாய்பாபா பக்தன். எனவே படத்தை அவருக்குகந்த வியாழக் கிழமை 24ஆம் தேதி வெளியிடுகிறோம் ” என்கிறார் .
வாழ்த்துகள் !