மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்க, அமீர், சாந்தினி ஸ்ரீதரன், ஆனந்தராஜ், கஞ்சா கருப்பு நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்.
எம் ஜி ஆர் ரசிகரும் எம்ஜியார் கேபிள் நிறுவனம் நடத்துபவருமான எம் ஜி ஆர் பாண்டி ( அமீர்), ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளர் பழக்கடை ராமச்சந்திரனின் ( ஆனந்தராஜ்) மகளான தமிழ்ச் செல்வியைக் கண்டதும் காதலாகிறார் .
பழக்கடை ராமச்சந்திரன் ஒரு கவுன்சிலர் தேர்தலில் தன் மகளை நிறுத்தும்போது அங்கே பார்த்துக் காதல் கொண்ட பாண்டி , தானும் திடீர் அரசியல்வாதியாகிறார் .
தேர்தல் பிரச்சாரத்தோடு காதலும் வளர்கிறது .
ஒரு நிலையில் ராமச்சந்திரன் கொல்லப்பட , அரசியலில் வளர்ந்து வரும் பாண்டி மீது அந்தப் பழி விழுகிறது .
தமிழ்ச் செல்வி அதை நம்புவதற்கான காரண காரியங்களும் இருக்கின்றன . எனவே காதல் முறிந்து பகை வளர்கிறது.
ராமச்சந்திரன் செத்துப் போனதால் அவர் வென்ற சைதாப்பேட்டை தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிறது.
ஆளுங்கட்சி சார்பில் ராமச்சந்திரனின் மகளான தமிழே நிற்க , எதிர்க்கட்சி சார்பாக பாண்டி நிற்கிறான்.
“நான் ஜெயித்ததால் என்னைக் கல்யாணம் பண்ணிக்கணும் “என்று பாண்டி சொல்ல , சம்மதிக்கும் தமிழ், “சைதாப்பேட்டை எங்க கோட்டைடா… நான் ஜெயித்தால் நீ செத்துப் போக வேண்டும் “என்கிறாள் .
தேர்தல் நெருங்குகிறது .
ஒவ்வொரு ஓட்டுக்கும் தமிழ்ச் செல்வி பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் தர , எல்லோரும் அவளுக்கே ஓட்டுப் போட முடிவு செய்ய, நடந்தது என்ன என்பதே படம் .
நிஜத்தில் நடக்கும் அரசியல் கூத்துகளை படத்தில் ஆங்காங்கே நையாண்டியாக சொல்கிறார்கள். அதில் சுவாரஸ்யம் இருக்கிறது.
தாடி இல்லாத அமீர் ஒரு நகைச்சுவை சீரியஸ் ஹீரோவுக்கான சகல லட்சணங்களுடன் ஜொலிக்கிறார் . வாழ்த்துகள்.
சேலை கட்டிய ஜெர்சி பசு மாதிரி இருக்கிறார் நாயகி சாந்தினி .
கவர்சிக்கு ஒகே . ஆனால் இந்தக் கதாபாத்திரத்துக்கு? உற்சாகமாக நடித்து இருந்தாலும் ஒவ்வொரு காட்சியிலும் சந்தைக்குப் போகும் ஜலஜா போலவே இருக்கிறார். ஒரு பெண் அரசியல்வாதிக்கான பர்சனாலிட்டி உடல் மொழிகள் அவரிடம் வெளிப்படவில்லை. அதைப் பற்றி இயக்குனர், நடிகை உட்பட 26 துறைகளிலும் யாருமே கவலைப்படவில்லை.
வித்யாசாகர் இசையில் அமரர் எம்ஜியாரை புகழ்ந்து பாண்டி பாடுவது போல வரும் ”நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு சொன்னதாரு” பாடல் அருமை. படத்தின் எனர்ஜி பேட்டரி அந்தப் பாடல்தான் . ஆனால் அதில் மேடைகளில் எம் ஜி அர் கெட்டப்களில் விதம் விதமாக ஆடும் கலைஞர்களைக் காட்டி , பாடலின் உயரத்தைக் கீழே இறக்கி விட்டார்கள். மாறாக அந்த இடங்களில் எல்லாம் எம் ஜி ஆரின் சினிமா மற்றும் அரசியல் காட்சிகளைப் போட்டு இருந்தால் அந்தப் பாட்டு வைத்ததன் முழுப் பலனும் கிடைத்து இருக்கும். அதே நேரம் நிழல் புரட்சித் தலைவரைப் பற்றிய அந்தப் பாட்டில் நிஜமான ஒப்புயர்வற்ற புரட்சித் தலைவனையும் காட்டியதற்கு நன்றிகள்
கிண்டல் கேலி வசனங்கள் வரும்போது அதை மக்கள் ரசிக்க ஏதுவாக ஆங்காங்கே இடைவெளி வேண்டும். அரசியல் பட மேக்கிங்கில் அது ஒரு உத்தி . ஆனால் அது இல்லாமல் அடுத்து அடுத்து என்று பேசிக் கொண்டே போகிறார்கள். இயக்க நேர்த்திக் குறைவின் வெளிப்பாடு இது..
கிளைமாக்ஸ் டுவிஸ்ட்டில் புத்திசாலித்தனம் இருந்தாலும் யதார்த்தம் டோட்டல் டேமேஜ் .
ஓர் அரசியல் படத்தில் வரும் வித்தியாசமான காட்சிகள் திருப்பங்கள் அதுவும் கிளைமாக்ஸ் சமயத்தில் என்றால் வித்தியாசமாக இருக்கும் அதே சமயம் லாஜிக்காக ஏற்றுக் கொள்ளும்படியும் இருக்க வேண்டும் . இங்கே ஏற்றுக் கொள்ளும்படி இல்லை.
மிக முக்கியமாக உயிர் தமிழுக்கு என்பது சரித்திரம் படைத்த ஒரு முழக்கம் .
தமிழ்ச் செல்வி என்ற பெண்ணை டாவடிக்க அதைப் பயன்படுத்துவதும் , அவள் மேல் உள்ள காதலை ஆசையைச் சொல்ல தமிழ் தமிழ் என்று நீட்டி முழக்குவதும் இப்படிப் பயன்படுத்துவதும் கதாநாயகி என்பதால் ஓரிரு காட்சிகளக்கு ஒகே . ஆனால் படம் முழுக்க வரும்போது அது தமிழைக் கொண்டாடுகிறார்களா இல்லை கேவலப்படுத்துகிறார்களா என்ற கோபமே உண்மையான தமிழ் உணர்வாளனுக்கு வரும் .
அற்புதமான இந்த டைட்டிலுக்கு உருப்படியாக ஒரு கதை பண்ணி இருக்கலாம்
இவற்றை எல்லாம் மீறி அரசியல்வாதிகளை அவர்களின் முந்தைய , நிகழ்கால செயல்பாடுகளை கிண்டல் செய்வதால்…….. உயிர் மிஞ்சுகிறது இந்தப் படத்துக்கு