Team A வென்ச்சர்ஸ் தயாரிப்பில் வரலக்ஷ்மி சரத் குமார், பாவனா, எஸ்தர் அணில், ஆடு களம் நரேன் நடிப்பில் அமுதவாணன் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம்.
பேப்பர் போடுகிற தொழில் செய்து, இரண்டு மகள்களை (பாவனா, எஸ்தர் அனில்) தாயில்லாத நிலையில் வளர்க்கிறார் ஒரு தகப்பன் ( ஆடுகளம் நரேன்).
இரு சக்கர வாகனத்தில் இரவில் வீட்டுக்கு வரும் பெரிய மகளை சில இளைஞர்கள் வழியில் மறித்து கற்பழிக்கிறார்கள் . மகளைத் தேடிப் போன தகப்பன் போலீசுக்குப் போக, சம்பவ இடத்தில் எரிந்து போன பெண்ணின் சடலம்.
விசாரணை செய்யும் போலீஸ் சில இளைஞர்களைப் பிடித்து அந்த இடத்திலேயே சுட்டுக் கொள்கிறது . எங்கள் பிள்ளைகள் அப்படிப் பட்டவர்கள் இல்லை என்று உறுதியாகக் கூறும் – அவர்களின் ஏழைப் பெற்றோர்கள். போலீஸ் , பிறகு மகளிர் உரிமை ஆணையம் போகிறார்கள் .
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஏற்பட்ட பிரச்னையால் மக்களின் வெறுப்புக்கு ஆளாகி துறை மாற்றம் செய்யப்பட்ட அதிகாரியிடம் (வரலக்ஷ்மி) வழக்கு போகிறது . நடந்தது என்ன என்பதே படம்.

வீட்டை விட்டு வெளியே போன பெண் பிள்ளை காணமல் போனால் அது எப்படிப்பட்ட பதட்டம் மற்றும் பயம் என்பதை காட்சி விவரணைகள் மற்றும் ஆடுகளம் நரேன் , எஸ்தர் அனில், பாவனா இவர்களின் நடிப்பின் மூலம் சிறப்பாக உணர வைக்கிறார் இயக்குனர் . மகளை அறிவான பெண்ணாகக் காண்பித்தது, அவளது சிந்தனைகள் என்று படத்தின் ஆரம்பம் மற்றும் நடுவில் சொல்லும் வசனங்கள் சிறப்பு.
மற்றபடி யூகிக்க முடிந்த காட்சிகள், கதைப் போக்கு , வரலக்ஷ்மி விநாயக சதுர்த்தி ஊர்வலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டார் என்பது போன்ற கதைக்கு தேவையற்ற காட்சிகள்,சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லும் காட்சிகள், ஆடியன்சுக்கு முன்பே தெரிந்த கதையை காட்சியாகச் சொல்லும்போது எவ்வளவு சுருக்கமாக சொல்ல வேண்டும் என்ற தெளிவின்மை , இவை எல்லாம் படத்தின் குறைபாடுகள் .
சில பல இடங்களில் வசனத்தில் போதாமை மற்றும் பக்குவமின்மை
விபச்சாரத்தை சட்ட பூர்வமாக அங்கீகரித்தால் கற்பழிப்புகள் நிகழாது என்ற ஒரு மேம்போக்கான – புரிதலற்ற கருத்தில் – படம் முடிகிறது
எனினும் இப்போதும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைகள் , அதன் பின்னால் உள்ள சாதிகள், சிக்கும் அப்பாவிகள், தப்பிக்கும் அதிகார மையம் போன்ற விசயங்களை பேசிய விதத்தில் கவனிக்க வைக்கிறது படம்.