‘நினைத்தாலே இனிக்கும் புகழ்’ நடிகை ஜெயப்பிரதா தயாரிக்க , அவரது மகன் சித்தார்த் கதாநாயகனாகவும் ஹன்சிகா மோத்வானி கதாநாயகியாகவும் நடிக்க, விஷால் – நயன்தாரா நடித்த சத்யம் படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கி இருக்கும் படம் உயிரே உயிரே .
தெலுங்கில் மெகா ஹிட் அடித்த ஒரு படத்தின் தமிழ் உருவாக்கம் இது.
இயக்குனர் ராஜசேகர், ஒளிப்பதிவு ஆர்.டி.ராஜசேகர், சண்டை பயிற்சி ராஜசேகர் .. இப்படி மூன்று ராஜ சேகர்கள் பணிபுரியும் படம்.
நீண்ட நெடிய திரை உலக அனுபவத்துக்கு ஜெயப்பிரதா சொந்தக்காரர் என்பதால் , படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்ட விழாவுக்கு, அவர் சார்ந்திருக்கும் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அமர்சிங்(இருவருமே இப்போது அஜித் சிங்கின் ராஷ்ட்ரிய லோக்தள் கட்சிக்கு போய்விட்டார்கள்)…
ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன் பாபு, இந்தி நடிகர் அனில்கபூர், ஜெயப்பிரதாவின் தோழிகளான ஸ்ரீபிரியா , ராதிகா, சுமலதா என்று, பல தரப்பட்ட பிரமுகர்களும் வந்திருந்தார்கள்.
தெலுங்கில் புகழ் பெற்று வரும் அனுப் ரூபன்ஸ் என்ற இசையமைப்பாளரின் இசையில், கவிஞர் விவேகாவின் சிறப்பான வரிகளில் உருவான இனிமையான நான்கு பாடல்களும் , நான்கு விதமான முன்னோட்டங்களும் நிகழ்ச்சியின் துவக்கத்தில் திரையிடப்பட்டன .
பாடல்களில் மிக அழகாக கவர்ச்சியாக இருக்கிறார் ஹன்சிகா, அவருக்கு ஈடு கொடுத்து உற்சாகமாக ஆடிப்பாடி நடித்து இருக்கிறார் சித்தார்த் . உதித் நாராயணனை பாட வைத்து தமிழைக் கொலை செய்து இருப்பதை மட்டும் தவிர்த்து இருக்கலாம்.
ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவு மிக சிறப்பாக இருக்கிறது . இயக்குனர் ராஜசேகரின் படமாக்கல் விதம் நன்றாக இருக்கிறது . முன்னோட்டங்களில் விதம் விதமாக கதையையும் காதலையும் சொல்கிறார் இயக்குனர் ராஜசேகர்.
விழாவில் பேசிய அம்மா கிரியேஷன்ஸ் சிவா உள்ளிட்ட பல பிரமுகர்களும் ஜெயப்பிரதாவின் அழகையும் நடிப்புத் திறமையையும் பற்றியே பேச, மேடையில் இருந்த ராதிகா ஸ்ரீபிரியா இருவரும், அப்படிப் பேசுபவர்களை கலாய்த்துக் கொண்டே இருந்தார்கள். பேசியவர்கள் இவர்களையும் அழகானவர்கள் என்று சொன்ன பிறகுதான் விட்டார்கள்.
ஸ்ரீ பிரியா பேசும்போது நாயகன் சித்தார்த்தைப் பார்த்து “வீட்டில் உனக்கு இரண்டு அம்மாக்கள், (ஜெயப்பிரதாவின் கணவரின் முதல் மனைவிக்குப் பிறந்தவர் இந்த சித்தார்த் . அவரை தன் பிள்ளையாக வளர்க்கிறார் ஜெயப்பிரதா ) தவிர ஜெயப்பிரதாவின் தோழிகளான நாங்கள் எல்லோரும் கூட உனக்கு அம்மாதான் .
நாங்கள் அந்த அளவுக்கு அன்று முதல் இன்றுவரை ஒற்றுமையாக நட்பாக பாசமாக பழகுகிறோம் . இப்போதும் படம் இயக்கியும் தயாரித்துக் கொண்டிருக்கிற அனுபவத்தில் சொல்கிறேன். இப்போது உள்ள நடிக நடிகையர் இடையே எங்கள் காலத்தில் இருந்தது போல ஒரு உண்மையான நட்போ பாசமோ இல்லை . எங்க காலம் அற்புதமானது .
அடிப்படையில் தெலுங்கு நடிகையாக இருந்தாலும் தன் மகனை தமிழில்தான் அறிமுகப்படுத்துகிறார் ஜெயப்பிரதா . காரணம் தமிழ்நாடு மீது அவருக்கு உள்ள பாசம். இந்தப் படத்தை தயாரித்து முடிக்க, பல சிரமங்களை அனுபவித்தார் ஜெயப்பிரதா. ஆனால் அதற்கு தமிழர்கள் யாரும் காரணம் இல்லை “ என்று ஹன்சிகாவை குத்தி விட்டுப் போனார் ஸ்ரீபிரியா.
காரணம் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டு , அப்புறம் சித்தார்த் புதுமுகம் என்ற காரணம் சொல்லி ஹன்சிகா கொடுத்த மெகா டார்ச்சர்கள்தான் ஸ்ரீபிரியாவை அப்படிப் பேச வைத்தது என்கிறார்கள்.
அடுத்துப் பேசிய ராதிகா ,“இப்போது நடிக நடிகையர் இடையே ஒற்றுமை இல்லைன்னு ஸ்ரீபிரியா சொன்னார். உண்மைதான். எத்தனையோ பேர் சினிமாவுல நடிக்க ஆசைப்படறாங்க . ஆனா சில பேரால்தான் நடிகர் நடிகையா ஆக முடியுது . அப்படி ஆனவங்க எல்லோரும் ஒற்றுமையா இருக்கணும் . ஆனால் இல்ல .
யாரையாவது அவமானப்படுத்தறதுன்னு சில பேர் துடிக்கிறாங்க “ என்று, நடிகர் சங்கத்தில் ராதிகாவின் கணவர் சரத்குமாருக்கும் விஷாலுக்கும் இடையே நடக்கும் பிரச்னையை மறைமுகமாக இழுத்து , விஷாலை ஒரு குத்து குத்திப் பேச…
உள்ளுக்குள் சற்றே ஜெர்க் ஆன ஸ்ரீ பிரியா, “என்னடா இது .. நாம ஒண்ணு பேசினா , அதுக்கு இந்த ராதிகா இப்படி ஒரு வில்லங்க விரிவாக்கம் கொடுக்குது “ என்பது போலப் பார்த்தார் .
நிகழ்ச்சியின் ஹைலைட் எது தெரியுமா ?
நடிகர் மோகன் பாபுவின் நேர்மையான மனப்பூர்வமான – நன்றி உணர்ச்சி நிரம்பிய பேச்சுதான் . அதில் வெட்டி பஞ்ச டயலாக்குகள் ஏதும் இல்லை .போலிப் பாசாங்கு பசப்பு வார்த்தைகள் எதுவும் இல்லை. ஆனால் நிஜமான ஆண்மையும் வீரமும் நன்றி உணர்ச்சியும் கொட்டிக் கிடந்தது.
“இந்த தமிழ்நாட்டுக்கு – சென்னைக்கு – வரும்போது எல்லாம் என் அம்மாவைப் பாக்கப் போற ஒரு சந்தோஷம் எனக்கு வரும் . ஏன்னா , என்னை உருவாக்கியது இந்த தமிழ்நாடுதான் . 1968 இல் தமிழ் நாட்டில் இதே சென்னையில் பாண்டி பஜாரில் ஒரு ஸ்கூலில் பிடி மாஸ்டரா வேலைக்கு சேர்ந்தேன். அப்படியே சினிமாவுக்குள்ள போனேன் . அசிஸ்டன்ட் டைரக்டரா சில படங்களில் வேலை பார்த்தேன் .
வேற ஊர்ல இப்படி வேற மொழிக்காரனுக்கு அசிஸ்டன்ட் டைரக்டரா வேலை கொடுப்பாங்களா ? இந்த புண்ணிய பூமி கொடுத்தது . அது மட்டும் இல்ல . எங்க இருந்தோ பிழைக்க வந்த எனக்கு இந்த ஊருல கடைக்காரங்க எல்லாம் நம்பி கடனுக்கு பொருள் கொடுத்தாங்க . நிறைய உதவி பண்ணினாங்க .
இதே எங்க ஆந்திராவுல பண்ண மாட்டாங்க . பண்றது இல்ல . இந்த உண்மையை சொல்ல எனக்கு எந்த வித பயமோ தயக்கமோ இல்ல. நான் எவனுக்கும் பயப்பட மாட்டேன் . கடவுளுக்கு மட்டும்தான் பயப்படுவேன்.
என்ன மாதிரி ஒரு அற்புதமான ஊரு இது. இங்கதான் எம் ஜி ஆர் இருந்தார் . இங்கதான் சிவாஜி சார் இருந்தார் . சிவாஜி சார் என்னை பார்க்கும்போது எல்லாம் “டேய்.. சித்தப்பா’’ன்னு கூப்பிடுவார் . எவ்ளோ பெரிய மேதைகள் இருந்த ஊரு இது .
சிவாஜி சார் வீட்டுல அவங்க அண்ணன் , தம்பி எல்லார் குடும்பமும் ஒரே வீட்டில் ஒற்றுமையா இருந்தாங்க” என்றவர் “அப்படி இருக்கறத சொல்றதுக்கு தமிழ்ல வார்த்தை என்ன ?”” என்று கேட்க , ராதிகா முந்திரிக் கொட்டை மாதிரி முந்திக் கொண்டு “ஜாயின்ட் ஃபேமிலி” என்றார்.
‘எம் ஆர் ராதா பெத்த புள்ள என்பது ஒரு பக்கம் இருக்கட்டும் . இத்தனை சீரியல்களில் விடாப்பிடியாக கதாநாயகியாக நடித்தும் கூட்டுக் குடும்பம் என்ற தமிழ் வார்த்தை, ராதிகாவுக்கு தெரியாத கொடுமையை என்ன என்று சொல்வது !
தொடர்ந்து பேசிய மோகன்பாபு “ ஆக, இப்படிப்பட்ட பெருமைகள் நிறைந்த தமிழ் சினிமாவில் ஜெயப்பிரதா , தன் மகனை அறிமுகப்படுத்துவது மிக சரியானது “ என்றார் .
ஜெயப்பிரதா பேசும்போது “நான் என் மகனை தமிழ் சினிமாவில்தான் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். காரணம் எனக்கு நடிப்பு என்றால் என்ன ? எப்படி வசனம் பேச வேண்டும்.? எப்படி முகபாவனை காட்ட வேண்டும்? என்று கற்றுக் கொடுத்த கே.பாலச்சந்தர் சார் இந்த தமிழ் சினிமாவில்தான் இருந்தார் .
இப்போது அவர் உயிரோடு இருந்து இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பேன். எனினும் அவர் ஆன்மா இப்போது இங்கு இருந்து என் மகனை வாழ்த்தும் என்று நம்புகிறேன் . இந்த ஆடியோ கேசட்டையும் அவரது ஆன்மா வாங்கிக் கொள்ளும் என்று நம்புகிறேன் “ என்று கண்கள் பனிக்கப் பேசியது நிஜமான நெகிழ்ச்சி .
கடைசியாக மைக் பிடித்த இந்தி நடிகர் அனில் கபூர்
“ உங்க எல்லாரையும் பார்ப்பதில் சந்தோசம். இப்போ எனக்கு டான்ஸ் ஆட வேண்டும் போல தோணுது “ என்று கூறி எல்லோரையும் அழைக்க,
அனில்கபூர், மோகன் பாபு, ஜெயப்பிரதா, ராதிகா, சித்தார்த், ஹன்சிகா ஆகியோர் நடனம் ஆட, உற்சாகமாய முடிந்தது நிகழ்ச்சி .
உயிரே உயிரே படமும் சித்தார்த்தும் வெல்ல மனப்பூர்வமான வாழ்த்துகள்.