ஜெயக்கொடி பிக்சர்ஸ் சார்பில் ஜே.பி.அமல்ராஜ் தயாரிக்க, பி ஆர் ரவி என்பவர், கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி கதாநாயகனாக நடித்து இயக்கி இருக்கும் படம் உயிர்க்கொடி
கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார் பெங்களூரைச் சேர்ந்த அஞ்சனா நட்சத்திரா . படத்தின் கதை ரொம்பவே சுவாரஸ்யமானது .
தமிழர்கள் என்றாலே பிடிக்காத ஒரு கன்னடப் பெண்ணையும் கன்னடர்களின் தமிழ் விரோதப் போக்கு காரணமாக கன்னடர்கள் என்றாலே முகம் சுளிக்கும் ஒரு தமிழ்ப் பையனையும் ,
ஒரு குறிப்பிட்ட சூழலில் சில ரவுடிகள் கடத்திக் கொண்டு போய் ஓர் அத்துவானப் பொட்டைக் காட்டில் உள்ள ஆழமான குழிக்குள் போட்டு விட்டுப் போய் விடுகிறார்கள்.
இருவருக்கும் இடையில் அப்புறம் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதையம்சம் .
கர்நாடகாவில் ஒரு தமிழ்ப் பெண் தன் குழந்தைக்கு குடிக்கத் தண்ணீர் கேட்டு வாங்கிக் கொடுக்கும்போது , அதை அந்த கன்னட வெறிக் கதாநாயகி தட்டி விட,
பொங்கும் அந்தத் தமிழ்த் தாய் ” குளிக்கிற தண்ணீரையே குடிக்கக் கொடுக்க மறுக்கிற உன்னை, சீக்கிரம் பெருந்தன்மை மிக்க ஒரு தமிழன் குடிக்கிற தண்ணீரால் குளிப்பாட்டுவான் ” என்று,
வாழ்த்துச் சாபம் கொடுத்து சபதமிடும் காட்சி ஒன்றும் படத்தில் வருகிறதாம் .இந்தக் கதையில் ஹீரோவாக நடிக்க யாரும் சம்மதிக்க நிலையில் தானே ஹீரோவாக நடித்துள்ளார் இயக்குனர் ரவி.
ராமநாதபுரம், கமுதி, பெங்களூர், கோவா, பொள்ளாச்சி, அவினாசி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது .
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் படத்தின் சில காட்சிகளை திரையிட்டார்கள்.குழிக்குள் சிக்கிக் கொண்ட நிலையில் நாயகன் நாயகி இருவரும் பேசிக் கொள்கிறார்கள் .
“ஏண்டி தண்ணி கொடுக்காம இப்படி பண்றீங்க ?”
“நீங்க மட்டும் கரண்ட் கொடுக்க காசு வாங்கிகறீங்க இல்ல . நாங்க மட்டும் தண்ணி சும்மா தரணுமா ”
“நாங்க கரண்ட் தரலன்னா நீங்க இருட்டுலதான் இருக்கனும் “
“பரவால்ல . இருட்டுல இருந்துடலாம் . ஆனா நான் தண்ணி தரலன்னா நீங்க விவசாயம் பண்ண முடியாம சாகணும் ” என்கிறாள் அவள் .
இந்த காட்சியை மேலோட்டமாக பார்த்தால் அந்த கர்நாடகாக்காரி சொல்வது சரிதானே என்பது போலவே இருக்கும் . ஆனால் உண்மை அதுவல்ல .
தண்ணீர் என்பது இயற்கை வளம் . அதை தயாரிக்க செலவு இல்லை . ஆனால் மின்சாரம் என்பது இயற்கை வளம் அல்ல . அதை தயாரிக்க செலவு ஆகிறது . அதற்கு கட்டணம் உண்டு .
தவிர தமிழ்நாடு தரும் மின்சாரத்துக்காக கர்நாடகா தமிழ்நாட்டுக்கு காசு தரவில்லை . மத்திய அரசுக்கே காசு தருகிறது .
இன்னொரு காட்சியில் நாயகன் நாயகி வசம் இருந்த தண்ணீரை அவளுக்கு தெரியாமல் குடித்து விடுகிறான் .அவள் ‘ என் தண்ணீரை ஏன்டா திருடுன ?” ” என்று கேட்க,
அவனோ ” தேவைன்னு கேட்கும் போது கொடுத்தா திருட்டு இருக்காதுல்ல ” என்று தத்துவம் பேசுகிறான் . அதன் மூலம் தான் செய்தது திருட்டு என்று ஒத்துக் கொள்கிறான்
கடவுளே ! கடவுளே! காவிரி தண்ணீர் நாம எடுக்குற பிச்சை இல்லீங்க . உரிமை .
சுப்ரீம் கோர்ட்டுல மாதிரியே சினிமாவிலயும் தமிழ்நாடு சைடு ஆர்கியூமென்ட், இவ்வளவு கேவலமா இருந்தா எப்படி ?
நிகழ்ச்சியில் பேசிய அபிராமி ராமநாதன்
” காட்சி நன்றாக இருக்கிறது . வித்தியாசமான படம் என்பது தெரிகிறது . ஆனால் இது போன்ற கதைப் படங்களில் ஒரு காட்சியை மட்டுமே வைத்து,
படத்தின் வெற்றியை தீர்மானிக்க முடியாது . நன்றாக கதை திரைக்கதை அமைத்து இருந்தால் ஓடும் ” என்றார் .
இயக்குனர் –ஹீரோ ரவி பேசும்போது ” படத்தின் நடன இயக்குனர் ட்ரீம்ஸ் காதர் மூலம் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது . நான் தயாரிப்பாளர் அமல்ராஜிடம் முழுக் கதையையும் சொல்லவில்லை .
ஒரு காட்சிதான் சொன்னேன் . உடனே ஐந்து லட்ச ரூபாய் பணம் உள்ள அவரது ஏடிஎம் கார்டை என் பாக்கெட்டில் வைத்து பட வேலைகளை ஆரம்பிக்கச் சொன்னார் .
கதாநாயகி கேரக்டருக்கு கன்னடப் பெண்ணே இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணி அப்படியே அஞ்சனா நக்ஷத்திராவை ஒப்பந்தம் செய்தேன்
படத்தின் முக்கால் வாசி அந்தக் குழிக்குள்தான். எல்லோருக்குமே ரொம்ப கஷ்டம் . அதுவும் கேமரா மேன் கவிநாத் ஒவ்வொரு ஷாட்டுக்கும் லென்ஸ் மாற்ற மேலே ஏறி இறங்கி ரொம்ப கஷ்டப்பட்டார் . ” என்றார் .
பி ஆர் ஓ யூனியன் முன்னாள் செயலாளர் பெரு.துளசி பழனிவேல் பேசும்போது ”
மாநிலம் , இனம் . மொழி போன்ற எல்லைகளை விட மனிதமே பெரிது என்று சொல்லும் இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகள் ” என்றார்.
பி ஆர் ஓ யூனியன் பொருளாளரும் தயாரிப்பாளருமான விஜய முரளி பேசும் போது, ” சிறிய பட்ஜெட்டில் மிக எளிமையாக ஒரு நல்ல கதையை வைத்து,
இந்தப் படத்தை எடுத்துள்ளனர் . வாழ்த்துகள் ” என்றார் .
“படம் மிக வித்தியாசமான கதையை கொண்டு இருப்பதால் , இதை சீரழிக்க சென்சார் போர்டு காத்திருக்கும் . எனவே அனுபவம் மிக்க தயாரிப்பாளர்களின் ஆலோசனை பெற்று,
சென்சாருக்குப் போங்க ”
என்றார் இயக்குனர் பவித்ரன் .
படத்தின் தயாரிப்பாளர் அமல்ராஜ் தனது பேச்சில் ” ராமநாதபுரம் மாவட்டம் கமுதி விளக்கு என்ற ஊரில் , பத்து கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஆள் நடமாட்டமே இல்லாத பகுதியில் ,
கடினாமான பாறைத் தரை கொண்ட இடத்தில் , மதுரையில் இருந்து போகலைன் இயந்திரத்தை கொண்டு வரப்பட்டு ,
ஆறு அடி அகலம், இருபது அடி ஆழத்துக்கு குழி தோண்டி, ஐமபது தண்ணீர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி கிளைமாக்ஸ் காட்சி எடுத்தோம்” என்றார்.