பிரபல நடிகை ஜெயப்ரதா மற்றும் அவர் சார்ந்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் அமர்சிங் ஆகியோர் தயாரிப்பில், சத்யம் படத்தை இயக்கிய A.R.ராஜசேகர் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் “உயிரே உயிரே”.
ஜெயப்பிரதா தனது மகன் சித்து வை இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியுள்ளார். அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார்
அனுப் ரூபன் என்ற அக்கட தேச இசையமைப்பாளர் , விவேகா எழுதியுள்ள பாடல்களுக்கு இசை அமைத்து தமிழில் அறிமுகம் ஆகிறார்
R.D.ராஜசேகர் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.
படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் ராஜசேகர்
“காதல் என்பது காதலிப்பவர்களுக்கு மட்டுமன்றி அவர்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரவேண்டும்.
உறவுகளை புறக்கணித்து அடையும் காதல் வாழ்வு முழுமையற்றது என்பதுதான் இந்தப் படத்தின் கரு.
தெலுங்கில் பெரும் வெற்றிபெற்ற ‘இஷ்க்’ படத்தின் ரீமேக் தான் இந்த “உயிரே உயிரே”. தெலுங்கில் படத்தினைப் பார்த்து விட்டு ஜெயப்பிரதா மேடம் என்னை அழைத்து,
‘ இந்தப் படத்தை தமிழில் கட்டாயமாக நாம் செய்யவேண்டும்’ என்றார். நான் அவரிடம் வைத்த ஒரே வேண்டுகோள், ஹன்சிகா இந்தப் படத்திற்கு நாயகியாக வேண்டும் என்பதே.
படத்தில் வரும், ‘ப்ரியா…. ப்ரியா….’ என்று துவங்கும் பாடலை , கேரளா ஆலப்புழாவில் மாலை நேரத்தில் மட்டும் கிடைக்கக்கூடிய அந்திப் பொழுதில் டுவை லைட் வெளிச்சத்தில் எடுத்தோம்.
ஹன்சிகாவுடைய ஒத்துழைப்பு இல்லாமல் அந்த பாடலை எடுத்து இருக்க முடியாது. சித்துவும்,ஹன்சிகாவும் அருமையாக நடித்துள்ளனர். “என்றார்
வசனகர்த்தா பாலாஜி ” ராஜ சேகரின் அசோசியேட் டைரக்டர் நான் . வசனகர்த்தாவாக எனக்கு இது அறிமுகப்படம். காதல் திருமணங்களைப் பற்றிய ஒரு அருமையான பதிவு இந்தப் படம்.
இந்தப் படத்திற்குப் பிறகு ஹன்சிகாவிற்கு தமிழகத்தில் கோவில் கட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்றார் .
இசைஅமைப்பாளர் அனுப் ரூபன் “தெலுங்கில் 50படங்களுக்கு மேல் பணியாற்றிய எனக்கு தமிழில் முதல் படம் இது. இந்தப் படத்தில் ஜெயப்பிரதா மேடம் ஒரு பாடல் பாடியுள்ளார்.
பாடல் காட்சிகள் மட்டுமின்றி அனைத்துமே மிகச்சிறப்பான முறையில் படமாக்கப்பட்டுள்ளது.” என்றார்
படத்தில் ஜெயப்ரதா பாடிய படலை அவரும் இசை யமைப்பாளர் அனுப் ரூபனும் சேர்ந்து சில வரிகள் பாடிக் காட்டினார்கள்
ஜெயப்ரதா தன் பேச்சில் “இது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு படமாக அமையும்.
எங்களது புரொடக்சன் கம்பெனியில் பல்வேறு மொழிகளில் நாங்கள் படங்கள் தயாரித்துள்ளோம். இந்தப் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு எனது மகன் சித்துவை கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறோம்.
காரணம் நான் தமிழ் நாட்டில் இருந்து வளர்ந்தவள் . என்னால் அதை மறக்க முடியாது .எனவே என்னுடைய குடும்பத்திலிருந்து ஒருவர் இந்தத் துறைக்கு வந்தால்,
அது தமிழில் இருந்து தான் தொடங்கவேண்டும் என்பது என் கனவு. இந்தப் படம் மூலமாக அது நிறைவேறியுள்ளது.
ஹன்சிகாவின் நடிப்பு இந்தப் படத்தின் மூலம் இன்னும் மெருகேறியுள்ளது
‘லெஜண்ட்ரி இயக்குநர் சத்யஜித்ரே’ நடிகைகளிலேயே மிக அழகான பெண் ஜெயப்ரதாதான் என்று கூறி இருக்கிறார் .
ஆனால் இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேகா ஹன்சிகாவை ‘அழகே அழகே’என வர்ணித்து எழுதி இருப்பது எனக்கு எனக்கு சற்று பொறாமையாகத் தானிருந்தது. .” என்றதுதான் வியப்பான விஷயம் .”என்றார் .
போதும் ப்ரதா… பய புள்ளைக யாரும் செங்கலும் சித்தாளுமாக கிளம்பிடப் போகுதுக !