அவ்ரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் வெளியிட, ஜுனா பிக்சர்ஸ் சார்பில் என் சண்முக சுந்தரம் மற்றும் கே முகமது யாசின் தயாரிக்க,
அனு, மைம் கோபி, தீபக் பரமேஷ், ஜாக்குலின் பிரகாஷ், குணாளன் மோகன் , மோர்னா அனிதா ஆகியோர் நடிப்பில்…
எம் ஆர் கே யின் கதைக்கு ஸ்ரீ கிருஷ்ணாவுடன் சேர்ந்து திரைக்கதை வசனம் எழுதி, ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கி இருக்கும் படம் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’.
ரசிகன் கேட்பதைக் கொடுக்குமா இந்தப் படம்? பார்க்கலாம்
சிங்கப்பூரில் வாழும் தமிழ்த் தம்பதி சிவா (குணாளன் மோகன்) — பூஜா (ஜாக்குலின் பிரகாஷ்)வின் மகனான சிறுவன் அபி, அடிக்கடி மூக்கில் ரத்தம் வழியும் ஓர் அரிதான நோயால் பாதிக்கப்படுகிறான். அவனுடைய சிகிசைக்காக சென்னைக்கு வர வேண்டும் என்ற நிலையில், சென்னைக்கு வர மறுக்கும் பூஜா , ‘செலவு அதிகம் என்றாலும் நியூயார்க் போய் சிகிச்சை செய்யலாம்’என்கிறாள்.
ஆனால் பூஜாவின் தோழியான சுவாதியின் தற்கொலை சென்னைக்கே வர வைக்கிறது .
பூஜாவுக்கு சொந்தமான ஒரு பூர்வீக பங்களாவில் மூவரும் தங்குகிறார்கள். அந்த வீட்டில் இருக்கும் ஒரு சிறுமியின் ஆவி பூஜாவையும் அபியையும் மிரட்டுகிறது. இருவரும் மாத்யூ (மைம் கோபி ) என்ற பேயோட்டியை சந்திக்கிறார்கள் . பங்களாவுக்கு மாத்யூவையே ஒரு வழி பண்ணுகிறது சிறுமியின் பேய்.
இந்த நிலையில் மாத்யூவை தனியாக சந்திக்கும் பூஜா தன் வாழ்வின் ரகசிய பக்கம் ஒன்றைத் திறக்கிறாள்.
திருமணத்துக்கு முன்பு பூஜாவுக்கு கார்த்திக் (தீபக் பரமேஷ்) என்பவனுடன் இருந்த காதல், கல்யாணத்துக்கு முன்பே லிவிங் டுகெதர் வாழ்க்கையாக மாறுகிறது . பூஜா கர்ப்பம் ஆகிறாள் . அந்த சமயத்தில் கார்த்திக்குக்கு வேலை போகிறது . தவிர கார்த்திக்குக்கும் பூஜாவுக்கும் ஒத்துப் போகவில்லை. கார்த்திக்குடனான பூஜாவின் வாழ்க்கை சிறப்பாக இருக்காது என்று பூஜாவை சுவாதி எச்சரிக்கிறாள் .
வேலை விசயமாக கார்த்திக் சிங்கப்பூர் போக நேர, பூஜாவுக்கு உதவி செய்வதாக நினைக்கும் தோழி சுவாதி, பூஜாவுக்கு பிறந்த குழந்தையை எடுத்துக் கொண்டு போய் அநாதை இல்லத்தில் போட்டுவிட்டு வந்து, இறந்து விட்டதாக பூஜாவிடம் சொல்லி விடுகிறாள் .
அதன் பிறகு சிவாவை மணந்து அபிக்கு அம்மாவானதை மாத்யூவிடம் சொல்லி முடிக்கிறாள்.
‘அந்த குழந்தை செத்துப் போய்விட்டது.அந்தக் குழந்தைதான் இப்போது எட்டு வயது டெய்சி(அனு) என்ற ஆவியாக வளர்ந்து தன்னை பெற்றுப் போட்டு விட்டு விட்டப் போன பூஜாவை பழிவாங்க முயல்கிறது’ சொல்லும் மாத்யூ “ அதே காரணத்துக்காக கார்த்திகையும் பழிவாங்கும் ” என்கிறார்.
பூஜாவும் சிவாவும் கார்த்திக்கை தேடுகிறார்கள். பேச்சிலராக வாழ்க்கையை ஜாலியாக ஓட்டும் கார்த்திக் , ராங் கால் மூலம் அறிமுகமான ஜூடி (மோர்னா அனிதா) என்ற விவாகரத்துப் பெற்ற பெண்ணுக்கு, ‘நூல்’ விட்டுக் கொண்டு இருக்கிறான் . ஜூடி நார்மல் நபராக இல்லை . அவள் தனக்கு ஒரு குழந்தை இருப்பதாகச் சொல்கிறாள்.
ஆனால் ஒரு நிலையில் அவள் ஒரு வித மன நோய்க்கு ஆளானவள் என்பதும் அவளுக்கு மகள் எல்லாம் இல்லை என்பதும் கார்த்திக்குக்கு தெரிய வருகிறது . ஜூடி வீட்டிலும் டெய்சி ஆவி இருக்கிறது .
பூஜா, சிவா, மேத்யூ மூவரும் கார்த்திக்கை சந்தித்து ஆபத்தை சொல்கிறார்கள். ஜூடிக்கு ஹிப்னோதெரபி மூலம் சிகிச்சை அளிக்கும் மருத்துவரும் இவர்களோடு இணைகிறார் .
டெய்சி ஆவியின் கோபம் அதிகமாகும் நிலையில் பூஜா, அபி, கார்த்திக் இவர்கலின் உயிரைக் காக்க தீவிரமாக களம் இறங்குகிறார்கள் அனைவரும் .
பூஜாவின் பங்களாவில் மந்திரம் போட்டு போட்டு பேயைக் கட்டுப்படுத்த முயல்கிறார் மாத்யூ . மருத்துவமனையில் உள்ள அபிக்கு ஒன்றும் ஆகாமல் கவனிக்கும் வேலை சிவாவுக்கு . டெய்சி ஆவேசமாக நடமாடும், ஜூடியின் வீட்டுக்குள் இருக்க வேண்டிய ஆபத்தான வேலை பூஜாவுக்கு . மூன்று இடத்திலும் மூவரையும் டெய்சியின் ஆவி என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற திகில் .
அதேநேரம் ஹிப்னோ தெரபியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு ஆழ் மன வெளியில் இறங்கி , அங்கு டெய்சியை சந்தித்து அவளை சமாதானப்படுத்த வேண்டிய வேலை கார்த்திக்குக்கு . அங்கே தன் மகள் டெய்சி காட்டும் பாசத்தில் கொஞ்சம் எமோஷனலாக முடிவுஎடுத்தாலும் கார்த்திக்கின் உயிரே போய்விடும் என்ற நிலை.
— என்ன நடந்தது என்பதே, உனக்கென்ன வேணும் சொல்லு படம்
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’படப் பாடல் வரியைக் கைக்கொண்டு வரும் இந்தப் படத்தின் பெயர், அட்டகாசமான ஒரு காதல் கதைக்குப் பொருத்தமான பெயர் என்றாலும், அதையும் தாண்டிப் பயணித்து இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம். பேய்ப் பயணம் !
படத்தின் துவக்கத்தில் நடப்பது என்ன என்பதே மர்மமாக இருக்க , சுவாதி தற்கொலை செய்து கொள்ளும் முதல் காட்சியிலேயே மிரட்டல் ஆரம்பிக்கிறது.
படத்தின் மேக்கிங் பிரம்மாதம். இருள், ஒளி, இருட்டின் ஆதிக்கம் , ஒளியின் வீச்சு … இவை அனைத்தையும் மிக சரியான முறையில் பயன்படுத்தி இருக்கும் மனீஷ் மூர்த்தியின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது . சிவ சரவணனின் பின்னணி இசை வித்தியாசமாக இருக்கிறது . திகிலூட்டவும் செய்கிறது .
தவிர படத்தின் ஆடியோ கிராபி , எடிட்டர் ஹரிஹரனின் ஒலிப்படத் தொகுப்பு இரண்டும் சேர்ந்து பல இடங்களில் கிடுகிடுக்க வைக்கிறது .
டெய்சி இருக்கும் பங்களாவில் அசையாப் பொருட்களை சிதற வைத்து டெய்சியின் இருப்பை விளக்கும் காட்சிகளில் படமாக்கலில் மிரட்டுகிறார் இயக்குனர்.
அதுமட்டுமல்ல …
கல்யாணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகெதர் அல்லது கோயிங் ஸ்டெடி டைப்பில் வாழ்ந்து ஒரு குழந்தையும் பெற்றுப் போட்டு விட்டு பிரியும் தம்பதிகளுக்கு, செத்துப் போன அந்தக் குழந்தையின் ஆவியால் ஆபத்து வரலாம் என்று கதை சொல்லி இருப்பதன் மூலம்…
அமெரிக்கா ஃபுளோரிடாவில் டைரக்ஷன் படித்து பல குறும்படங்களை இயக்கிய 26 வயது இளைஞரே என்றாலும்
கலாச்சார சீர்கேட்டுக்கு எதிராகத் தனது படைப்புக் கொடியைப் பிடிக்கிறார் இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம். சபாஷ் தம்பி !
(பின்னே ! பெத்துப் ‘போட’ப்பட்டு அனாதையாக இறக்கும் குழந்தைகள் எல்லாம், இனிமேல் பேயாக வந்து மிரட்டும் என்றால் , யாராவது திருட்டுத்தனமாக குழந்தை பெற்றுத் தெருவில் எறிந்து விட்டுப் போவார்களா ?)
டெய்சி ஆவிக்கு பின்னணிக் குரல் கொடுத்தது யார் ? அந்தக் குரலும் அது பதிவு செய்யப்பட்ட விதமும் நைட்டு தூங்கும் போதும் காதுலையே கேட்குது கண்ணுகளா!
நடிப்பில் ஜாக்குலினும் குணாளனும் சிறப்பாக நடித்துள்ளார்கள். மைம் கோபியின் அந்த, பேயோட்டும் வெஸ்டர்ன் பாணி எக்ஸ்பிரஷன்கள் கவனிக்க வைக்கின்றன .
கிளைமாக்சுக்கு பொருத்தமாக கார்த்திக்கின் கேரக்டரும் சம்பவங்களும் இல்லாமல் இருப்பது குறையே . மாத்யூவின் முடிவு அபத்தம். அபியை டெய்சி கொடுமை செய்வது எல்லாம் ஓவர் .
ஆனாலும் அந்த கிளைமாக்ஸ் ஏரியா அதகள ரணகள லக லக!
ஒரு பக்கம் மாத்யூ , இன்னொரு பக்கம் மருத்துவ மனையில் சிறுவன் அபி, டெய்சி ஆவேசமாக இருக்கும் ஜூடியின் வீட்டுக்குள் படு ஆபத்தில் பூஜா , ஹிப்னோதெரபி ஆழ்மன சிகிச்சைக்குள் கார்த்திக் …
நான்கையும் மாறி மாறிக் காட்டி இதயத் துடிப்பில் உடுக்கை அடிக்கிறது ஸ்ரீநாத் ராமலிங்கத்தின் இயக்கம் . அந்த கடைசி நிமிடங்களில் நாம் இருக்கையை விடு எழுந்து திரைக்குள்ளேயே போய்விடுகிற அனுபவத்துக்கு ஆளாகிறோம் என்பது படத்தின் பெரும் சிறப்பு .
உனக்கென்ன வேணும் சொல்லு … கேட்டால் கிடைக்கும் .